13 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தைக்கு 40 வருட கடூழியச் சிறை; வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்பு!

13 வயது நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 40 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா வியாழக்கிழமை (03) தீர்ப்பளித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கின் குற்றப் பத்திரம் 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இந்தச் சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ள நிலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இரு சந்தர்ப்பங்களிலும் தந்தை போதைப் பொருள் உபயோகித்த நிலையில் வீட்டிலே வைத்து இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்துள்ளார்.
இந்த நிகழ்வுகளால் அந்தச் சிறுமி கருத்தரித்ததுடன், மகப்பேறு மருத்துவர், மனநல வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி கொண்ட குழாம் சிறுமியைப் பரிசோதித்து அவருக்கு ஒரு குழந்தையைத் தாங்கக்கூடிய உடல் வலு, மனோதிடம் மற்றும் முதிர்ச்சி இல்லை என்றதன் அடிப்படையில் சட்ட ரீதியான கருக்கலைப்பை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திலே கொண்டே கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா இழப்பீடும் (ஒரு மில்லியன் ரூபா ) நஷ்டஈடு செலுத்த வேண்டுமெனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிகமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
![]()