இலங்கை

பெருந்தொற்றொன்றுக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய நாணயங்களே செம்மணிப் புதைகுழியிலிருந்து மீட்பு;  சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்தில் பெருந்தொற்றொன்று ஏற்பட்ட காலத்துக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் தனது சமர்ப்பணத்தில் மேலும் தெரிவித்ததாவது:

செம்மணிப் புதைகுழியில் பெருந்தொற்றால் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கச் சாத்தியம் உள்ளதாக தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை வழங்கியுள்ளார். இந்தக் கருத்தை – அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் 1919ஆம் ஆண்டிலேயே அம்மை நோய்தொற்று ஏற்பட்டது. ஆனால் 1920ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டகால நாணயங்களே செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டன.

எனவே, இதிலுள்ள வெளிப்படையான முரண்தன்மையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செம்மணிப் புதைகுழி தொடர்பான காலப்பகுதியை பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கையின் மூலம் தீர்மானிக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இல்லை.

அத்துடன் கார்பன் பரிசோதனை செய்வதையும் நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். ஏனெனில், மன்னார் உள்ளிட்ட ஒருசில புதைகுழிகள் தொடர்பில் வழங்கப்பட்ட கார்பன் அறிக்கைகள் விசாரணைகள் நீர்த்துப்போகக் காரணமாக அமைந்தன. எனவே, செம்மணிப் புதைகுழி விடயத்திலும் அவ்வாற நிலைமை ஏற்படக்கூடாது. மரபணுப் பரிசோதனை மூலமே காலப்பகுதி கண்டறியப்பட வேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *