முச்சந்தி

பாலியல் குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரே நாளில் தலா 15 வருட கடூழியச் சிறை; வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

16 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த மூவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹினிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது நிரம்பிய,தனது மகளின் நண்பியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 15 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தண்டனைக்கு மேலாக 50,000 ரூபா தண்டப் பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்டஈடாக ஒரு மில்லியன் ரூபாவும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சிறுமி தங்கியிருந்த போது அங்கு வைத்து 10 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதையும் பாதிப்பையும் கவனத்தில் கொண்டு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபா குற்றப்பணமும் விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

மூன்றாவது சம்பவமாக, இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது நிரம்பிய சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், நபரொருவர் குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் 2022 ஆம் ஆண்டு, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் குற்றச் சம்வங்களைப் புரிந்த குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 50,000 ரூபா குற்றப் பணமும் விதிக்கப்பட்டதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *