கோதாவுக்கு பயணத் தடை நீக்கப்படுமா?; நவ.4 இல் மீண்டும் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் பசான் அமரசேன அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையின் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தான் அங்கு செல்ல வேண்டியுள்ளதாகவும். இதன்படி தனது வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறும் கோதாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழுவின் கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளரான குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் சிலரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()