நீதிமன்றம் வந்த ஞானசார தேரர்; 30க்கு வழக்கு ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதில் ஞானசார தேரர் ஆஜராகியிருந்த நிலையில், அந்த வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வழங்கிய பொதுமன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி அண்மையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், ஞானசார தேரர் இருக்கும் இடம் தெரியாமல் அதிகாரிகள் இருந்த நிலையிலேயே அவர் வேறு வழக்கொன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்துக்கொண்டிருந்த வேளையில், 2019ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று ராஜகிரிய, நாவல வீதியில் அமைந்துள்ள ஞானசார தேரர் இருந்த விகாரைக்குச் சென்றபோதிலும், அவர் தங்கியிருக்கும் இடம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும், ஞானசார தேரரின் தரப்பினர் அத்தகவல்களை நிராகரித்துள்ளதுடன், அவ்வாறு எந்தவொரு அதிகாரியும் விகாரைக்கு வரவில்லை என்றும், அவர் தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையற்றவை என்றும் கூறினர். .
ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான தீர்ப்பு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பதாக பொலிஸார் தனிப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர், நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு தான் மதிப்பளிப்பதாகவும், மக்களுக்காக போராடும் தனக்கு தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()