இலங்கை

சீ.வி.கே.,சுமந்திரன் மீது அரியநேந்திரன் வழக்குத் தாக்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கட்சியில் இருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர், பதில் செயலாளர், முன்னாள் செயலாளர், உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேற்று புதன்கிழமை ஒத்திவைத்தார்.

2024 டிசம்பர் 28ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை தமிழரசு கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சத்தியலிங்கம் அறிவித்தார் இருந்தபோதும் அதற்கான கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என அரியநேந்திரன் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் இப்போது உள்ள கட்சியின் பதில் செயலாளர் எம்.சுமந்திரன் கடந்த 2024 மத்திய குழுவில் அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கியதாக 2026 ஜனவரி 9 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை அரியநேந்திரனுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கட்சியின் மத்திய குழு, மட்டக்களப்பு மாவட்ட கிளை உப தலைவர், பட்டிருப்பு தொகுதி உப தலைவர், பட்டிப்பளை பிரதேச கிளை உப தலைவராக செயற்பட்டுவந்த தன்னை கட்சியின் உப விதிகளுக்கு முரணாக கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம், செயலாளர் எம். சுமந்திரன்,மற்றும் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், மற்றும் தமிழரசுக் கட்சிக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *