தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்; சுரேசை ரி.ஐ.டி.யினர் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை காலை-09.30 மணியளவில் கொழும்பு-01 இல் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும்
விசாரணைப் பிரிவுப்(ரி.ஐ.டி.) பணியகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது முகநூலில் விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படத்தைப் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அழைப்புக் கட்டளை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் சுரேஸின் வீட்டிற்குச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் வீட்டிலிருந்த குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தர்மலிங்கம் சுரேஸை நேற்றைய தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் முற்றுமுழுதாக மறுத்துள்ளார். தமிழ் மக்களுக்கு உரித்தான மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகள் தொடர்பில் அண்மைக் காலமாகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வரும் நிலையில் அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் நோக்கிலேயே அரசால் திட்டமிட்டு இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர் அச்சுறுத்தல்களால் ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, தர்மலிங்கம் சுரேஸ் தமது கட்சியின் தலைவருடன் விடுதலைப் புலிகளின் தலைவர் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுக் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்-22 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் பணியகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()