பலதும் பத்தும்

மீசையுடன் குழந்தை பிறந்ததாகப் பரவும் காணொளி

ஈக்குவடோர் நாட்டில் மீசையுடன் அதிசயக் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்து சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று மிக வேகமாகப் பரவி வருகிறது.

எனினும், அந்த காணொளி முற்றிலும் போலியானது என்பதும், அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதும் மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகின் எந்தப் பகுதியிலாவது இவ்வாறான அசாதாரண நிகழ்வு உண்மையாகவே இடம்பெற்றிருந்தால் அது சர்வதேச ஊடகங்களில் பெரும் செய்தியாகியிருக்கும். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வச் செய்தியும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகவில்லை.

மேலும், இக்காணொளியை ஈக்குவடோர் செய்தித் தளங்கள் சில பகிர்ந்திருந்த போதிலும், அது எந்த மருத்துவமனையில் எடுக்கப்பட்டது, குழந்தையின் பெற்றோர் யார் அல்லது குழந்தையின் பெயர் என்ன என்பது குறித்து எந்தவொரு சுயாதீனமான உறுதிப்படுத்தல்களும் குறிப்பிடப்படவில்லை.

காணொளியைப் பகிர்ந்தவர்கள் ‘ஈக்குவடோர்’ எனக் குறிப்பிட்டிருந்த போதிலும், அதை நிரூபிப்பதற்கான எந்தத் தரவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தொழில்நுட்ப ரீதியில் இக்காணொளியைப் பரிசீலித்தபோது, குழந்தை அசையும் தருணங்களில் மீசை அதன் முகத்தோடு சரியாகப் பொருந்தாமல் விலகிச் செல்வது போன்ற AI எடிட்டிங்கின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

அத்துடன், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இயற்கைக்கு மாறாகக் கருமையாகவும், தடிமனாகவும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது போலவும் மீசை இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனைகளில் இக்காணொளி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி காணொளி என்பது உறுதியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *