ரணில், மைத்திரி கால வழக்குகளின் கைதுகளே இப்போது நடக்கிறது; நாம் எதனையும் செய்யவில்லை

தற்போது இடம்பெறும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கைதுகள் உள்ளிட்ட வழக்குகளில் 99.99 வீதமானவை 2015 முதல் 2021ஆம் ஆண்டு ( ரணில்,மைத்திரி ஆட்சி) காலவரையிலான காலப்பகுதியில் தொடரப்பட்டவையே. இதனால் தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் விதத்தில் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை அடக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது நடக்கும் கைதுகள், தற்போது நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுடன் தொடர்புடைய 99.99 வீதமான வழக்குகள் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். இவை நாங்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய இந்த வழக்குகள் நடக்கவில்லை குறிப்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகள், எயார்பஸ், சிராந்திக்கு எதிரான வழக்குகள் உள்ளன அப்போது ஆரம்பிக்கப்பட்ட வழக்குகளே ஆகும். இதனால் நாங்கள் எவ்வித பழிவாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயக விரோத சட்டமாகும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அதனை நீக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். இப்போது பாதாள குழுக்களின் செயற்பாடுகள் உள்ளன. இதனால் இப்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளும் புதிய சட்டமாக அரசை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் ஒருபோதும் எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கானது அல்ல என்றார்.
![]()