திலீபனின் நினைவேந்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; ஜனநாயகப் போராளிகள் கட்சி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
திலீபன் அண்ணனுடைய 39ஆவது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987-ஆம் ஆண்டு திலீபன் மேற்கொண்ட இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
எதிர்வருகின்ற 39ஆவது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் இந்த நினைவு நாளை நினைவு கூர வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.
தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவதை இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.மாவீரர் தினம் கூட அப்படித்தான் இங்கே நினைவு கூரப்படுகின்றது.
.தயவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் அந்த நோக்கத்துக்காகவே நீங்கள் வந்து அவருடைய நினைவு நாட்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
![]()