பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 18 … செங்கதிரோன்

வாருங்கள்! வாசிப்போம்! எழுதுவோம்!
கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற அமிர்தகழி மாமாங்கேஸ்வர ஆலய வருடாந்த உற்சவம் இம்முறை ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொடியேறி 11 ஆம் திகதி தேரோட்டம் நடைபெற்று 12 ஆம் திகதி ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவ நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
ஆகஸ்ட் 6 ஆம் , 7 ஆம் , 8 ஆம் திகதிகளில் மாமாங்கேஸ்வரர் ஆலய வெட்டவெளி முற்றத்தில் ‘வாருங்கள்! வாசிப்போம்! எழுதுவோம்’ என எழுதப்பெற்ற பதாகை உட்பக்கத்தில் தொங்க உள்ளே போடப்பட்டிருந்த மேசைகளில் வரிசையாக அடுக்கப் பெற்றிருந்த பல்வகைப் புத்தகங்களுடன் பந்தர் ஒன்று அமைக்கப்பெற்றிருந்தது.
எழுத்தார்வலர்களினதும் – இலக்கிய ஆர்வலர்களினதும் – வாசிப்பார்வலர்களினதும் கவனத்தை இப்பந்தர் ஈர்த்தது.
மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பொதுநூலக வாசகர் வட்டம் நடத்திய இந்நிகழ்வு மேற்கூறப்பெற்ற தினங்களில் தினமும் பி.ப 4.00 மணியிலிருந்து ஆரம்பித்து இரவு 9.00 மணி வரை ஒழுங்கு செய்யப்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபையானது தனது வரியிறுப்பாளர்களுக்கு வழங்கும் வழமையான சேவைகளுக்கும் அப்பால் வாசிப்பையும் எழுத்தையும் மக்களிடையே பரவலாக்கும் எண்ணத்துடன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியமை பாராட்டுக்குரியது.
மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டத் தலைவர் த. யுவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல் நாளன்று (06.08.2026) பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு.சிவம் பாக்கியநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராகச் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணனும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் (07.08.2026) பிரதம விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக முறையே மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.நா. தனஞ்செயன் மற்றும் எழுத்தாளர் மண்டூர் அசோகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாள் (08.08.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் கௌரவ உறுப்பினரும் நூலகக்குழுத் தலைவருமான திரு.து.மதன் மற்றும் வாசகர் திரு.க.சிவராஜா (சித்தி) ஆகியோர் முறையே பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்களுமே வரவேற்புரையை மட்டக்களப்புப் பொதுநூலக நூலகர் த. சிவராணியும் நன்றியுரையை மட்டக்களப்பு பொதுநூலக வாசகர் வட்டச் செயலாளர் த.மலர்ச்செல்வனும் நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வை வாசிப்புப் பழக்கத்தையும் புத்தகப் பண்பாட்டையும் ஊக்குவிக்கும் முன்மாதிரியாகவும் ஒரு புதிய மூலோபாய முயற்சியாகவும் கருதலாம். வழிபாட்டுக்கு வருகை தந்த பக்தர்களை வாசிப்புப் பக்கமும் திரும்பிப் பார்க்கவைத்ததொரு பாராட்டத்தக்க பணி இதுவாகும்.
எல்லாமே எண்ணிம (னுபைவையட) மயமாகி மின்னிதழ்களும் – மின்னூல்களும் – முகநூல் பதிவுகளும் பெருகிவிட்டாலும்கூட அச்சு நூல்களினதும் அச்சு ஊடகங்களினதும் தேவைப்பாடும் அவற்றின் முக்கியத்துவமும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும் இந்நிகழ்வு உணர்த்திற்று.
• ‘வாசிப்பே ஒரு மனிதனை முழுமையாக்குகிறது’. நல்ல நூல்களின் வாசிப்பு மனித மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைப்பது மட்டுமல்ல மனித மனங்களைச் செழுமைப்படுத்தும் வல்லமையும் உடையது. மக்களிடையே வாசிப்புப் பழக்கம் பெருகுமாயின் குற்றச் செயல்கள்கூட குறைவதற்கு இடமுண்டு.
• ஒவ்வொரு வீட்டிலும் பூசை அறை இருப்பதுபோல புத்தக அறையொன்றும் இருக்க வேண்டியது அவசியம். இதில் பெற்றோருக்குப் பெரும் பங்குண்டு. அதேபோன்றே ஒவ்வொரு பாடசாலையிலும் நல்லதொரு நூலகம் அமைவதும் மாணவர்களின் புறக்கிருத்தியங்களிலொன்றாக நூலகம் சென்று நூல்களை வாசிக்கத்தூண்டுவதும் அவசியமான பணிகளாகும். இதில் பாடசாலை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாரிய கடமை இருக்கிறது.
• இயந்திர நாகரிகமும் – பூகோளமயமாக்கலும் – தகவல் தொழில் நுட்பத்தின் அதீத
வளர்ச்சியும் நமது மண்ணின் கலை இலக்கிய பண்பாட்டு விழுமியங்களிலும் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் – இயற்கைச் சூழலிலும் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்திவரும் காலகட்டத்தில் அவற்றைக் கற்பழிந்துவிடாமல் காப்பாற்றிப் பேணுவதற்கான பிரக்ஞையை ஊட்டுவதற்கும் வாசிப்பு சிறந்ததொரு முக்கியமான ‘ஊக்கி’ ஆகும்.
• இன்று உலகம் முழுவதும் பழமையையும் பாரம்பரியங்களையும் நோக்கி நகர்கிறது. நவீனத்துவத்தில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. டென்மார்க் நாட்டில் வாசிப்பும் மாற்றத்தைக் காணத்தொடங்கிவிட்டது. அங்குள்ள நூல்நிலையங்கள் ‘முதுசொம்’ களின் கூடாரமாகின்றன. புத்தகங்களை வாசிக்க முன்னர் உன் முதுசொம்களிடமிருந்து அனுபவத்தைப்படி – அனுபவத்தைப்பெறு என்ற விடயம் மேலெழும்பிவிட்டது. இப்போது புத்தகங்களுக்குப் பதிலாக முதுசொம்களைப் படிக்கின்ற முறைமை வளரத்தொடங்கி விட்டது. இதைத்தான் ‘ஒரு முதுசொம்மின் இறப்பு பல நூல் நிலையங்களில் அழிவுக்குச் சமன்’ என ஆபிரிக்கப் பழமொழியொன்று சொல்கிறது.
இவ்வாறான பல பயனுள்ள விடயங்கள் இந்த மூன்று நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர்களிடையே கலந்துரையாடப் பெற்றன. இந்நிகழ்வு மட்டக்களப்பு மண்ணில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அதாவது அறிவுபூர்வமானதொரு சமூகத்தை நிர்மாணம் செய்வதற்கான அத்திவாரம் என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல.
இந்த நிகழ்வின் ஒரு முக்கியமான அம்சம் யாதெனில் மூத்த வாசகர் ஒருவர் கௌரவ விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தமையாகும்.
ஆம்! மூன்றாம் நாளன்று (08.08.2026) கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த திரு.க.சிவராஜா (சித்தி) அவர்களே அந்த வாசகர் ஆவார். முதுமையடைந்து நடக்கவும் சற்றுச் சிரமத்தோடு முச்சக்கரவண்டியில் வந்திறங்கி கைத்தடியை ஊன்றிக்கொண்டுவந்து அவர் கலந்துகொண்டமை மட்டுமல்ல அவரது உரையில் தன்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமை இந்நிகழ்வின் முத்தாய்ப்பாகும்.
பொதுவாக இவ்வகை நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாசகர் விருந்தினராக அழைக்கப்பெறுவது தன்னுடைய வாழ்நாளில் இதுதான் முதல் தடவையாகக் கேள்விப்படுகிறேன் என்று தமிழ்நாட்டிலே ‘மேலும்’ என்றதொரு சஞ்சிகை நடாத்திய பேராசிரியர் சிவசு அவர்கள் தன்னிடம் தொலைபேசி உரையாடலில் கூறியதாக இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மட்டக்களப்பு பொதுநூலக வாசகர் வட்டத்தலைவர் த. யுவராஜன் தன் தலைமையுரையின்போது குறிப்பிட்டார்.

‘சித்தி’ என அழைக்கப்பெறும் க. சிவராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் – 4 ஆம் குறிச்சி தமிழ்ப்பகுதியில் 1947 இல் பிறந்தவர். 1965 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி இடதுசாரி அரசியலில் இன்றுவரை இருப்பவர்.
மட்டக்களப்பில் தங்கவடிவேல் (கவிஞர் சுபத்திரன்) – யோகநாதன் (சாருமதி) – தோழர் கிருஸ்ணக்குட்டி ஆகியோருடன் ஊடாடியவர். 1965 இலிருந்து தோழர் கிருஸ்ணக்குட்டி 1978 சூறாவளியின்போது இறக்கும்வரை அவருடன் நெருக்கமாக இருந்தவர். 1987 இல் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்கீழ் அமைக்கப்பெற்ற (தற்காலிகமாக) இணைந்த வடகிழக்கு மாகாண அரசின்கீழ் மட்டக்களப்பு மாவட்டக் கச்சேரியில் பொதுசனத்தொடர்பு அதிகாரியாகக் கடமை புரிந்தவர். அந்த மாகாண அரசின் நிர்வாகத்துடன் இருந்த நெருக்கம் காரணமாகப் பாதுகாப்பின் நிமித்தம் இந்தியாவுக்குச் சென்று அங்கும் சில மாதங்கள் கழித்துப்பின் நாடு திரும்பியவர். எந்தக்காலத்திலும் தன் வாசிப்பைக் கைவிடாதவர். இந்த வயதிலும் (79) வாசித்துக் கொண்டேயிருப்பவர். இத்தகைய ஒருவரை கௌரவ விருந்தினராக அழைத்துக் கனம் பண்ணியமை பாராட்டதக்கதே. அன்றைய தினம் அவர் ஆற்றிய உரைச்சுருக்கம் இதோ.
