ஒரு மேகலாவின் கதை!… ( சிறுகதை ) — தேவகி கருணாகரன்.

வேலை முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது மணி மூன்றாகிக் கொண்டிருந்தது. எனது டொயாட்டா வண்டியில் ஏறிக் கொண்டேன். மதியத்திலிருந்து சுரீர் என எரித்த வெய்யிலில் நிறுத்தியிருந்ததால் வண்டி நல்லா சூடேறியிருந்தது. வண்டியின் கண்ணாடிகளைத் தாழ்த்தி விட்டு, கையடக்கி தொலைபேசியில் என் பன்னிரெண்டு வயது மகன் பிரதீபனை அழைத்து, “என்னடா குட்டி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வெளிக்கிட்டிட்டாயா?” எனக் கேட்டேன்.
”ஓம், ஓம் அம்மா. இப்பதான் பஸ்டாண்டுக்குப் போய்க் கொண்டிருக்றேன்.” பதிலளித்தான் பிரதீபன்.
”சரி குட்டி, பம்பலப்பிட்டி பஸ் ஸ்டாண்டிலே இறங்கி நில், நான் வந்து உன்னை ஏத்திக் கொண்டு போறேன்,” என்றேன்.
”சரி அம்மா. ஐ லவ் யு,” என பதில் வந்தது. அவன் பாசம் மனதுக்கு சுகமாக இருந்தது.
என் மத்தியான உணவு வேளை பிரதீபனுக்காக வாங்கிய மட்டன் றோல்சை எடுத்து தட்டில் வைக்க, அவனும் முகம் கால் கழுவிக் கொண்டு சமையல் அறை பென்ஞ் மேல் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினான். வழக்கம் போல் கல கலப்பாகப் பள்ளிக்கூடப் படிப்பைப் பற்றியோ விளையாட்டைப் பற்றியோ கதைக்காமல் ஏதோ யோசனையில் இருந்தான் .
”என்னடா கனக்க யோசிக்கிறாய்? என்ன விசயம்?”
”அம்மா அடுத்த கிழமை, பெற்றோர் ஆசிரியர் சந்திப்புதானே?”
’ஓம். அதற்கென்ன?
”பாலன், வசி அவையிண்ட அப்பா அம்மா இரண்டு பேரும் வருவினமாம். எனக்கு நீங்க மட்டும் தானே வருவீங்கள். அம்மா, எனக்கு அப்பாவிண்ட போட்டோ பாக்கனும் போலயிருக்கு. பிலீஸ் அம்மா, ஒரு சின்ன போட்……… டோ கூடயில்லையா?” குரலில் சிறு நடுக்கம், கண்களிலும் நீர் நிரம்பி விட்டது.
எழுந்து போய் அவனை அணைத்து, அவன் தலையை வருடியபடி, “உனக்கு எத்தனை தரம் சொல்லுறது, ஆமிக்காரன்கள் எங்கட மானிப்பாய் ஊருக்குள்ளே புகுந்து, பெண்கள் குழந்தைகள் என்டு பாராமல் அடித்து, சுட்டுத்தள்ளி, வீடுகளை இடித்து நொருக்கி நெருப்பு வைத்ததில் எங்கட சொந்தங்கள் எல்லாருமே இறந்து போட்டினம். அப்ப எப்படி போட்டோக்கள் தப்பியிருக்கும்,” என எப்பொழுதும் போல் பதிலளித்தேன்
”அப்ப சரி அம்மா, அப்பா எப்படியிருப்பார்? உயரமாவா, குள்ளமாவா, என்னைப் போல சுருட்டை முடியா, பொதுநிறமா?”
நான் திக்குமுக்காடிப் போனேன் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
”சொல்லம்மா!” என என்னைப் பிடித்து உலுக்கினான்.
“ஒரு ஐந்தரை அடிமட்டில் இருப்பார், பொதுநிறம், முடி உன்னைப் போல சுருட்டைதான்,” எனக்கு மனதில் உடனே தோன்றியதைச் சொன்னேன்.
”அட! அப்ப அப்பா என்னைப்போல பொது நிறமும், சுருட்டை முடியுமா?”
”ஓமடா கொஞ்சம் கொஞ்சம் உன்னைப் போல தான்,” என்றேன் அவனைத் அணைத்தபடி.
அன்று இரவு வழக்கம் போல பிரதீபனின் அறைக்குச் சென்று படுக்கையில் இருந்த அவனை, உச்சிமோர்ந்து முத்தமிட்டு போர்வையால் போர்த்திவிட்டேன்.
’’அச்சா அம்மா! என் செல்ல அம்மா, குட் நைட்,” என சொன்னபடி கட்டிலில் குடங்கிப் படுத்துக் கொண்டான்.
நானும் என் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டேன். ஆனாலும் நித்திரை வரவில்லை. பிரதீபன் தன் அப்பாவைப் பற்றி ஆவலோடு கேட்ட கேள்விகள் என் சிந்தனைப் பொறியைத் தட்டி எழுப்ப, நான் கடந்து வந்த நெருப்பாறு கண் முன் தகித்துக் கொண்டு ஓடியது.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் எங்கள் உள் நாட்டு போர்ச் சூழலில் தான். ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஐந்தில், உயிருக்குப் பயந்து குடும்பமாகத் தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்து, சொல்ல முடியாத இன்னல்களுக்கு உள்ளாகி, உயிர் தப்பி, திரும்ப எங்கள் மானிப்பாய் ஊருக்கே வந்து சேர்ந்தோம். எங்கள் அதிஷ்டம் எங்கள் வீடு, சுவர்களில் சல்லடை போல் துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்ட துவாரங்களுடன் தப்பி நின்றது, அப்பா அரசாங்க உத்தியோகத்தர், எனவே திரும்ப வேலையும் கிடைத்தது. ஆகையால் பணப் பிரச்சினை இருக்கவில்லை. ஏனோ தானோ என எங்கள் வாழ்க்கை ஓடியது. இது தான் எங்கள் நிதர்சனமான வாழ்க்கை என நினைத்தேன்
எந்த இலக்குமில்லாமல் எல்லா இடமும் விழுந்து வெடிக்கும் எறிகணைகள், துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. வானத்தில் கிபீர் விமானம் அல்லது வானூர்தி தாழ்ந்து பறக்கவும் ஓடிப் போய் பங்கர்களில் ஒளிவதும் எங்கள் வாழ்க்கையில் சாதாரணமாகப் போய்விட்ட சம்பவங்கள்.
அப்பா, அம்மா, என் அண்ணன், புவனன் எல்லோருடைய செல்லமும் நான் தான். அது வேணுமா மேகலா? இது வேணுமா மேகலா? என பாசத்தோடு கேட்டுக் கேட்டுச் செய்தனர். நான் உடுவில் மகளிர் பள்ளியிலும், அண்ணா யாழ்ப்பாணக் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தோம்.
என் பள்ளிக்கூட மாணவர் தேர்ச்சி அறிக்கையைப் பார்த்து விட்டு அப்பா, “மேகலா, நீ கெட்டிக்காரி. ஏன் இந்தப் பேச்சுப் போட்டி பட்டி மன்றங்களில் பங்குப்பற்றாமல் இருக்கிறாய்? உன்ரை அறிவுக்கு எத்தனை வெற்றிக் கோப்பைகள் எடுத்திருக்கலாம்,” அப்பா வருத்தப்படுவார்.
”அவளுக்கு எல்லாத்துக்கும் வெட்கம். பெரிய படிப்புப் படிக்க வேணுமாம், ஆனா இப்படிப் பயந்தாங் கொள்ளியாக வாய், திறக்காமல் இருந்தா எப்படி?” அம்மாவும் ஒத்துப் பாடுவா.
நான் என்ன செய்வேன் அது என் சுபாவம் போலும். எந்த வம்புக்கும் போகமாட்டேன். வம்பு வந்தாலும் விலகிப் போயிடுவேன்.
நாமுண்டு நம்பாடு உண்டு என காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் எம் தமிழ் மக்கள் மேல் விழுந்திருந்த சாபக்கேடு எங்கள் குடும்பத்தை மட்டும் விட்டு வைக்குமா? ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி எட்டில், மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலடியில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் கூடி விட்டதாக இராணுவத்திற்கு ஐமிச்சம் வந்துவிட்டது. வீடு வீடாக புகுந்து இளந்தாரிப் பெடியன்களை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். என் அண்ணன் புவனனையும், புலன் விசாரணை எனச் சொல்லிப் பிடித்துக் கொண்டு போனார்கள். அப்பா யார் யாரை எல்லாம் போய் பார்தார், நித்திரை இல்லாமல் அலைந்தார் எந்தப் பலனுமில்லை. இன்று வரைக்கும் அண்ணன் என்ன ஆனார் எனத் தெரியாது. தன் ஒரே மகன் காணாமல் போனதும், அந்த மனக்கவலையிலே அம்மா படுக்கையில் விழுந்துவிட்டா. அப்பா காசு பாராமல் எல்லா வைத்தியமும் செய்தார். ஆனால் அம்மா அதே நிலையிலே தான் இருந்தா.
அண்ணன் காணாமல் போனபின் அப்பாவுக்கு எங்களைத் தனியே வீட்டில் விட்டு வேலைக்குப் போக மனமில்லை. ஆனால் போகாமல் எப்படி? வீட்டிலே இருந்த மூன்று ஜீவன்களின் வயிற்றுப்பாட்டைக் கவனிக்க வேணுமே.
