அரசின் 3 புதிய சட்டமூலங்கள் ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்து – பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் ஆகிய மூன்றையும் ஒன்றாக எடுத்துப் பார்க்கும்போது, இதன் பயங்கரத் தன்மையை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அரசாங்கத்தின் இந்த 3 புதிய சட்டமூலங்கள் ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள மூன்று சட்டமூலங்கள் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,
பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலம் ஆகிய மூன்றையும் ஒன்றாக எடுத்துப் பார்க்கும்போது, இதன் பயங்கரத் தன்மையை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்திருந்தோம்.
என் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உயர்நீதிமன்றத்தில் இந்த வாதங்களை முன்வைத்தார்.
எனினும், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதுடன் மட்டும் எமது நடவடிக்கை முடிந்துவிடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். இச்சட்டமூலங்களால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து சமூகத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இந்த மூன்று சட்டமூலங்களினாலும் ஊடக சுதந்திரம் முற்றிலும் பறிபோவதுடன், ஊடக நிறுவனங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், மக்களின் தகவல் அறியும் உரிமையும் முற்றுமுழுதாக மறுக்கப்படுகிறது. எனவே, இது குறித்து சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு, வலுவான மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பத் தீர்மானித்துள்ளோம்.
ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இதற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளன. நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்படாத பொலிஸ் அதிகாரங்களால் மனித உயிருக்கு ஏற்படும் பேராபத்தை அண்மையில் ஹோமாகமவில் இடம்பெற்ற சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது. இச்சட்டமூலங்களில் உள்ள மிக ஆபத்தான விடயம் யாதெனில், ஊடகவியலாளர்கள் தாங்கள் பெற்ற தகவல்களின் ஆதாரத்தை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட முடியும்.
இதனால் புலனாய்வு ஊடகவியல்துறை முற்றாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறும் பெருமளவிலான ஊழல்கள் புலனாய்வு ஊடகவியல்துறை மூலமாகவே சமூகத்திற்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. உதாரணமாக, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் மோசடியை எடுத்துக்கொண்டால், அதனால் 1,576 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக அமைச்சரே ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமன்றி, எவ்வித பரிசோதனைகளுமின்றி துறைமுகத்திலிருந்து 325 சரக்குக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் திறைசேரியிலிருந்து 1.6 பில்லியன் ரூபா காணாமல்போனமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் இவ்வாறான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்களில் காணமுடியாமல் போய்விடும். இந்த நிலைமை ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் ஆபத்தாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
![]()