“நான் எனது பாடசாலை வாழ்வை ஐந்தாம் ஆண்டுகளுடன் எனது விருப்பப்படி நிறுத்திக் கொண்டேன். பின்னாளில் ஒரு நாளும் நான் அதற்காக வருத்தப்படவில்லை. வாழ்வதற்காக எனக்கு ஏற்ற ஒரு தொழிலை ஏற்றுக்கொண்டேன். அதன் பின்பு எனது வாழ்வில் பலதும் இடம்பெற்றது. பாடசாலைப் படிப்பை விட்டபோதிலும் எனது புத்தகப் படிப்பை – வாசிப்பை நான் கைவிடவில்லை. அதை என் வாழ்நாள் முழுவதுமாக இன்றும் தொடர்கிறேன். மட்டுநகரில் உள்ள பொதுவாசிகசாலையே எனது சர்வகலாசாலையுமானது. அதில் அங்கத்துவம் பெற்று புத்தகங்கள் எடுத்துப் படிக்க மிக ஆவலடைந்தேன். 1965ம் ஆண்டில் எனது 18வது வயதில் அது நிறைவேறியது. என்னை அதில் சேர்வதற்கு மிக உதவியவர் எனது மைத்துனர் உறவான திரு. வடிவேல் அவர்கள். அவரை அன்புடன் நினைவு கொள்கிறேன். அந்த வாசிகசாலை மட்ஃநீதிமன்றத்துக்கு அருகில் இருந்தது. (இப்போது அது வேறு இடம் மாறிவிட்டது) அன்று ஒரு அங்கத்தவருக்கு இரண்டு புத்தகங்கள் இரவல் கொடுக்கப்பட்டது. அதைப் 15 நாட்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். விரும்பினால் மீண்டும் 15 நாட்களுக்கு அதைப் புதுப்பித்துத் தருவார்கள். அன்று எனது வாசிகசாலை அங்கத்துவ அட்டை இல. 644 ஆக இருந்தது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சி இன்றும் மகிழ்வைத் தருகிறது. நான் எனது அங்கத்துவ அட்டைக்கு இரண்டு புத்தகங்கள் எடுத்தேன். ஒன்று சிந்தனையாளர் டார்வின் எழுதிய உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றியது. அதை ஜெகசிற்பியன் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். மற்றது சிந்தனையாளர் இங்கர்சால் எழுதிய கடவுள், மதம் பற்றிய ஒரு சிறந்த புத்தகம். பின்பு எனது வாழ்வும், புத்தகசாலையும் ஒன்றாகத் தொடர்ந்தது.”
பந்தர் அமைத்து இந்த மூன்று நாளும் வாருங்கள்! வாசிப்போம்! எழுதுவோம்! என்ற கருப்பொருளில் வாசிப்பின் இன்றியமையாமையை உணர்த்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது அந்த பந்தரைப் பார்த்துச் சென்றவர்களும் உண்டு. நின்று நிதானமாக வாசித்துக் கேட்டுச் சென்றவர்களும் உண்டு. குழந்தைகளை அழைத்து உள்ளே வந்து குழந்தைகளுக்கு விளக்கம் கொடுத்த தாயும் உண்டு. தரம் ஒன்றிலே கற்கின்ற தரம் மூன்றில் கற்கின்ற இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்து வந்த அந்த இளம் தாய் வாசிப்பின் பெருமையை உணர வைத்த தருணத்தை என்னவென்று சொல்வது. இப்படி எல்லோரும் இருந்து விட்டால் வாசித்தல் பேசுதலாகக்கூட மாறிவிடும். நாங்கள் எல்லோரும் பெரும்பாலும் வாசித்ததை நமக்குள்ளே மட்டும் வைத்திருப்பது பொருத்தமானது அல்ல வாசித்தல் பேசுதலாகவும் மாற வேண்டும். அந்த வகையில் பார்க்கின்றபோது அந்தத் தாய் அந்த குழந்தைகள் மிகவும் கவனத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வாசிப்பின் ஆர்வம் ஒரு நல்ல ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது.
![]()