ஓ.எம்.பி.அலுவலகத்திற்கு எதிராக யாழில் போர்க் கொடி; இன்று போராட்டத்திற்கு அழைப்பு

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின்(ஓ.எம்.பி.)ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின்(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ள நிலையிலேயே அதனை கண்டித்து பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()