கட்டுரைகள்

விஞ்ஞானமும் அஞ்ஞானமும்!… சங்கர சுப்பிரமணியன்.

தொன்றுதொட்டு மனிதரிடம் ஒரு நிலயற்ற தன்மை இருந்து கொண்டேதான் உள்ளது. இதை
செய்தால் சரியாய் இருக்குமா? அல்ல அதைச்செய்தால் சரியாய் இருக்குமா? என்பதே அது. ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும்போது அறிவுபூர்வமாக முயற்சிகளைச் செய்து அதிலிருந்து விடுபட முயல்வது இல்லையென்றால் அற்புதம் நிகழும் என்று நம்புவது.

இடியையும் மழையையும் கண்டு அஞ்சி குகைகளில் பதுங்கிய
கற்கால மனிதனுக்கும் இடிக்கும் மழைக்கும் நடுவிலே வானூர்தியில் பயணிக்கும் தற்கால மனிதனுக்கும் இடையே
உள்ள வளர்ச்சியை உணர்ந்து மனிதன் முன்னோக்கி பயணிக்கவேண்டும்.

அதை விடுத்து அஞ்ஞானத்தில் இருந்து வெளிவரமாட்டேன் நான் பின்னோக்கித்தான் பயணிப்பேன் என்றால் நாம் விஞ்ஞான வளர்ச்சிகண்டதன் பொருள்தான் என்ன? புரியவில்லை.

உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். விபத்தொன்று நடக்கிறது. அதில் மிகவும் மோசமான நிலையில் ஒருவர் உயிருக்கு போராடுகிறார் என்றால் முதலில் நாம் என்ன செய்வோம்? முதலில் மருத்துவ மனைக்கு எடுத்து செல்வோமா? அல்லது ஆலயத்திற்கு அழைத்துச் செல்வோமா?

மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்வோம். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிகிச்சை நடைபெற்று காப்பாற்றப்படுவார்.

ஒருவேளை அந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காப்பாற்ற முடியாத அளவிற்கு இருந்தால் அந்த அறுவை சிகிச்சை நிபுணர் எங்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை செய்துள்ளோம். பாதிப்பு அதிகமாயுள்ளது என்பார். ஆனால் அற்புதம் நிகழும் என்று உறுதியளிக்க மாட்டார். அற்புதம் நிகழ வேண்டிக் கொள்ளுங்கள் என்று நமக்கு ஆறுதலுக்காகச் சொல்வார். அவ்வளவே. இந்த அறிவார்ந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

கற்றதனாலாய பயனென்கொல்? படித்ததனால் பெற்ற அறிவால் என்ன பெயன்? இவ்விடத்தில்
வாலறிவன் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர், நற்றாள் தொழாஅர் எனின் அதாவது அவர் செய்த நல்ல முயற்சியை அறியாமல் போனால் எப்படி? என்பதாம்.

படிக்காத பாமரமக்களுக்கும் படித்தவர்களுக்கும் வித்தியாசம் நிறையவே உள்ளது. அதுதான் கல்வியின் சிறப்பு. அத்தகைய சிறப்பை உணர்ந்தவர்கள்
கற்ற கல்வியின் வழிகாட்டலை திடமாகவும்  அறிவுபூர்வமாகவும்
ஏற்பார்கள்.

உதாரணத்துக்கு மழைவராது பொய்த்தால் அதற்கு காரணம் மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதுதான் என்பதை அறிவுபூர்வமாக அறிவோம். அதற்கு எண்ண செய்யவேண்டும? நிறைய மரக்கன்றுகளை நடவேண்டும். மரங்களை கணக்கின்றி வெட்டி காடுகளை அழிப்பதை தவிர்க்க வேண்டும்.

நமக்கு யாரோடாவது விரோதம் ஏற்பட்டால் அவர்களுடன் மேலும் விரோதத்தை வளர்க்காமல் அவர்களிடமிருந்து விலகிவிட வேண்டும். அல்லது அந்த விரோதத்துக்குண்டான காரணம் நம்மிடமே இருந்தால் நம்மை நாமே திருத்திக்கொண்டு தீர்வு காணவேண்டும். அதைச் செய்யாமல் சத்ரு சம்ஹார யாகம் என்று ஒன்றைச்
செய்தால் அது விரோதமாக நினைப்பவருக்கு ஒரு சந்தர்ப்பம்கூட  கொடுக்காமல் அவரை அழித்தொழிக்க வேண்டும் என்ற நேர்மையற்ற செயலாகும்.

அப்படியொரு யாகத்தின் மூலம் ஒருவரை அழிக்க முடியுமென்றால் நடக்கிறதோ இல்லையோ மந்திரவாதிகளை வைத்து ஒருவரை அழிக்க செய்வினை, சூனியமென்று பாமரமக்கள் செய்கிறார்களே அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு.

அடுத்ததாக ஒரு தொற்றுநோய் வேகமாக பரவிவருகிறதென்றால் அதைத் தடுக்க மருந்தொன்றை கண்டுபிடிக்க வேண்டும். மருந்தை கண்டுபிடிக்கும்வரை அதைப்பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யாமல் மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பதுபோல் ஏதாவது செய்ய இயலுமா என்று நினைக்கக்கூடாது.

இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்க்கும்போது அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு அறிவுபூர்வமான விஞ்ஞானத்தை துணைகொண்டால் ஆக்கபூர்வமாக எல்லாமே நம் வயப்படும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button