ஐ.நா.வுக்கு இதுவரை பெண் தலைமை இல்லை; உலக அமைப்பின் ‘முழுமையான சீர்திருத்தத்திற்கு’ பிரிக்ஸ்ஆதரவு
ஐ. நா. சபையின் செயலாளர் நாயகமாக பணியாற்றியவர்களில் இதுவரை எந்தப் பெண்ணும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. மற்றும் அதன் பாதுகாப்புச் சபையில் “முழுமையான சீர்திருத்தம்” மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முதல் நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புது டி ல்லி பிரகடனத்தில்’ இந்த விவகாரம் இடம்பெற்றது. “ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் பதவிக்கு இதுவரை எந்தப் பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; மேலும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து தலா இருவருமே இதுவரை இப்பதவியை வகித்துள்ளனர்” என்று அப்பிரகடனம் குறிப்பிட்டது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடி ன், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற அன்றைய நாள் ஆலோசனைகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிவித்தார்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், ஐ.நா. மற்றும் அதன் பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான தங்கள் ஆதரவை இக்கூட்டமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
“2023-ஆம் ஆண்டின் ஜோகன்னஸ்பர்க்-II தலைவர்கள் பிரகடனத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், பிரிக்ஸ் தலைவர்கள் பின்வருமாறு கூறினர்: ‘ஐ.நா. மற்றும் அதன் பாதுகாப்புச் சபையை மேலும் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும், பிரதிநிதித்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மற்றும் திறமையானதாகவும் மாற்றுவதற்கும், தற்போதைய உலகளாவிய சவால்களுக்குப் போதுமான வகையில் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களில் வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும், ஐ.நா.வில் முழுமையான சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.'” 2000-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1325-ஐச் செயல்படுத்துவதிலும், ‘பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு’ தொடர்பான செயல்திட்டத்தை முன்னெடுப்பதிலும் தங்கள் உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
“மோதல் தடுப்பு மற்றும் தீர்வு, மனிதாபிமான உதவிகள், மத்தியஸ்தம், அமைதி காக்கும் பணிகள், அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட அமைதி மற்றும் பாதுகாப்புச் செயல்முறைகளின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதில் பெண்களின் முழுமையான, சமமான, பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
அடுத்த ஐ. நா.செயலாளர் நாயகத்தை தேர்ந்தெடுப்பதற்கான தற்போதைய செயல்முறை மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடர்புடைய விதிகள் குறித்தும் அந்த அறிக்கை குறிப்பாகக் குறிப்பிட்டது.
அதில், “இதுவரை எந்தப் பெண்ணும் செயலாளர்நாயகம் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து தலா இருவர் மட்டுமே இப்பதவியை வகித்துள்ளனர் என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்புச் சபை 2000அக்டோபர் 31,அன்று தீர்மானம் 1325-ஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டது; இது ‘பெண்கள்,சமாதானம் மற்றும் பாதுகாப்பு’ செயல்திட்டத்தைத் தொடங்கியது. மோதல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் அதிகப்படியான பாதிப்புகளை இத்தீர்மானம் அங்கீகரிப்பதுடன், அமைதி மற்றும் பாதுகாப்புச் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் வலியுறுத்துகிறது.
இனவெறி, இனப் பாகுபாடு, அந்நியர் மீதான வெறுப்பு (xenophobia) மற்றும் சகிப்புத்தன்மையின்மை, அத்துடன் மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராகத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பிரிக்ஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
உலகம் முழுவதும் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் அதிகரித்து வரும் கவலைக்குரிய போக்குகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
![]()