கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!…  தொடர்- 13….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

மாடசாமி அண்ணாச்சி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார் என்று கடந்த தொடரில் கூறியிருந்தேன் அல்லவா? நான் எப்போதும் சொல்லும் இயற்கைதான் கடவுள் என்ற உண்மைதான் அது. மவுண்ட் ப்யூஜி போன்று ஏழுமலையானும் இயற்கை எனும் கடவள்தான். ஏழுமலயானுக்கு சருகண்டி சருகண்டி போல மவுண்ட் ப்யூஜிக்கு மேகமும் மழையும்.

எல்லாவற்றிற்கும் கொடுப்பினை என்று ஒன்று வேண்டும். இயற்கையையே கடவுள் என்பவனும் மனிதன் பாதி மிருகம் பாதி என்று சொல்வதுபோல் இயற்கை வேறு கடவள் வேறு என்பவனும் ஒருவேளை சொர்க்கத்தில் சந்தித்துக் கொண்டால் யாருக்கு கொடுப்பினை என்பதை உங்களிடமே விடுகிறேன். ஆனால் எனக்கு கொடுப்பினை வானம் இருண்டு போகவில்லை.

ஷிஸுவோகா ரயில் நிலையத்தை தாண்டியதுமே தயாராக இருந்தேன். அத்தோடு மழையோ மேக கூட்டமோ வந்து மவுண்ட் ப்யூஜியை முழுவதுமாக மறைக்க வில்லை. குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஐந்து பத்து நிமிடங்களில் மவுண்ட் ப்யூஜியை நன்றாக பார்க்க முடிந்தது. ஆதலால் மவுண்ட் ப்யூஜிக்காக ஹஹோன் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மவுண்ட் ப்யூஜியை பார்த்த மகிழ்ச்சியில் இருந்து விடுபடுமுன்னே ரயில் டோக்கியோ நிலையத்தை வந்தடைந்தது. டோக்கியோ ரயில் நிலையம் எத்தனை பெரியது என்பதை என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு பெரியதாக இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து வெளிவருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. ஆங்கிலத்தில் அறிவிப்பு இருந்தும் திண்டாட வேண்டியிருந்தது.

ஒரு வழியாக வாடகை கார் நிற்கும் இடத்தை அடைந்தோம். என் கையில் தயாராக வைத்திருந்த ஹோட்டலின் விலாசத்தைக் காட்டி இந்த ஹோட்டலுக்கு போகவேண்டும் வருகிறீர்களா என்று “ஹொனொ ஹோட்டரு நி கிடே இடாடிகேமசு கா?” மனப்பாடம் செய்து வைத்திருந்த ஜப்பானிய மொழியில் கேட்டு அவன் ஓம் என்பதுபோல் தலையசைக்க ஒலிம்பிக் பரிசுமேடையில் ஏறுவது போன்ற பெருமிதத்துடன் வாகனத்தில் ஏறினேன்.

அப்போது என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். நான் ஒரு சிறுத்தையை வென்று தோளில் போட்டிருப்பது போல் பெருமையாக பார்த்தாள். கல்யாண பரிசு படத்தில் தங்கவேலு, “எப்பா, பைரவா நீ யார் பெற்ற பிள்ளையோ? நீ வாழ்க, உன் குலம் வாழ்க” என்று தனது மனைவியிடம் எழுத்தாளருக்கான பரிசு கிடைத்ததாக பொய் சொல்லும்போது அந்த எழுத்தாளனை மனதுக்குள் பாராட்டுவான்.

அதுபோல் நானும் அந்த மொழிமாற்ற உதவும் செயலியை மனதில் பாராட்டிக் கொண்டேன். இதை எல்லாம் சொன்னால் புரியாது. அனுபவத்தில் உணரவேண்டும். ஒரு பைசாவுக்கு பயனில்லாத ஒருவரை ஒரு கோடீஸ்வரனைப் புகழ்வதைப்போல் புகழும்போது ஏற்படும்போது மகிழ்ச்சியை எப்படி இருக்குமென அதைச்சொல்லி மாளாது. அதற்காக ஓடும் மக்களை நாம் வாழ்நாளில் பார்த்திருப்போம்.

“ரெம் ரொப்பாங்கி” என்ற அந்த ஹோட்டலில் வாகனம் நின்றதும் ஓட்டல் பயணிகள் பயணப் பொதிகளுடன் வரவேற்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கு செக் இன் செய்துவிட்டு அறையை அடைந்து சிறிது நேரத்தில் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.அன்றைய பாதி நாளை வீணடிக்க விரும்பாததால் தயாரித்திருந்த அட்டவணைப்படி “ஷிபுயா கிராஸிங்” சென்றோம்.

முதலில் அந்த கிராஸிங் என்பதை சொல்லி விடுகிறேன். அது ஒரு இண்டர்செக்சன். ஆனால் அதை ஒரு சாதாரண சந்திப்பாக சொல்லிவிட முடியாது. உலகத்திலேயே அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் கடந்து செல்லக்கூடிய மிகவும் பெரிய இண்டர்செக்சன் ஆகும். சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியதுமே நேராகவும் குறுக்கவும் பலதிசைகளில் இருந்தும் மக்கள் சாலையைக் கடக்க ஆரம்பிப்பார்கள்.

