இலங்கை

ஷிரான் பாசிக்கிடமிருந்து சலுகை; சிக்கப் போகும் பத்து முன்னாள் அமைச்சர்கள்!

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பிரபல பாதாள குழு முக்கியஸ்தரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, பல கோடி ரூபா பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் பிரபல அரசியல்வாதிகள் 10 பேரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் கிடைக்கப்பட்ட தகவல்களுக்கமையவே குறித்த அரசியல்வாதிகளிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளிடையே முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர், முன்னாள் அமைச்சர்கள் இருவர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் பிரசார நடவடிக்கைகளுக்காக ஷிரான் பாசிக்கிடமிருந்து இவர்கள் அதிக அளவிலான பணத்தைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் பிரபலமான முன்னாள் அமைச்சர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் காணிகளை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்கு ஷிரான் பாசிக்கிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, அதற்காக அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு தகவல்களை ஆதாரமாக கொண்டு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வெளிவரும் தகவல்களுக்குமைய, அவருடன் தொடர்பிலிருந்த மற்றும் பணம் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button