நமது முன்னோர் உருவாக்கிய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மாற்றலாமா?… சின்னத்தம்பி குருபரன்


“அவரவர் தமக்குரிய ஆயுளும் கல்வியும், தொழிலும் வாழ்க்கையும்
எழில், செல்வம், மரணம் இவை ஏழும்
தவமுடைப் பிரம்மதேவன் தமது கைப்பட்டுத் தொடங்கு முன்னே சிவன் அருளினாலே கருவிலே உருவானது” – விவேகசிந்தாமணி
நமது முன்னோர்களில் பலர் நீதி, நியாயம், நேர்மை, பணிவு, அடக்கம் ஆகிய சிறந்த பண்புகளுடன் வாழந்து மறைந்திருக்கினறனர். அவர்களின் வாழ்க்கை நமக்குப் பல படிப்பினைகளை உணர்த்திச் சென்றிருக்கின்றன. இந்த உடலுக்குள் உயிரைக் கொடுத்த இறைவன் நமக்கென்றொரு விதியையும் எழுதி வைத்திருக்கிறான் என்பது மேலுள்ள பாடல். அந்த விதிக்கப்பட்ட வாழ்க்கையை நாம்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும். அந்த வாழ்க்கையைத் திறம்பட வாழ்ந்து முடிப்பதற்காக பரிசம், ரசம், கந்தம், ரூபம், ரூபாரூபம், பகுத்தறிவு ஆகிய ஆறறிவையும் தந்திருக்கிறான்.
‘மனிதம் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை’ இந்த உடல். உடலுக்குள்ளே உயிர். நம் மூளை மிருக குணமும், மனித குணமும் சேர்ந்த கலவையாக இயங்குகிறது. நமது மூளையின் முன்பகுதி மனித குணத்தையும், பின்பகுதி மிருக குணத்தையும் வெளிப்படுத்தத் தக்கவாறு அமைந்திருக்கின்றன என்பது அறிவியல். நல்ல, நேரான விடயங்கள் முன் மூளையாலும், எதிர்மறையான விடங்கள் பின் மூளையாலும் கையாளப்படுகின்றன. ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பது ஔவையார் வாக்கு. அதன் அடிப்படையில் ஒருவரின் குணம் அவரது பரம்பரை, வாழும் சூழல், அவர் கூடும் நபர்கள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் அவர் பெறும் கல்வி, ஒழுக்க நெறி முறைகள், விழுமியப் பண்புகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
மனித வாழ்க்கையில் பல சம்பவங்கள், நிகழ்வுகள் நாம் அறியாமலே நடந்தேறும். இதில் கனவுநிலை, நனவுநிலை, நனவிலி நிலை ஆகிய ஆளுமைப் பண்புகளும் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன. மனதில் தோன்றும் உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன நமது நடத்தைக் கோலங்களைத் தீர்மானிக்கின்றன. மனித நடத்தையின் பெரும்பாலானவை நனவு நிலையிலேயே நடக்கின்றன. இவை நமது மனதிலும் மூளையிலும் கட்டமைக்கப்பட்டவையாக வெளிப்படுகின்றன. எதிர்மறையான விடயங்கள் நமது மனதை அழுத்தும்போது அவை பின் முளையில் பதிவிடப்பட்டு முளைக்கு இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் மனவெழுச்சி, கோபம், தன்முனைப்பு, பதட்டம், பதகளிப்பு, நெருக்கீடு ஆகிய எதிர்மறையான உணர்வுகள் தோன்றி மனதுக்கும் மூளைக்கும் இடையில் ஒரு போரட்டத்தையே ஏற்படுத்தி விடுகின்றன. இந்த நேரத்தில் தலை வலிக்கும். தலை பாரமாக இருக்கும். முகத்தில் தசைநார்கள் இறுக்கமடையும். நேரான (Positive) சிந்தனையின்போது இத்தகைய தாக்கங்கள் மனதிலும் மூளையிலும் ஏற்படாது. நோய் குறையும், ஆயுள் அதிகரிக்கும். மனதில் சந்தோசம், மகிழ்ச்சி தோன்றும். அதனால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
எது எப்படி இருந்தாலும் ஒருவரின் பிறப்பு, ஆயுள், கல்வி, தொழில், வாழ்க்கை, அழகு,, செல்வம், மரணம் ஆகியன இறைவன் எழுதியதன்படியே நடந்தேறும் என்கிறது சமய நூல்கள். இதன் உண்மை, பொய்மை பற்றி நான் இங்கு கூறவரவில்லை. கல்வி, தொழில், வாழ்க்கை ஆகியவற்றைப் பகுத்தறிவைக் கொண்டு நாம் வடிவமைத்துக் கொள்ளலாம். ‘தாரமும் கல்வியும் அவரவர் தலைவிதிப்படி’ என்ற வாக்கிற்கு இணங்க நிர்ணயிக்கப் பட்டிருக்கும். அவற்றை நேரான சிந்தனைகள் ஊடாகத் திட்டமிட்டு நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நாம் செல்லும் பாதை நமக்குத் தெரிய வேண்டும். மனம் போன போக்கில் நாம் பிரயாணம் செய்யக் கூடாது. இதையே கவிஞர் கண்ணதாசன்
‘மனம் போன போக்கிலே கால்கள் போகலாமா? கால்கள் போன போக்கிலே மனம் போலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?, மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? எனப் பாடி நேரான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கின்றார். எவரொருவர் மனதையும் புத்தியையும் அலையவிடாது சமநிலையில் பேணித் தமது நடத்தையை வடிவமைத்துக் கொள்கிறாரோ அவரே சிறப்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வார்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான பழக்க, வழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள், சமய, கலாசார, ஒழுக்க, விழுமியங்கள் யாவும் நமது முன்னோர்களால் காலத்துக்குக் காலம் நமக்காக உருவாக்கிக் கையளிததாகும். கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரையும் இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் மாத்திரம் சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு இயற்றப்பட்டு வந்திருப்பதை இலக்கியங்களுளுக்கூடாக அறிகிறோம். பல்லவர் ஆட்சிக் காலத்தில் இருந்து பல்லவ மன்னர்களால் பாரிய எடுப்பிலான கற்கோயில்களும், கற்சிலைகளும் அமைக்கப்பட்டு வழிபட்டு வந்திருக்கின்றனர். ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் இருந்து இறைவனுக்கு உருவம் கொடுக்கும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
இறைவர்களுக்கு உருவம் கொடுப்பதில் திருஞான சம்பந்தமூர்ர்த்தி நாயனார் பெரும் பங்காற்றி இருக்கின்றார். தம்மைப் போல், தம்மைவிட இறைவர்களும் அழகாக இருப்பார்கள் எனக் கொண்டு ஓவியங்கள், சித்திரங்களை வரைந்தார்கள், அதைக் கொண்டு சிலைகளை வடித்தார்கள் இவ்வாறுதான் மக்கள் மத்தியில் உருவ வழிபாடு பிரபலம் பெற ஆரம்பித்தது.
ஒன்றை ஒருவர் பின்பற்றினால் பழக்கமாகிறது. அதனைப் பலர் பின்பற்றினால் பழக்கம் வழக்காகிறது. சமூகம் பின்பற்றினால் மரபு, சம்பிரதாயமாகிறது. ஒரு இனம், அல்லது மதக் குழுமம் பின்பற்றினால் அது ஒழுக்கலாறு, பண்பாடாகிறது. இவ்வாறுதான் கோடபாடுகள், விதிகள், சட்டங்கள் உருவாகி நம்மை இயக்கி, வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பழக்க, வழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள் என்பவற்றில் பல போலிகளும், மூடநம்பிக்கைகளும் இருக்கின்றன. அவற்றை அன்னம் போல் வேறு பிரித்துக் களைந்தெறிவதும் நமது கடமையாக இருத்தல் வேண்டும். இன்று சில போலிகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்குமாகப் பல ஆயிரங்கள், இலச்சங்கள் விரயம் செய்யப்படுகின்றன.
இதனைப் பல வீடுகள், கோயில்கள், விழாக்கள், சடங்குகள். சம்பிரதாயங்களிலும்
காணலாம். இத்தகைய பல நிகழ்வுகள் மக்கனிடத்தில் பல மூடநம்பிக்கைகளைத் தோற்றுவித்து விடுகின்றன. பூசை, புனஸ்காரம், பரிகார பூசை, பிரயச்சித்தம், தோச நிவர்த்தி, அர்ச்சனை, பில்லி, சூனியம், கழிப்பு, பேய், பிசாசு, ஆட்டுச் சடங்கு, பலி கொடுத்தல், காணிக்கை, நேர்த்திக்கடன், தட்சணை, உபயம், விரதம், மடிப்பிச்சை ஆகியன ஏன், எதற்கு, எதற்காக என்றில்லாமல் அவர்களும் பின்பற்றி வருகின்றார்கள், நாங்களும் பின்பற்றி வருகிறோம் எனக் கண்மூடித்தனமாகப் பலவற்றைப் பின்பற்றி வருகின்றார்கள். இதையெல்லாம் பின்பற்றாதவர்களை வி்ட பின்பற்றுபவர்களே வாழ்க்கையில் பல துன்பஙகளையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். இவற்றைப் பல சந்தர்ப்பங்களில் நாமும் கண்டிருக்கிறோம்.