வருடங்கள் இரண்டு ஓடின. உயர்தரப் பள்ளிப் பரிட்சையிலே நல்ல மதிப் எண் எடுத்து டாக்டராகவோ என்ஜினியராகவோ வர வேணும் என்ற ஒரே நோக்குடன் கவனம் எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் கடற் படையினரும், காவற்துறைத் தனிப் பிரிவும் விசாரணை என்ற பெயரிலே வீட்டுக்கு வீடு சென்று சோதனை இட்டனர். பெண்கள், சிறுவர், சிறுமியரைக் கூட விட்டு வைக்காமல், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களா? அவர்களுக்கு உதவி செய்கிறீர்களா எனக் கேட்டு இரக்கமில்லாமல் அடித்துத் துன்புறுத்தினார்கள். எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்தனர். ஒரு பயந்தாங்கொள்ளி, இளம்பெண் என்னால் எப்படி துப்பாக்கி ஏந்திய முரட்டு
நேவிக்காரன்களை எதிர்த்து நிற்க முடியவில்லை, தப்பி ஓடவும் முடியவில்லை, மற்றப் பெண்களைப் போல் என்னையும் கைது செய்து பலவந்தமாக இழுத்துக் கொண்டு போக, படுக்கையிலிருந்த அம்மா, ”என்மகளை விட்டிடுங்கோ!” எனக் கதறி கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடி வரவும் அவவை இரக்கமில்லாமல் தள்ளிவிட்டனர். அன்று தலை அடிபட விழுந்த அம்மா எழுந்திருக்கவேயில்லை.
எங்களை மூர்க்கமாக இழுத்துக்கொண்டு போய் வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். பயங்கரவாத சட்டத்தின் கீழும், அவசரகால ஒழுங்குமுறையின் கீழும் கைது செய்து அடைத்து வைத்த எங்களை விசாரிப்பு என்னும் பெயரில் இரகக்மில்லாமல், சித்திரவதைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கினர். அப்பா தன் வேலையை மறந்து உணவை மறந்து, கந்தோர் கட்டிட வாசல்களிலே காத்திருந்தார். அரசியல்வாதிகளைப் போய்ச்சந்தித்தார், கெஞ்சினார் மன்றாடினார் எந்தப் பலனுமில்லை.
பதினேழு வயதில், கைபடாத அரும்பு மலராய் இருந்த என்னை வீட்டிலிருந்து பறித்துக் கொண்டு போய் அந்த மூர்க்கர்கள் ஒவ்வொருவராக கற்பழித்த போது, என் மனம் பட்ட பாடும் வேதனையும், சொல்லில் அடங்காது. ஐயோ கடவுளே என்னைக் காப்பாற்று என கதறினேன், அவர்களிடம் கெஞ்சினேன், மன்றாடினேன் அவமானத்தால் மனதுக்குள் கூனிக் குறுகிப்போனேன். பாறையிலும் கூட ஈரம் கசியும் ஆனால் மனசாட்சியே இல்லாத இவர்கள் மனம் இளகவேயில்லை. இரண்டாம் நாள் மூன்றாம் நாளும் அந்தக் காடையர்கள் எங்களைத் தொடர்ந்து குரூரமாக பலாத்காரத்திற்கு உள்ளாக்கினர், என் மனமோ மரத்துப் போச்சு. வெட்கம் சூடு சுரணை எல்லாம் இழந்தேன். இவர்களால் என் உடலைத்தான் சீரழிக்கமுடியும், என் மனதை தீண்டவே முடியாது என்ற மன வைராக்கியத்தோடு அவர்களிடம் கெஞ்சுவதையும், அழுவதையும் விட்டு உணர்ச்சிகள் இல்லாத ஜடமாகக் கிடந்தேன்.
நாலைந்து நாள் கழித்து, என் மேல் எந்தக் குற்றச்சாட்டும் போட முடியாததால், விடுவித்தார்கள். தினமும் விசாரணைக் கட்டிட வாசலில் காத்திருந்த அப்பாவின் கையில் கிழிந்த நாராகத் தூக்கி எறியப்பட்டேன். அரை நிர்வாணமாக அலங்கோலமாக இருந்த என்னை அப்பா தன் சால்வையால் போர்த்தி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தார். வீட்டில் அம்மாவின் மாலையிட்ட படம் என்னை வரவேற்றது. அம்மாவின் படத்துக்கு முன் நிலத்தில் விழுந்து, கதறிக் கதறி அழுதேன். என் அம்மாவின் இழப்பால் மனதிலே ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தேன். பக்கத்தில் வந்து அமர்ந்த அப்பா, என் நிலையைப் பார்த்து எனக்கு நடந்த அநீதியை நினைத்து உள்ளத்தில் எழுந்த குமுறல் சத்தமாக வெளியே பீறிட்டுக் கொண்டு வரவும் வேட்டித்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு கேவி கேவி அழுதார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அழுகை கேட்டு, ’மேகலா வீட்டே வந்திட்டாவோ, என்ன நடந்தது,’ என அறிய வந்திடுவார்கள் என்ற பயத்தினாலோ என்னவோ? அழுகைச் சத்தம் வெளிவரவில்லை; கண்ணீர் மட்டும் தாரை தாரையாக வழிந்தது.
