நல்லூர் நீர்க் கண்காட்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்த’ நீர் தான் நீரே தான்’ நாடக ஆற்றுகை

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது தடவையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் கடந்த புதன்கிழமை (02) மாலை ஆரம்பமானது.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக,செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் ‘ நீர் தான் நீரே தான் ‘ நாடக ஆற்றுகை அரங்கேறிப் பலரது கவனத்தையும் ஈர்த்தது. நீர்க் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நீர்வள அதிகாரிகள், ஆர்வலர்கள் மேற்படி நாடகத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பொதுக் கிணறுகளில் ஊரிலுள்ள குடும்பங்கள் நீரைப் பகிர்ந்து அளவாக பயன்படுத்திய காலம் போய் வீட்டுக்கொரு கிணறு மூலம் அளவாக வாளிகளில் நீரை அள்ளிய காலமும் கடந்து தற்போது காணிகளைச் சிறு சிறு துண்டுகளாகப் பிரித்து ஒவ்வொரு காணிக்கும் ஒரு குழாய்க்கிணறு அடித்து சமூகப் பொறுப்பின்றி நிலத்தடி நீரை வேண்டியளவுக்கு உறிஞ்சுவதால் கடல் நீர் உட்புகும் அபாயம் தொடர்பாகவும், அதனூடாக வரும் விளைவுகளையும் மேற்படி நாடகம் தத்ரூபமாகப் பதிவு செய்திருந்தது.
![]()