கட்டுரைகள்

மனித நேயமும் ஏற்பதில் புறக்கணிப்பும்!… சங்கர சுப்பிரமணியன்.

மனித நேயம் ஒரு நற்பண்பு. ஒருவருடன் அன்பாகப் பழகுவது ஒருவர்பால் இரக்கம் காட்டுவது ஒருவர் துன்புற்று இருக்கும்போது உதவுவது ஆபத்துக் காலங்களில் ஆதரவு காட்டுவது என்று மனித நேயத்துக்கு எத்தனையோ பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே போகலாம். மனித நேயத்திற்கு அப்பாற் பட்டும் நேயங்கள் இருக்கின்றன.

மனித நேயத்திற்கு அப்பாற்பட்டு மற்ற உயிரினங்கள் மீதும் அன்பு காட்டும் தலைசிறந்த பண்பும் இருக்கவே செய்கின்றன. இப்பண்புள்ளவர்கள் ஓர் ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்யமாட்டார்கள். ஈ எறும்புகளுக்கு கூட தீங்கு செய்யாதவர்கள் எப்படி மற்ற பிராணிகளுக்கு தீங்கிழைப்பார்கள்? எனவே இப்படிப்பட்டவர்கள் புலால் உண்ணமாட்டார்கள்.

திருவள்ளுவர் புலால் மறுத்தல் எனும் அதிகாரத்தில் ஓர் அற்புதமான குறளை சொல்லியிருப்பார்.

“தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்”

என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

தன் சதையை பெருக்குவதற்கு இன்னொரு உயிரின் தசையை தின்கின்றவன் எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்? என்பதே இதன் பொருள். இதற்கும் மேலாக, வாடிய பயிரைக் காண வாடினேன் என்கிறார் வள்ளலார்.

சரி, இனி மனிதநேயத்திற்கு வருகிறேன். மனித நேயம் அருகிவிட்ட இக்காலத்தில் கல்லுக்குள் ஈரமாக எங்கோதான் மனித நேயத்தைக் காணமுடிகிறது. அதையும் புறக்கணிக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது? சமீபத்தில் வணிகவளாகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதில் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் சில பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் வெள்ளைக்கார மூதாட்டி ஒருவர் சக்கரநாற்காலியில் இருந்தபடியே பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் தடாரென்ற ஒரு சப்தம். பொருட்களை அடுக்கைகளிலிருந்து எடுக்கும்போது அம்மூதாட்டி
நிலைதடுமாறி சக்கர நாற்காலியிலிருந்து கீழே விழுந்து விட்டாள்.

அதைப் பார்த்த அருகில் நின்றிருந்த நடுத்தர வயது வெள்ளைக்காரப் பெண்மணி ஓடோடிச்சென்று விழுந்து கிடந்த மூதாட்டியை தூக்கி உதவ முற்பட்டாள். உடனே அந்த மூதாட்டி தொடாதே, தொடாதே என்று அப்பெண்மணியைத் தடுத்தாள். அதற்கு உதவச்சென்ற பெண்மணி நான் நலமாகவே இருக்கிறேன். எனக்கு கொரோனா தொற்று எதுவுமே கிடையாது என்று கூறியபடியே உதவ முயன்றாள்.

ஆனால் மூதாட்டியோ அனுமதிக்கவில்லை மாறாக அந்த அங்காடி மேற்பார்வையாளரை அழைக்கும்படி சொன்னாள். அந்த நேரத்தில் வேறு ஒருவராய் இருந்தால் நமக்கேன் வம்பு யாராவது மேற்பார்வையாளரை அழைக்கட்டும் என்று சென்றிருக்கலாம். அப்பெண்மணியோ அப்படிச் செய்யாமல் மேற்பார்வையாளரை அழைத்து வந்தாள். பின் மேற்பார்வையாளர் சில பெண் ஊழியர்களை அழைக்க ஒருவழியாக மூதாட்டியை சக்கர நாற்காலியில் உட்காரவைத்தனர். அதன் பின் அந்த நடுத்தரவயது பெண்மணி மூதாட்டியப் பார்த்து இப்போது பரவாயில்லையா என்று கேட்க மூதாட்டியும் பரவாயில்லை என்பதாக தலையாட்டிய பின்னரே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

இதை எல்லாம் சமூக இடைவெளியுடன் எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
என் மனதில் ஒரு எண்ண ஓட்டம். கொரோனாவினால்தான் இப்படியா? அல்ல அந்த மூதாட்டியே அப்படியா? என்பதே அது. அதற்காக மனித நேயத்துடன் உதவ வருபவர்களை எப்படி புறக்கணிக்க முடியும்? ஒருவர் புறக்கணித்த பின்னும் தனக்கெதற்கு இந்த வேலை என்று சென்று விடாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்த அப்பெண்மணி எத்தகைய பெண்மணி? என்றெல்லாம் நினைக்க என்னதான் சூழ்நிலைகள் மாறினாலும் நற்பண்பாளர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் மனித நேயம் அழியாது என ஆறுதலடைந்தேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button