அழுது அழுது ஓய்ந்தபின் நான் கிணற்றடிக்குச் சென்று வாளியால் தண்ணீரை அள்ளி அள்ளித் தலையில் ஊற்றினேன். குளிர்ந்த நீர் என் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணிக்குமா? இல்லை அது தணியாது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை அது தணியவே தணியாது. அன்று வீடு வந்து சேர்ந்த நான் பழைய மேகலா இல்லை. எதிர்த்துப் பேசாத பிள்ளைப் பூச்சி, எதற்கும் கூச்சப்படும் மேகலா, இறந்து விட்டாள். ஆயினும் என் மனதில் ஒரு வித பதற்றமும், குழப்பமும், கலக்கமும் இருக்கத் தான் செய்தது. இரவுகளில் பயங்கர, அச்சுறுத்தும் கனவுகள் என்னை வாட்டியது. இதை எல்லாம் தாண்டி ஒரு குற்றமும் செய்யாத எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்னும் உற்வேகம் என்னை செயல் பட வைத்தது.
சில நாட்களுக்கு பின் ஒரு நாள், பொழுது சாயந்த நேரம் வெளியே வந்து, பின்முற்றத்தில் இருந்த கிணத்துக் கட்டு மேல் அமர்ந்து கொண்டேன். நல்ல நிலவு. தூரத்திலே வீடுகளில் மினுக் மினுக்கென்று மங்கலான வெளிச்சம். ஊரடங்கு அமுலில் இருந்த நேரம். என்னைப் பின் தொடர்ந்து வந்த அப்பா துணி தோய்க்கும் கல்லின் மேல் அமர்ந்து,
“பிள்ளை! நீ உயிரோட திரும்பி வந்திட்டாய், அதுபோதும். அம்மாவுமில்லை, அண்ணனுமில்லை. மிஞ்சி இருப்பது நாங்க இரண்டு பேரும் தான். உனக்கு நடந்ததைப்
ஒருத்தரிட்டையும் சொல்லிடாதே. ஒரு ஆறு மாசத்திற்கு பள்ளிக்கும் போகாதே. நம்ம சனம் நடந்ததை மறந்திடுவினம். அப்ப பார்த்துக் கொள்ளலாம். நீயும் அதைத் தானே விரும்புவாய்?” மெல்லிய குரலில் சொன்னார்.
நான் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு. ”இல்லை அப்பா. எனக்கு நடந்த அநியாயத்திற்கு ஞாயம் வேணும். அந்தக் காட்டுமிராண்டிகளுக்குத் தண்டனை வாங்கித்தராமல் நான் விடப் போறதில்லை. அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்போறேன்.!” நான் மனக் கொந்தளிப்போடும், ஆத்திரத்தோடும், நடுக்கத்தோடும் கீச்சிட்டேன். ’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ அது எவ்வளவு உண்மை என்பதை அப்போது உணர்ந்தேன்
”வேண்டாம் பிள்ளை, பேப்பரிலை எல்லாம் உண்ட படத்தைப் போட்டு, உனக்கு நடந்ததைப்பற்றி அசிங்கம் அசிங்கமா எழுதுவாங்கள். எங்களாலே வெளியிலே தலை காட்டமுடியாது. சனமெல்லாம் பாத்துச் சிரிக்கும். உண்ட எதிர்காலமே பாழாப் போகும்.”
”அப்பா…மற்றவை என்ன சொல்லுவினம் எண்டதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. புலனாய்வுப் பிரிவு என்னைப் போல இளம் பெண்களை நாசம் செய்வினம், அவங்களிண்ட பயமுறுத்தலுக்குப் பயந்தும், சனங்கள் என்ன பேசுவினம் எண்டு வெட்கப்பட்டு நாங்கள் அவர்கள் மேலை வழக்குப் போடாமல் அடங்கிக் கிடந்தால் எமக்கு ஞாயம் கிடையாது. அப்பா ப்ளீஸ்! நீங்கள் தான் இதற்கு உதவி செய்ய வேணும்.” அவர் கையைப் பிடித்துக் கொண்டு மன்றாடினேன். அழுது அழுது கண்ணீரே வற்றியிருந்த என் விழிகளில் லேசாக ஈரம் கசிந்தது.
துண்டால் தன் கண்களைத் துடைத்தபடி, ”சரி…….மேகலா ஞாயம் கிடைக்கு……மோ என்னவோ, நான் உனக்கு எல்லாத்திலேயும் துணையாயிருப்பேன்,” தயக்கத்துடன் பதிலளித்தார்.
காவல் நிலையத்தில் புகார் செய்வோம் என என்னுடன் சீரழிக்கபட்ட பெண்களைக் கேட்டேன். என் சினேகிதி, கலா ஒருத்தி மட்டும் துணிந்து என்னுடன் வந்தாள். பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் குழுவினதும், யாழ் நகர் குடிமக்கள் குழுவினதும் உதவியுடனும், காவல் நிலையத்திற்குச் சென்று, எமக்கு இழைத்த அநீதியை அதிகாரபூர்வமாக பதிவு செய்தோம், நீதிமன்ற வைத்திய அதிகாரி எங்கள் இருவரையும் பரிசோதித்த்தில், எங்கள் தாக்கல் உறுதிப் படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து எங்களுக்கு அனுசரணையாக இருந்தவர்களுக்கும் அப்பாவிற்கும், கலாவின் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. கலாவின் குடும்பத்தார் புகாரைத் தொடராமல் பின்வாங்கினர். அப்பாவும் இதை இப்படியே விட்டிடு என்றார், ஆனால் நான் முடியவே முடியாது, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவேணும் என ஒரே பிடிவாதமாக இருந்தேன்.
