இலங்கை

இனப்பிரச்சினை மேட்டுக்குடி அரசியல் குடும்பங்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது – டாக்டர் எஸ். அறிவழகன்

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய மேட்டுக்குடி அரசியல் குடும்பங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காகவே இனப்பிரச்சினை செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவும், 1948ஆம் ஆண்டிலிருந்து தேசிய மக்கள் சக்தி போன்றதொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருக்குமாயின் நாட்டில் இனப்பிரச்சினையே தோன்றியிருக்காது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ். அறிவழகன் சுட்டிக்காட்டினார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆட்சித்திறன்- எதிர்காலத்துக்கான ஒரு புதிய பாதை எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தேசிய மாநாடு கொழும்பு, மாளிகாவத்தை பி. டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை (31) நடைபெற்றது. வடகிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாடு முழுவதிலுமிருந்து பொறியியல், வங்கித்துறை, கல்வி, விவசாயம், மருத்துவம், கணக்கியல், சட்டம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்விமான்கள், துறைசார் வல்லுநர்கள், தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் முதன்முறையாகச் சாதாரண மக்களுக்கான ஆட்சி தற்போது உருவாகியுள்ளது. இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் மேட்டுக்குடி பிரபுத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சாதாரண மக்களுடன் பேருந்துகளில் பயணித்தவர்களோ, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றவர்களோ அல்லர். எனவே, சாதாரண மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் தொடர்பான அனுபவப் புரிதல் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்த புரிதல் இருப்பதுடன், மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் அரசாங்கம் கருத்துகளைக் கேட்டறிகின்றது. இந்தப் பிரச்சினை சுதந்திரத்துக்கு முன்னர் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்னரே இந்து – முஸ்லிம் முரண்பாடுகளும் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களும் இடம்பெற்றன. ஆனால், இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னரோ சுதந்திரம் பெற்ற காலத்திலோ இனப்பிரச்சினை இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சியாளர்களாலேயே அது செயற்கையாக உருவாக்கப்பட்டது.

பிரித்தானியர்கள் ஆட்சியதிகாரத்தைச் சில மேட்டுக்குடி குடும்பங்களிடம் கையளித்தனர். அவர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகக் குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்யவில்லை. மாறாக, இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தியாகங்களைச் செய்து இந்தியர் என்ற தேசிய அடையாளத்தை உருவாக்கியது. பல மொழிகளையும் கலாசாரங்களையும் கொண்ட நாட்டை ஒன்றிணைத்தது. இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்காமல், இன வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்தனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர் என்ற அடையாளத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் உருவாக்குவதில் ஈடுபடுகின்றது. பேரினவாதச் சிந்தனைகளுக்கு அடிபணியாத அதன் அண்மைய செயற்பாடுகளும் இதனை வெளிப்படுத்துகின்றன. தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூறுவது போல அதிகாரம் பகிர்வு மாத்திரம் இனப்பிரச்சனைக்கு தீர்வு அல்ல . அதற்கு முதலில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை கட்டியெழுப்ப வேண்டும். சந்தேகங்கள் தீர்கக்ப்பட வேண்டும். அதற்கு பிறகு தான் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு என்பது யதார்த்தமாகும். அந்தவகையில் உண்மையிலேயே இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உழைக்கின்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி முன்னின்று செயற்பட்டு வருகிறது.

1948இல் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்ததாக உயர்ந்த தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை விளங்கியது. 1965இல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தபோது, அதன் தந்தை லீ குவான் யூ, கொழும்பைப் போன்று சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால், இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்குப் பின்னர், 2024இல் கடனை மீளச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்டது. தேசிய மக்கள் சக்தி 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் இலங்கை தெற்காசியாவின் சிங்கப்பூராகவும் எதிர்காலச் சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழும் நாடாகவும் மாறும்.

வடக்கிலும் தெற்கிலும் இனவாதச் சக்திகள் மீண்டும் இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கின்றன. தெற்கில் ஞானசார தேரரின் காவி உடை விவகாரத்தையும் வடக்கில் திலீபனின் சிலை விவகாரத்தையும் செயற்கையாகப் பெரிதுபடுத்தி மக்களைக் கொந்தளிப்பில் வைத்திருக்கின்றனர். இவை மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்பற்றவை. ஊடகங்கள் வாயிலாக அவற்றைப் பேசுபொருளாக்கி இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர். எனவே, இத்தகைய அரசியல் உத்திகளை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் கடமையாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *