சைவசமயக் குழு ஜனாதிபதியைச் சந்திக்க முயற்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடத்துக்கு கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகையைக் கையளித்தல், மயிலத்தமடு பசுக்கள் பணணையாளர் துயர் தீர்த்தல் விவகாரம், அறநெறி ஆசிரியர்களின் மாதாந்த வேதனத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளுடன் சைவ இணையப் பெருந்தலைவர், குருமகா சந்நிதானம் தவத்திரு. அகத்தியர் அடிகளார் தலைமையிலான சைவசமயத் தூதுக் குழுவினர் வெகு விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து வலியுறுத்தவும், கையெழுத்துக் கோரிக்கை மனுக்களை தனித் தனியாகச் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சைவமகா சபையின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி.ப.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகச் செய்திக் குறிப்ப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா பல்கலைக்கழகக் கடல்சார் அறிவியல் பீடம் மன்னார் விடத்தல் தீவில் அமைய அரச அனுமதியைப் பல்கலைக்கழகச் சமூகத்தினர் பெற்றிருக்கின்றனர். அதே போல யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் கீரிமலையில் சிவபுண்ணிய வலயத்தில் அமைய வேண்டும் என்பது சைவ மக்களின் பெரு விருப்பமாகும்.
ஏற்கனவே ஜனாதிபதியால் கொள்கையளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கச் சம்மதிக்கப்பட்டதும், தெல்லிப்பழை, யாழ்.ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டதுமான கீரிமலைச் சைவ புனித வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை வளாகத்தைப் பெற்று மிக நெருக்கடியாக எந்தவித முறையான கட்டடத் தொகுதிகளும் இன்றி இயங்கி வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடம் கீரிமலையில் சிறப்பான வசதிகளுடன் ஆன்மீகச் சூழலில் நிமிர்ந்து ஏழ அனைத்துச் சைவசமய பீடங்களும், அமைப்புக்களும் அழுத்தம் கொடுத்து முன் முயற்சி எடுப்பது அவசியமாகும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
![]()