யாழில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் இ.போ.ச?; யாழ். நெடுந்தூர பஸ் சேவையில் சிக்கல்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து இ.போ.ச. பேருந்துகள் சேவையில் ஈடுபடாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
தனியார் பேருந்துகள் சேவையை தொடங்கிய போதும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் குறித்த நெடுந்தூர பேருந்து நிலையத்துக்கு வராது தமது நிலையத்தில் இருந்தே வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவதற்குக் கடந்த காலங்களிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
நெடுந்தூர பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக, இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறன நிலையில் தற்போது தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட தொடங்கிய போதும் இ.போ.ச பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிரகலாதன், நெடுந்தூர சேவைக்கு இனைந்த நேர அட்டவணையை தயாரித்து அதை நடைமுறைப்படுத்த சொல்லி மாத்திரம் வந்ததேயொழிய, அந்த புதிய பேருந்து நிலைய இடத்திலிருந்து சேவை ஆற்றுவது என்பது பற்றி எங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் நீதிமன்ற கட்டளையாக வழங்கப்படவில்லை.
எமக்கு என்று ஒரு பேருந்து நிலையம் இருக்கிற பட்சத்தில் நாங்கள் வேறொரு இடத்திற்கு சென்று சேவை ஆற்ற வேண்டிய தேவை எமது தொழிலாளர்களுக்கோ எமக்கோ இல்லை என்பதனைச் சம்மந்தப்பட்ட தரப்பபுக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இணைந்த நேர அட்டவணையை நாங்கள் உதாசீனம் செய்யவில்லை. அதற்கு நாங்கள் தயார். அதன்படி எங்களது பேருந்துகள் எதேனும் தவறு இழைத்தால் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
இந்நிலையில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரனால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குறித்த செயல்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து இ.போ.ச. பேருந்துகள் சேவையில் ஈடுபடாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
![]()