ஒரு பிரச்சினை பற்றி ஆலயக் குருக்களிடம் கூறினால் அது பகை, இது பகை, கிரக தோசம் என்றெல்லாம் கூறி அர்ச்சனை, தோச நிவர்த்தி, பரிகாரம், தானம், பூசை எனப் பலவாறு கூறிப் பயமுறுத்திப் பல ஆயிரங்கள் செலவழிக்க வைத்து விடுவார்கள். இதையே பூசாரி ஒருவரிடம் கூறினால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், கழிப்பு, பூசை, புனஸ்காரம், சாத்திரம் கேட்டல், குறி பார்த்தல், கெடுதி கேட்டல், வெற்றிலை வைத்துக் கேட்டல் என்றெல்லாம் கூறப் பரிகாரம் செய்விக்க வைத்துப் பல ஆயிரங்களைச் செலவு செய்ய வைத்து விடுவார்கள். நோய் என்று வைத்தியரிடம் சென்றால் அவர்களும் நம்மிடம் இருந்து கறந்து விடுவார்கள். இவ்வாறு பலர் மூடநம்பிக்கைகளால் திண்டாடி, நிம்மதி இழந்து நிற்கின்றார்கள்.
விவேக சிந்தாமணிப் பாடலும் பிரம்மதேவன் விதியை எழுதுவதற்கு முன்னரே இறைவன எழுதிவிடுகிறான் என்கிறது.
இந்த விதிக்கப்பட்ட விதியைக்கூட மதியால் (புத்தி, அறிவு) வெல்லலாம் என்கிறது முதுமொழி. நமக்கு வரும் துன்பம், துயரம், வேதனைகள், வலிகள், இழப்புக்கள், நெருக்கீடுகள் அகியவற்றை நமது அறிவு, அனுபவம், புத்தி சாதுரியம் என்பவற்றைப் பயன்படுத்தி நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். வழி உண்டானால் அதற்குரிய இடமும் இருக்கும். உனக்குரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீயே வழியைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள். வெற்றியோ தோல்வியோ ‘உனது வாழ்க்கை உன் கையில்’ இருக்கிறது என்பதில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டால் ‘இதுவும் கடந்து போகும்’ உனது வாழ்க்கை மாறும். நம்பிக்கை கொள். நிச்சயம் வெற்றியடைவாய். போலிகளையும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் விட்டொதுக்கி, விதியை மதியால் வெல்லப்பார். இதுவே உன்னையும் உன் குடும்பத்தையும் சீரான வாழ்வு வாழ வழி சமைக்கும்.
பிறப்பு, இறப்பு, மாதவிலக்கு ஆகியன மங்கலமான நிகழ்வுகளாகும். பிறப்பு என்பது நமக்கு ஒரு வாரிசு வந்து சேருவதனால் அது மகிழ்ச்சிகரமான மங்கல நிகழ்வாகிறது. அதைக் குற்றம், தீட்டு, தொடக்கு, ஆசுஸ்யம், விலக்கு எனக் கூறுகின்றனர். முன்பு மங்கலமாகப் பார்த்த நிகழ்வொன்று, யாரோ ஒருவர் அதனைத் தொடக்காக விலக்கி வைத்த நிகழ்வு இப்போது மரபு, சம்பிரதாயமாகி விலக்காகக் கொள்ளப்படுகின்றது. ஆரிய வேதமும், அதனை யொட்டி வந்த ஆரிய, பிராமணிய, திராவிடக் கொள்கைகளும் அடக்கு முறைகளும் பெண் அடிமைத் தனங்களும் இடைப்பட்ட காலத்தில் பிறப்பினைத் தீட்டாகக் கொள்கிறது. இதனை அடிப்படை மதவாதிகள் பற்றிப் பிடித்துக் கொண்டு கடைப்பிடித்து வருகின்றனர். அதேபோல் இறப்பு என்பது ஒரு நிரந்தரமான முடிவு. அது நிச்சயமானது. அதனை யாராலும் தடுத்துவிட முடியாது. நம்மோடு வாழ்ந்த ஒருவர் இறப்பது துக்கம்தான்.