மேடை ஏறி பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ளப் பயந்து கூச்சப்பட்ட நான், என்னைப் போல் நாசமாக்கப்பட்ட மற்றப் பெண்கள் வெளியே தலைகாட்டாமல் வீட்டுக்குள் அடைந்து கிடக்க, நான் மட்டும் துணிவோடு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன். ஐயோ எனக்கு இப்படி ஆகிட்டுதே என்று வருந்திக்கொண்டிருக்காமல் எனக்கு நடந்ததை ஒரு விபத்தாக நினைத்து வாழ்ந்து காட்ட வேணும் என்ற வெறி என்னை ஆட்கொண்டிருந்தது. நான் முன்னர் ஆசைப் பட்டது போல் டொக்டராக வேணும் என்ற மன உறுதியோடு பள்ளிக்கூடம் போய் வந்தேன். அங்கே சக மாணவர்கள் முதுகுக்குப் பின்னால் என்னைப் பற்றி குசு குசுத்தனர். சிலர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தனர். ஆறுதல் வார்த்தை சொல்ல மனமிருந்தாலும் அவர்களுக்கு அதற்குத் துணிவில்லை. என் உணர்வுகளோ அவமானாத்தால் உள்ளுக்குள்ளே அழுது கொண்டிருந்தன.
நான் படும் வேதனையைக் கண்டு தலைமை ஆசிரியர், “மேகலா மற்றப் பிள்ளைகள் உன் மனம் நோகும்படி பேசுவதும் நடப்பதும் எனக்கே மனக்கவலையா இருக்கு. பாவம் நீ. இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு விட்டு, உனக்கு நடந்த அசம்பாவித்தைப் பற்றித் தெரியாத பள்ளிக்கூடமாகப் பார்த்துப் போ. என்னாலே இயன்ற உதவியைச் செய்றேன்,” என்றார்.
“நன்றி மெடம். ஆனால் நான் எந்தத் தப்பும் செய்யில்லையே. மடியிலே கனம் இருந்தால் தானே வழியில் பயம். எல்லா பேச்சுகளையும் தாங்கும் மன வைராக்கியம்
எனக்கு இருக்கு. நான் இங்கே படிக்கிறதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கா? என கேட்டேன்.
”அப்படி ஒன்றும் இல்லை. நீ இங்கேயே படிக்கலாம். கர்த்தர் உனக்குத் துணையாய் இருப்பார்,” என்றார். அதற்கு மேல் அவரால் என்ன சொல்ல முடியும்.
நான் பஸ் தரிப்பு நிலையத்திலே நின்ற போதும் கடைகளைக் கடந்து நடந்து போன போதும் சனங்கள் ’இது தானப்பா அந்தப் பெட்டை, கூட்டமாக பொலீசும், நேவியும் நாசப்படுத்தின பெட்டை. துணிவா வெட்கமில்லாமல் வெளிக்கிட்டு திரியுது. நானென்றால் கிணத்திலே விழுந்து அல்லது தூக்கிலே தொங்கி செத்திருப்பேன். மானங் கெட்ட ஜென்மம். பேசாமல் வீட்டிலே அடைப்பட்டுக் கிடக்காமல் வெளிக்கிட்டுத் திரியுது,” என அசிங்கம் அசிங்கமாக, ஈவிரக்கம் இல்லாமல் என் காதுபடக் கதைத்தார்கள். தினமும் இந்த வார்த்தைகளைக் கேட்டு மனதுக்குள் கூனிக்குறுகி அவமானப்பட்டு அழுது அழுது குமுறினேன். ஆனால் எனக்கு இழைக்கப்பட்டகொடூரமான அநீதிக்கு நான் பொறுப்பில்லாத போது, நான் ஏன் முடங்கிக் கிடப்பான்? நான் ஏன் தண்டிக்கப் பட வேணும்? அநியாயம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து நானும் படித்து முன்னேறி வாழ்ந்து காட்டுவேன் என்ற மனோதிடமும் தன்னம்பிக்கையும் எனக்கு இருந்தது.
வருடங்கள் இரண்டு கடந்து போயின. வழக்கறிஞர், நீதி மன்றம் என்று அப்பாவும் நானும் அலைந்து திரிந்தோம். காசு தண்ணீராக செலவழிந்தது. தன்னம்பிக்கையோடு என் படிப்பிலும் கவனம் செலுத்தியதால் எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. நாங்கள் சளைக்கவில்லை, என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேணும் என்ற அந்த வேகம், எந்த விதத்திலும் தணியவில்லை. அநீதிக்கு எதிரான என்னுடைய சளையாத போராட்டத்தைக் கண்டு மனித உரிமை கவனிப்பு இலகாவைச் சேர்ந்த பாப்பரா என்ற பெண் என் வழக்கை வாதாடப் பெரிதும் உதவினார். இதனால் எங்களுக்கிடையே நெருங்கிய சிநேகம் வளர்ந்தது.
