இலங்கை

எது சட்டவிரோதக் கட்டடம்?; திலீபனின் தூபியா? தையிட்டி விகாரையா?

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ்.மாநகர சபைக்கு அறிவித்தல் விடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், திலீபனின் நினைவுத் தூபியா? தையிட்டி விகாரையா? சட்டவிரோதமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தியாகதீபம் திலீபனின் நினைவிடம் சட்டவிரோதக் கட்டடம் என்பது அப்பட்டமான பொய். தமிழ்மக்களின் கூட்டு நினைவேந்தல் உரிமையை நசுக்கும் நோக்கில் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரது அறிவித்தல் அமைந்துள்ளது. இவ் அறிவித்தல் அநுர அரசின் இனவாதக் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. போர் நிறைவுற்றுப் 17 வருடங்களாகியும் பொலிஸார் தமிழர்களுக்கு எதிரான இனவாத மனநிலையிலிருந்து விடுபடவில்லை என்பதனையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் எந்தவித அனுமதிகளும் பெறப்படாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அங்கிருந்து இடித்து அகற்ற முடியாத கையாலாகத்துடன் செயற்படும் தற்போதைய அரசு தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாட நினைக்கிறது.

இந்த நாட்டில் தமிழர்களின் நினைவுரிமைக்கும், உணர்வுகளுக்கும் ஒரு சட்டம்! விகாரைகள், யுத்த வெற்றி நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு வேறொரு சட்டமா? தமிழர்களுக்கு எதிரான இத்தகைய பாரபட்சங்கள் தொடர்வது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவைத் தரும் என்பதை அநுர அரசு இனியாவது உணரத் தலைப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *