அதியுயர் இலக்கிய விருதான ‘சாகித்திய ரத்னா’ விருது பெறுகிறார் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன்

ஈழத்தின் மூத்த கவிஞரும், பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபருமான கவிஞர் சோ.பத்மநாதனுக்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (08.09.2026) மாலை-03 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான ‘சாகித்திய ரத்னா’ விருது வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 14.09.1939 இல் பிறந்து தற்போது கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார் கவிஞர்.பத்மநாதன். சிறப்புக் கலைமாணி, டிப்ளோமா கல்வி ஆகிய பட்டங்களைப் பெற்ற கவிஞர்.பத்மநாதன் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராக 18 வருடங்களும், ஆங்கில விரிவுரையாளராக 13 வருடங்களும், பலாலி ஆசிரிய கலாசாலை அதிபராக 03 வருடங்களும் கல்விப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கல்விப் புலமையாளனாக விளங்கிய பத்மநாதனுக்கு கவிதையின் பாலிருந்த மாபெரும் ஈடுபாடு அவரை ஒரு மாபெரும் ஈழத்துக் கலைஞனாக அடையாளப்படுத்தியது. கவிதை புனைவதில் மாத்திரமன்றி கவிதை அளிக்கையிலும் இவர் வல்லவராகத் திகழ்கிறார்.

1998 ஆம் ஆண்டு வடக்கிருத்தல், 2005 ஆம் ஆண்டு நினைவுச் சுவடுகள், 2010 ஆம் ஆண்டு சுவட்டெச்சம் ஆகிய கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கக் கவிதைகள், 2003 ஆம் ஆண்டில் தென்னிலங்கைக் கவிதை, 2011 ஆம் ஆண்டில் பர்மிய பிக்கு சொன்ன கதைகள், 2017 ஆம் ஆண்டில் தென்னாசியக் கவிதைகள் என்பன பிறமொழி படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்தன. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த படைப்புக்களாக 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த Tamil Short Stories From Srilanka, 2007 இல் வெளிவந்த Shamugalingam: Plays, 2014 இல் வெளிவந்த Srilankan Tamil Poetry, 2021 இல் Shanmugalingam Heaven With Hell ஆகியனவும் வெளிவந்தன. இவரது கவிதைகள் 2021 ஆம் ஆண்டில் Athirthikalkkappuram என்ற நூலாக மலையாள மொழியிலும், 2022 ஆம் ஆண்டில் வருத்தோபநிஷத் எனும் முதுமை பற்றிய தெலுங்குக் கவிதைகளின் தமிழாக்கமும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பும் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார்.
![]()