பெண்ணுக்கு இருபது வயதாகி விட்டதே கல்யாணம் பண்ணி வைக்க வேணும் என எல்லா தந்தைமார் போல அப்பா கவலைப் படத்தொடங்கி விட்டார். எனக்கு கல்யாணம் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அப்பா புரோக்கர் மூலம் பேசத்தொடங்கிவிட்டார். என் சரித்திரம் தெரியாமல் சம்மதித்து வந்தவர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தபின், மாப்பிள்ளைக்கு இப்ப கட்ட விருப்பமில்லை அல்லது ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கைச் சொல்லி விலகி விடுவிவார்கள். பாவம் அப்பா உடலாலும் மனதாலும் களைத்துப் போனார். தன் மகளும் கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டிகளோடு வாழ வேணும் என ஆசைப் பட்டார். ஆனால் அதற்குக் கொடுப்பினை வேண்டுமே.
பல்கலைகழகத்தில் எந்த ஒரு சக மாணவியோடும் எனக்கு நெருங்கிய சினேகம் ஏற்படவில்லை. மாணவர்களோடோ அதிகம் பேசுவதேயில்லை. இதற்கு எல்லாம் எனக்கு நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட மன வேதனையோ, இடுக்கமோ என்னவோ சரியாகச் சொல்ல முடியவில்லை.
ஐந்து வருடங்களுக்குப் பின் பல தடங்கல்களைக் கடந்து, என் வழக்கு யாழ்ப்பாண உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்நேரத்தில் அப்பாவும் பாப்பராவும் நானும் கடிதமூலமாகவும், நேர்முகமாகவும் அச்சுறுத்தப்பட்டோம். நாங்கள் அஞ்சவில்லை, முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற முடிவோடு செயற்பட்டோம். ஐயோ! திடீரேன ஒரு நாள் அப்பா காணாமல் போய் விட்டார். மாதங்கள் பல சென்றன, அப்பாவை எங்கெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை. என் நீதி தேடும் புரட்சியில் என் அப்பாவையும் கூடச் சேர்த்ததால், அவரையும் தொலைத்துப் போட்டேன். எங்கே என்ன கஷ்டப் படுகிறாரோ? உயிரோடு இருக்கிறாரோ எனத் தெரியாமல் கலங்கினேன். எனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரே இரத்தச் சொந்தத்தையும் இழந்து நின்றேன். எனினும் நான் பின் வாங்கவில்லை. பாப்பராவின் உதவியுடன் மிகவும் துரிதமாக என் போராட்டத்தைத் தொடர்ந்தேன்.
“நீதியைத் தேடி அபாயம் நிறைந்த பாதையில் செல்லும் மேகலா”, என்னும் தலைப்புடன் என்னைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ’பாதிக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்திற்குப் பயப்படாமல் உண்மையைச் சொல்ல முன் வர வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி, வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே மேகலாவின் நோக்கம். மேகலா பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டு,’ எனவும் எழுதியிருந்தார்கள்.
பல வழக்குத் தவணைகளைத் தொடர்ந்து, கடைசியில் சாட்சிகளில் இருவர் வெளிநாடு சென்றுவிட்டதாலும், மற்ற ஒருவர் பல அச்சுறுத்தல்களுக்குப் பயந்து சாட்சியாளராக விலகியதாலும் என் வழக்கு விசாரணை நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியானது. எனினும் எம் சமுதாயத்திற்கும் என் போன்ற பெண்களின் மனதிலும் ஊடகங்கள் மூலமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய மனத் திருப்தியினால், நான் இதை ஒரு தோல்வியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
என் ஐந்து வருடப் படிப்பு முடிந்து எனக்கு டொக்டர் பட்டம் கிடைத்தது. எனது சூழ்நிலையிலே நான் டொக்டரானது ஒரு சாதனை என பெருமைப் பட்டேன். என் சரித்திரம் பற்றி அறியாத சூழலில் புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவெடுத்தேன். வீட்டை விற்றுப் போட்டு பாப்பராவின் உதவியுடன் கொழும்பில் குடியேறினேன். கொழும்பில் ஒரு தனியார் மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைத்தது.
வருடங்கள் பல ஓடின. புதுச் சூழலிலே, எனது கடந்த காலத்தைப் பற்றித் தெரியாதவர்களிடம் இருந்து நட்பும், மரியாதையும் கிடைத்தன. மனதுக்குள் எரிந்து கொண்டிருந்த நீதி கேட்கும் நெருப்பு மெல்ல மெல்லத் தணிந்து கொண்டு வந்தது. வேலைக்குப் போனால் சக ஊழியர்களோடு கதைப்பதும் சிரிப்பதுமாக என் பொழுது ஒருவாறு போனது. மருத்துவமனையில் வேலை செய்த சக வைத்தியர்களோடு சிநேகத்தோடு பழகினேன். அதில் டொக்டர் சசிதரனுடைய நட்பும், அன்பும். வளர்ந்த்து. அவருக்கு என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மனம் விட்டுச் சொன்னேன். பிரபலமான உணவகங்களுக்கு இருவரும் சாப்பிடப் போவோம். புகழ் பெற்ற கடற்கரை இடங்களான பேருவல, ஹிக்கடுவ என்று பலமுறை சென்று, ஒரு நாள் பொழுதைச் சந்தோசமாகக் கழிப்போம். இப்படியே எங்கள் சிநேகம் இரண்டு வருடங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு போனது.
ஒரு நாள் இரவு கோல் பேஸ் மைதானத்தில் வானத்தில் பவனி வந்துக்கொண்டிருந்த முழு நிலவை ரசித்துக் கொண்டு கை கோர்த்த் படி கால் ஆற இருவரும் நடந்து கொண்டிருந்தோம். உவர்ப்புக் காற்று எங்கள் உடலை இதமாக தழுவியது. திடீரென சசி என் பிக்கம் தரும்பி, ”மேகலா எனக்கு உன்னைப் பிடித்திருக்கு. நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கும் என்னை பிடிக்கும் தானே, என்னை கலியாணம் கட்டிறீயா?” என என்னை இறுகத் தன் உடம்போடு அணைத்துக் கொண்டான். அவன் அரவணைப்பு என் உடம்பில் நெருப்பாகச் சுட்டது. ’நோ! நோ! எனக் கத்தியபடி அவன் கரங்களை உதறித்தள்ளி விட்டு, ஓடிப் போய் ஆட்டோ ஒன்றில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டேன்.
என்னைப் போல் நாசப்படுத்தப் பட்டுத் திரும்பி வந்த பல பெண்கள் கடுமையான, நீடித்த மன அழுத்தத்தின் குணக்கேடுக்களுக்கு உள்ளாகியுள்ளனர் என அறிவேன். ஆனால் நான் அன்று, அடிப்பட்ட பாம்பாகச் சீறி, எனக்கும் என் மூலம் பாதிகப்பட்ட பெண்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியதால், நானும் உளரீதியாகத் தாக்கப் பட்டிருக்கிறேன் என்ற உண்மையை உணரவில்லை. இயற்கையாகவே எந்தப் பெண்ணுக்கும் வரும் கல்யாண ஆசை என் பதின்ம வயதில், எனக்கும் இருந்தது. ஆனால் அதே பதின்ம வயதிலே என்னை கொடூரமாக நாசப்படுத்தியதின் தாக்கம் இப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. இன்று சசிதரனின் அணைப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சசிதரனையோ எந்த ஒரு ஆணையோ மணந்து தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை நினைத்தால் ஒருவித பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.
சசீதரனை எனக்கு பிடித்திருந்தது. பல விசயங்களில் எங்கள் கருத்து ஒன்றாயிருந்தது. நேரம் போவது தெரியாது கதைத்துக் கொண்டிருப்போம். மனதார நான் அவரை நேசித்திருக்கிறேன் போலும். ஆனால் என்னால் அவனுடன் மனைவியாக வாழ முடியாது என்பதை கோல்பேசில் நடந்த சம்பவம் விளக்கிவிட்டது. என்னைப் பற்றி தெரிந்திருந்தும், என்னை மணக்க முன் வந்தது அவன் பெருந்தன்மை. இரண்டு நாள் கழித்து சசீதரனை தொலைபேசியில் அழைத்து, என் நிலைமையைச் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். இப்போ சசீதரன் பெற்றோர் பார்த்த பெண்ணைக் கல்யாணம் கட்டி, இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையுமாகி விட்டான்.
அண்ணா, அப்பா, அம்மா என வரிசையாக எல்லாரையும் இழந்து, உறவு எனச் சொல்ல ஒருவரும் இல்லாமல் ஒரு ஒதுக்கத்தை உணர்ந்தேன். வேலை விட்டு வீட்டிற்கு வந்தால் தனிமை என்னை வாட்டியது. சிநேகிதர்கள் இருந்தார்கள், ஆனால் என்னோடு எந்நாளும் கூட இருக்க, என் சுக துக்கங்களில் பங்கு கொள்வதற்கு ஒரு சொந்தத்தை, ஒரு உறவை என் மனம் தேடியது. கல்யாணம் என்னும் பந்தத்தால் எனக்கென்று ஒரு துணையை தேடிக் கொள்ளலாமே, என என் நலம் விரும்பியான பாப்பரா ஆலோசனை கூறினார்.
”பாப்பரா, எனக்கு நடந்த விபத்து உனக்கு தெரிந்தது தானே. அதனால் என்னாலே எந்த ஆணோடும் நெருங்கிய உறவு கொள்ள, பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கு. எனக்கு இப்போது முப்பத்தி ஆறு வயதாகிறது. என் உள்ளுணர்வு தாய்மையைத் தேடுகிறது. ஒரு தாயாகி என் பாசத்தைப் கொட்ட எனக்கெண்டு ஒரு குழந்தை வேணும்,” என பாப்பராவிடம் ஒளிவு மறைவின்றி இதைப்பற்றி மனம் திறந்து கதைத்தேன்
மேகலா “எனக்கு உன் மன நிலை, உன் தனிமை எல்லாம் நல்லா விளங்குது. ஒரு அநாதைப் பிள்ளையை எடுத்து வளக்கலாமே. உனக்கு ஒரு துணையாயும், ஒரு அநாதைப் பிள்ளைக்கு வாழ்வு குடுத்ததாகவும் இருக்கும்.” என ஆங்கிலத்தில் யோசனை சொன்னார்
”இல்லை பாப்ரா. எனக்கு என் ரத்தமும் சதையுமான குழந்தை தான் வேணும். மேல் நாட்டுப் பெண்கள் சிலபேர் கல்யாணம் பண்ணாமல், பரிசோதனைக் குழாய் கருக்கட்டல், ஐ.வி.எவ் சிகிச்சை (IVF) மூலம் தமக்கென்று ஒரு பிள்ளையை பெத்தெடுக்கினம். அப்படி நானும் ஒரு பிள்ளையைப் பெறலாமே. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” பல நாட்களாக என் மனதில் இருந்த இடையறாத ஆழ்ந்த எண்ணத்தை தயக்கம் இல்லாமல் அவளுடன் பகிர்ந்து கொண்டேன்.
“மேகலா அது உனக்கு சரி வராது. மேல் நாட்டுச் சமுகம் வேறை. இங்கே உன் சமுகம் வேறை. நீ பிள்ளையைப் பெத்ததும் சனங்கள் பலவிதமா கதை கட்டுவினம். உன்னைப் பாத்து ஏளனமாகச் சிரிப்பினம். இது உங்களுடைய ஊர் பண்பாட்டிற்கும், வழக்கத்திற்கும், முற்றும் மாறான விசயம். நீ பல பழிச் சொற்கள் கேட்க வேண்டி வரும் உங்கட மனிசரோடு பல வருசமா பழகின அனுபவத்திலே சொல்றேன்.” என்றாள். பாப்பரா பெண்களின் மேம்பாட்டிற்கு அயராது பணிபுரிந்த ஒரு பெண்ணியவாதி என்றாலும், பாப்பரா எங்கள் மக்களின் சிக்கலான சமூக மனப்பாங்கை நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.
”பாப்பரா எங்கட சனங்கள் பழி சொல்லுவினம், சிரிப்பினம் ஆனால் வழி சொல்ல மாட்டினம். ஊர் என்ன சொல்லுவினம் எண்ட பயமோ கவலையோ எனக்கில்லை. நான் துணிந்திட்டேன். எனக்கு என் ரத்தமும் சதையுமான குழந்தை தான் வேணும். தயவு செய்து எனக்கு இந்த விசயத்திலே துணையா இருப்பியா?”
”மேகலா, உன் துணிச்சலைப் பராட்டிறேன். பெண்ணியத்திற்கு நீ ஒரு எடுத்துக் காட்டு. கட்டாயம் நான் உனக்கு எல்லா உதவியும் செய்து, துணையாவும் இருப்பேன்.” பாப்பராவின் வார்த்தைகள் எனக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்தது.
அடுத்த நாளே கொழும்பில் உள்ள ஐ.வி.எவ் சிகிச்சையில் பிரபலமான தனியார் ஆஸ்பத்திரிக்கு பாப்ராவுடன் போய் ஐ.வி.எவ் நிபுணரைச் சந்தித்தேன். அவர் எல்லா அறிவுரையும் கொடுத்து, சோதனைகளும் சிகிச்சையும் பெற ஏற்பாடு செய்தார். அநாமதேய கொடையாளியின் விந்துவின் மூலம் ஒரு வருடம் கழித்து, பிரதீபனை பத்து மாதம் என் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்தேன். பிரதீபனின் நலத்திற்காகப் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தந்தையின் பெயர் மதியாபரணம் என என் அப்பாவின் பெயரையே பதிவு செய்தேன்.
என் நெருங்கிய நண்பர்களுக்கும், நான் வேலைபார்த்த மருத்துவமனையில் சிலருக்கும் துணிந்து நான் கல்யாணம் கட்டாமல் ஐ.வி.எவ் மூலம் ஒரு குழந்தையைப் பெறப் போகிறேன் என்ற உன்மையை முதலிலே சொல்லிவிட்டேன். இதனால் எவரும் கேள்விகள் கேட்டு என்னை சங்கடப்படுத்தவில்லை. மருத்துவத் துறையில் வேலை செய்வதால் வந்த தைரியமும், தாய்மை அடைய வேண்டும் என்ற பெண்மையின் இயல்புணர்ச்சி தந்த உள் உந்துதலும் எனக்கு, ஊர்ப் பழிச் சொற்களைத் தாங்கும் சக்தியைக் கொடுத்தது.
பிரதீபன் தன் அப்பாவைப் பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டான். இப்படி தன் தந்தை யார் என அறிய ஆவல் காட்டுவான் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
வெளியாட்கள் மூலம் தெரியவர முன், என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும் அவன் பிறப்பின் உண்மையையும் சொல்வதா? வேண்டாமா? எப்படியானாலும் அதற்கான காலமும் நேரமும் கனியும் வரை காத்திருப்பேன்.
![]()