சிறைக்குள் நாமலுக்கு உயிராபத்து வரலாம்; அரசாங்கமே பாதுகாப்புக்கு பொறுப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சிறைக்குள் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அவரின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்தையே சாரும் என்று நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வெள்ளிக்கிழமை விளக்க மறியல் சிறை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால், கடந்த நாட்களில் அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தால், அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டம் குறித்து அரசாங்கத்திற்குப் பெரிய பயம் இருந்திருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பயத்தின் காரணமாகவே, அவர்கள் அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள் குறித்துச் சரியான ஆதாரங்கள் இல்லை. எயர்பஸ் நிறுவனமும் இவற்றை உறுதிப்படுத்தவில்லை. புனையப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருப்பது, முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை நாங்கள் அறிவோம்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை, ஆனால் தகுந்த சாட்சியங்களுடன் அது செய்யப்பட வேண்டும்.
அதேவேளை, அண்மையில் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் மற்றும் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, சிறையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்தையே சாரும். நாமலைச் சிறையில் அடைக்கலாம், ஆனால் மக்களின் இதயங்களில் இருக்கும் நாமல் ராஜபக்ஷவைச் சிறையிலடைக்க முடியாது. அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணியை திட்டமிட்டதை விட இரு மடங்கு, மூன்று மடங்கு பிரம்மாண்டமாக நடத்தி முடிப்போம்.
எங்கள் தலைவர்களைச் சிறையில் அடைப்பதன் மூலம் இந்த அரசியல் பயணத்தைத் தடுத்துவிட முடியாது. இது தற்காலிக பின்னடைவு மட்டுமே. அரசாங்கத்தின் இந்த பொய்க் குற்றச்சாட்டுகளால் மக்கள் நாமல் ராஜபக்ஷவுக்கு மேலும் ஆதரவளிப்பார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குப் பயந்து பின்வாங்கும் கட்சி அல்ல என்றார்.
![]()