இலங்கை

இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற பலரை இந்தக் கிணற்றில்தான் போட்டு மூடினோம்; மண்டைதீவு படுகொலையின் சாட்சியான தாய் தெரிவிப்பு

1990 இல் மண்டைதீவு பகுதியில் இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற பலரை இந்தக் கிணற்றில்தான் போட்டு மூடியதாக மண்டைதீவு படுகொலையின் சாட்சியான தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு படுகொலை நினைவேந்தல் நேற்று முன்தினம் புதன்கிழமை மண்டைதீவில் இடம்பெற்றபோது ஊடகங்களுக்கு சிலர் கருத்து தெரிவித்தனர்.

அங்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும், படுகொலை செய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இதன்போது மகனை இழந்த தாயார் ஒருவர் கூறுகையில்,

1990 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 26 ஆம் திகதி, நாங்கள் ஒரு வீட்டில் உள்ள பங்கருக்குள் இருந்தோம். அந்த வீட்டில் விடிய 6 மணிக்கு இராணுவம் வந்தது. வீட்டில் படுத்துக்கிடந்தவரை எழுப்பி எல்.டி.டி.ஈ (தமிழீழ விடுதலைப் புலிகள்) என்று சொல்லி பக்கத்திலிருந்த ஒரு பையன் சொன்னான். எல்.டி.டி.ஈ தானா என்று இராணுவம் கேட்க, நான் சொன்னேன் “இல்லை அவர்கள் எல்.டி.டி.ஈ இல்லை, நாங்கள் தொழில் செய்பவர் என்று சொல்லி சொன்னோம். அந்த பையன் பக்கத்துல நின்ற பையன் இல்லை இல்லை இல்லை, பூரா எல்.டி.டி.ஈ தான்” என்று சொன்னான்.

அதோடு என் பிள்ளையை எட்டிப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். இழுத்துக்கொண்டு போன பிள்ளையின் பின்னாலே போனேன், அங்கே ஒரு கொஞ்ச தூரத்துக்கு பக்கத்துல வீட்டின் பின்புறத்தில் அம்மா என்று கூப்பிட்டு சத்தம் கேட்டது அதன் பின் எனது மகனைக் காணவேயில்லை.

என்ர புருஷன் போய் கால்ல விழுந்து கெஞ்சி, என் பிள்ளையை விடுவிக்க கேட்டார். அவர்கள் கேட்கவில்லை. ஒரு கொஞ்ச நேரத்தில் மூன்று சுட்டு சத்தம் கேட்டது.

1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது. இந்தக் கோரச் சம்பவத்துக்கு நாங்கள் சாட்சி. அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பலரது உடல்களில் சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.

அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன.

பின்னர் ஒரு பாதிரியார் வீட்டுக்கு கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.சாட்டியில போய் கொஞ்ச நாள் இருந்தோம். பின் அங்கிருந்து உறவினர்கள் எங்களை கொண்டு பள்ளிக்கூடத்துல விட்டார்கள். நாங்கள் சிறுது காலம் பின்னர் திரும்பி வரும்போது வீடு வாசல் ஒன்றும் இல்லை.

இந்தக் கிணத்தில் உடுப்பு கிடக்கு, இந்தக் கிணத்துல தான் உன்ர பிள்ளையை போட்டது? எண்டு ஒரு ஆள் சொன்னது. அந்தாள் இப்ப செத்திட்டு.

என் மகள் ஒரு பனியன் ஒன்று கண்டுபிடித்து இரத்தக் கறையோடு எடுத்துக்கொண்டு வந்தாள்.நாங்கள் அந்த பனியனை கொண்டு திரிஞ்சோம் கனகாலம். அதன் பின் வீடு வாசல் இல்லை. நாங்கள் கொஞ்ச நாள் வீட்ல வந்து, ஒரு கொட்டில் போட்டு இருந்தோம். பின்னர் இரண்டாம் முறையும் திரும்பி வர அந்த வீடும் இல்லாமல் குண்டு வச்சுட்டாங்க – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button