கவிதைகள்
ஆளுமையை வளர்ப்தற்கு அமர்ந்தவுன்னைப் போற்றுகிறேன்!… கவிஞர்.. ஜெயராமசர்மா …. மெல்பேண்.
வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் மாதரசே
உள்ளமதில் நல்லறி ஊற்றெடுக்கச் செய்திடம்மா
கள்ளமற்ற முனிவர்க்கு கருணையினைக் கொடுத்தவளே
கற்றுநான் உயர்வடைய காட்டிவிடு நல்வழியை
ஏடுகையில் ஏந்திநின்று எல்லோர்க்கும் குருவானாய்
இன்னிசைக்கும் வீணையினால் இனியதமிழ் ஈய்கின்றாய்
காடிருக்கும் குயிலினதும் கண்கவரும் கிளியினதும்
கவர்ச்சிமிகு குரலுக்கும் காரணமாய் ஆகிவிட்டாய்
பாமரரின் நாவினிலும் படிப்பறியார் நாவினிலும்
பலவற்றைக் கற்றுநிற்கும் பண்டிதர்கள் நாவினிலும்
ஓடிவந்து அமர்ந்திருந்து உன்னைநீ காட்டுகிறாய்
உனைநினைந்து பார்க்கையிலே உள்ளமெலாம் உருகுதம்மா
இசைவாணர் நாவமர்ந்து எத்தனையோ தருகின்றாய்
இசையறியா மனங்கூட இணங்கிவிடச் செய்கின்றாய்
வசைபாட நினைப்பாரை இசையாலே திருத்துகிறாய்
வகைவகையாய் துதிபாடி வணங்குகிறேன் மாதரசே
கம்பனது நாவினிலும் காளிதாசன் நாவினிலும்
எங்களுக்கு சிலம்புதந்த இளங்கோவின் நாவினிலும்
வாழ்வளிக்கும் வள்ளுவத்தை வழங்கிநின்றார் நாவினிலும்
ஆளுமையை வளர்ப்பதற்கு அமர்ந்தவுன்னைப் போற்றுகிறேன்