ஒரு சாலை சிவப்பு விளக்கு எரிந்ததும் மற்ற சாலையில் பச்சை விளக்கு எரிந்து வாகனங்கள் சாலையைக் கடக்காது. எல்லா சாலை சிவப்பு விளக்குகளும் ஒரே நேரத்தில் எரியும். அப்போது ஒருகட்டுப்பாடின்றி எல்லா திசைகளில் இருந்தும் பச்சை விளக்கு எரியத் தொடங்குமுன் கிட்டத்தட்ட மூவாராயிரம் பேர் அந்த சந்திப்பை கடந்து செல்வார்கள்.

ஊசிபோட்டால் ஊசி எடுக்க முடியாது என்பார்களே அதைப்போன்று அவ்வளவு நெருக்கமாக மக்கள் தோளோடு தோள் உரசியபடி செல்வதைப் பார்க்கமுடியும். உடனே மாடசாமி அண்ணாச்சி என் மூக்கை உடைக்க ஓடோடி வருகிறார். அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்டுப் பார்ப்போம். என் தலையில் நறுக்கென்று குட்டு வைத்தது போல் கேட்ட கேள்வி என்னைப் பதில் சொல்லமுடியாது திணற வைத்தது.

கேள்வி என்ன தெரியுமா? முற்றத்து முல்லைக்கு வாசமல்லை என்ற மலையாள பழமொழியைப் போல நம்ம ஊர்த் தேரோட்டத்தில் உள்ள கூட்டத்தை மறந்து இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாயே என்று என்று கேட்டு என் மூக்கை உடைத்தார். அவருக்கு தக்க பதிலைச் சொல்லாவிட்டால் கதையாவது கட்டுரையாவது மூட்டையைக் கட்ட வேண்டியதுதான் என்ற நிலைக்கு தள்ளினார்.

அவர் முகத்தில் என்னை மட்டம் தட்டியது கிரிக்கெட்டில் பாட்ஸ்மேன் சிக்ஸர் அடித்ததுபோல் தெரிய என்னை ஏளனமாகப் பார்த்தார். அவருக்கு சரியான பதிலைச் சொல்லாவிட்டால் ஏற்கனவே என்னைக் காலை வாரிவிட காத்திருப்பவர்கள் கொண்டாடும் விதமாய் எனது அன்பான வாசகர்கள் முன் என்னை செல்லாக் காசாக்கி விடுவார்.

திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்பதுபோல் எனக்கு ஏழுமலையான் துணை செய்தார். இயற்கை எல்லோர்க்கும் பெய்யும் மழையாக இங்கு ஏழுமலையானை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு பதிலைச் சொன்னேன். அண்ணாச்சி இது தானாச் சேர்ந்த கூட்டம் என்றேன். பிள்ளயார் கோவிலில் சுண்டல் கொடுக்காவிட்டால் அவ்வளவு கூட்டம் கூடுமா என்றேன். கோவிலில் அன்னதானம் இருக்கும்போது இருக்கும் கூட்டம் எப்போதும் இருக்குமா? என்றேன்.

நெல்லைத் தோரோட்டத்தில் பூதத்தான் முக்கில் கூடும் கூட்டம் அடுத்த நாள் கூடுமா? என்றும் கேட்டேன். ஒருவேளை கூட்டம் கூடும், எப்படி? பந்தல்போட்டு ரெக்கார்டு டான்ஸ் ஆடினால் பல் விழுந்த தாத்தாகூட பொக்கை வாயைப் பிளந்தபடி பார்க்கும்போது மற்றவர்களும் அலைமோதும்படி கூட்டம் கூடவே செய்யும் என்றேன். அதெல்லாம் ஒருநாள் கூத்து. இது அப்படியில்லை தினமும் சுண்டல் கொடுக்காமலே கூடுகிறது என்றேன்.

அவர் ரியாக்‌ஷனைப் பாருங்கள். கீழே கிடந்த ஒரு பறவுயின் இறகை எடுத்து ஊதி அதை உதறினார். இறக்கின் நுனியில் சிறிது மயிரை மட்டும் விட்டுவிட்டு எல்லா மயிர்களையும் பிடுங்கினார். என்ன செய்யப்போகிறார் என்று ஆவலாகப் பாரத்தேன். இறகில் சிறிது மயிர்ப்பகுதியுடன் இருந்த நுனிப்பகுதியை லாவகமாக காதில்விட்டு காதைக் குடைந்து கொண்டிருந்தார். அவர் என்னையும் எனது பதிலையும் கண்டு கொள்ளவில்லையாம்.

சரி, அவர் அப்படித்தான். நல்ல மனிதர் என்ன இருந்தாலும் அண்ணாச்சி அல்லவா? அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். என் வாசகர்கள் முன் அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்து விட்டேன் என்ற மன நிறைவு ஒன்றே போதும். கட்டுரைக்கு வருவோம். இந்த கிராஸிங்கை மாலை ஆறு மணிக்கு மேல் எட்டுமணி வரை பார்க்கும் போதுதான் நியான் விளக்குகளுடனும் உயர்ந்த கட்டிடங்களுடனும் பார்க்கும்போது ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்.

(தொடரும்…)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *