சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அழைப்பை தாயகச் செயலணி விடுத்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு அதனைச் சிறப்பிக்க வேண்டும் என்று தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழர்களின் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம் – இரண்டு” போராட்டத்தின் இறுதி நாளில் வாசிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தாயகச் செயலணி தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஐ.நா. கூட்டத் தொடரில் அந்த அறிக்கை நேரடியாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகளும் முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அறிக்கையில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்றும் தாயகச் செயலணி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்குத் தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.
![]()