இருந்தும் அவரைப் பற்றுறுதி இல்லாமல் வழி அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்குரிய மோட்சம் கிடைக்கும். அதைவிடுத்துப் பற்றோடு அழுது புலம்பி பற்றிப் பிடிதது அவரின் இறுதிப் பயணத்தைத் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் பற்றிய நினைவு இருக்க வேண்டுமே தவிர பற்று இருக்கககூடாது. இறந்தபின் ஒருவரின் ஆத்மா எதிர்மறையாகவே செயற்படும். அவர்களிடம் நேரான குண இயல்புகள் காணப்பட மாட்டாது. அத்தைகையவர்களைக் கனவில் காண்பதை விரும்பக்கூடாது. உலகிலுள்ள பல மதங்கள் இறப்பினை மகிழ்ச்சியாகவே கருதுகின்றன. இந்து மதம் அதனையும் தீட்டாகப் பார்க்கிறது. இந்து மதம் ஆரிய, பிராமண, திராவிடக் கூட்டினால் நம்மீது திணிக்கப்பட்டவை. தமிழர் மதம் சைவநெறி என்பதாகும்.
சமயத் துறவி ஒருவரின் மனைவி இறக்கிறார். ஊர் மக்களெல்லாம் திரண்டு துறவியின் வீட்டுக்குச் செலகின்றனர். அங்கே துறவி சந்தோசமாக எதையோ பாடிக் கொண்டிருக்கிறார். இதைக் கண்ட ஊர் மக்களுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அதில் ஒருவர் எழும்பிச் சென்று “மனைவி இறந்த துக்கம் இல்லாமல் எதையோ பாடிக் கொண்டிருக்கிறீர்களே” எனக் கேட்டார். அதற்கு அவர் “இது துக்கமான நிகழ்வு அல்ல மகிழ்ச்சிகரமானது. நான் சந்தோசமாக மகிழ்ச்சியோடு அவரின் ஆத்மாவை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். நீங்கள் அழுது புலம்பி அவரின் சொர்க்கப் பயணத்தைத் தடுத்துவிடாதீர்கள். எனது மனைவி சுமங்கலியாக மோட்சமடையப் போகின்றாள். அதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள். சிறிது நேரத்தில் இந்த மாய உடலைப் பஞ்ச பூதங்களுடன் கலக்கச் செய்து விடுவேன். என்னோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தவள். அவளை மகிழ்ச்சியாக அனுப்கபுகிறேன். நீங்கள் எவரும் துக்கப்பட வேண்டாம்” என்று துறவி கூறியது பல உண்மைகளை உணர்த்தி நிற்கிறது.
அதேபோல் மாதவிலக்கு என்பது ஒரு பெண் பருவமடைந்து பின்னர் தானாக நிற்கும்வரை மாதாந்தம் நடைபெறுகின்ற ஒர் இயற்கை நிகழ்வாகும். சூலகத்தில் உற்பத்தியாகும் கரு முட்டை 28 நாளின் பின்னர் உடைந்து யோனி ஊடாக வெறியேறுகிறது. இந்நிகழ்வு மாதமொருமறை ஏற்பட்டு எதிர்காலக் கருக்கட்டலுக்காக கருப்பை, பலோப்பியன் குழாய், சூலகம், கருப்பைச் சுவர் ஆகியவற்றுக்குரிய பலத்தை இயற்கையாகவே சேர்க்கிறது. இந்த இயற்கையான நிகழ்வை விளங்கிக் கொள்ளாத ஆணாதிக்கம் கொண்ட மத அடிப்படைவாதிகள் இதனை விலக்கு, குற்றம், தொடக்கு எனக் கூறி ஒதுக்கி வைக்கின்றனர். அம்மன் கோயில்களில் கதவு திறந்து விழாக்கள் நடைபெறும் காலங்களிலும் கோயில திருவிமாக்களின் போதும் தொடக்கு என்று கூறிப் பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர். யாரோ ஒரு அணாதிக்க மதவாதி கூறிவைத்த வழக்கம் இப்போது சம்பிரதாயமாகிவிட்டது. அதையே நாமும் விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வருகிறோம்.
வீட்டு நிலையம் எடுத்தல் தொடர்பாக வாஸ்த்து சாத்திரம், மனையடி சாத்திரம், வீடு மனை சாத்திரம் ஆகிய நூல்களில் தெளிவாகக் கூறப்படுகின்றன. அத்தோடு பஞ்சாங்கத்திலும் சில விடயங்கள் உள்ளன. தற்காலத்தில் வீட்டு நிலையம் எடுத்தல் தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் காணியின் நீள, அகலத்தைக் கொணடு எல்லைப்படுத்தி வீட்டுக்கு நிலையம் எடுத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது. வீட்டின் நீள, அகலம், ஒவ்வொரு அறைகளின் நீள அகலம் என்பவற்றை முறைப்படி கணக்கிட்டு நிலையம் எடுத்தல் வேண்டும் என்ற அளவுத் திட்டத்தைத் தெறிவுபடுத்துகிறது. பொதுவாக வீடுகள் கிழக்கு வாசல் வைத்து அமைக்கப்படுவதே உத்தமமாகும். ஆச்சாரமாக நடப்பவர்கள் வடக்கு வாசல் வைத்து அமைக்கலாம். செவ்வாய் தோசம் உள்ளவர்கள் தெற்கு வாசல் வைத்து அமைக்கலாம். மேற்கு வாசல் வைத்து அமைப்பது மத்திமமாகும். வீட்டுக்குள்ளே அக்கினி மூலையில் (தென்கிழக்கு) சமையலறையும் நிருதி மூலையில்(தென்மேற்கு) பிரதான படுக்கை அறையும், வாயு மூலையில்(வடமேற்கு) மலசல கூடம், குழியல் அறையும், ஈசான மூலையில் (வடகிழக்கு) ஆச்சாரமான, பக்குவமான அல்லது வழிபாட்டு அறை, நூலகம் அமைந்திருத்தல் உத்தமமாகும். இதனை மாற்றி அமைப்பது வீட்டில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்கிறது சாத்திர நூல்கள். பூசை அறை வீட்டின் அமைப்பு, பிரதான வாசல் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படலாம். இதற்கும் விதி இருக்கிறது.
பொதுவாக நிலத்தில் மின்காந்த அலை அழுத்தம் (Electro Magnetic Poss. Radiation) காணப்படுகிறது. இந்த மின் காநத அலை அமுத்தம் நேரானதாக அல்லது சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வாஸ்து அடிப்படையில் கணிப்பிட்டு வீட்டு நிலையம் எடுக்கப்படுகின்றது. இதன் அழுத்தம் எதிர்மறையாக இருந்தால் வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். வாஸ்த்து சாத்திரத்தினை மின்காந்த அலை அழுத்தம் என்ற பெயரில் உலக நாடுகளில் உள்ள பல பல்கலைக் கழகங்களில் குடிசார் பொறியியல், கட்டிட நிர்மாண வரை கலைஞர் ஆகிய பல துறைகளுக்குப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
வீட்டு நிலையம் எதுக்கும் போது கிணறு, பிரதான வாசல் கதவு (Gate) எத்திசையில் உவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியெல்லாம் நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனைச் சாத்திரிமாரும் ஐயர்மார் பலரும் குழப்பி இருக்கின்றனர்.
நம் முன்னோர் வீடமைக்கும் போது மலசலகூடம், சமையலறை ஆகியவற்றை வீட்டுக்கு வெளியே அமைத்தனர். நிலையம் எடுத்தல் தொடர்பான தெளிவில்லாமல் அமைப்பு முறை கவனிக்கப்படாமல் வீட்டை அமைத்து நன்கு வாழ்ந்திருக்கின்றனர். இப்போது கட்டப்படும் வீட்டுக்குள்ளேயே சமையலறை, மலசலகூடம் ஆகியன அமையப்படுவதனால் சகலவற்றையும் பார்த்து அமைக்கப்பட வேண்டியது சம்பிரதானமாகிறது. மக்களின் அறியாதையைப் பயன்படுத்தி நிலையம் எடுப்பவர்களில் பலர் அமைப்பு முறையை மாற்றி நிலையம் எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு நமது அறியாமை, தெறிவின்மை ஆகியவற்றை மூலதனமாகப் பயன்படுத்திப் பலர் பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆகவே, நம் முன்னோர் உருவாக்கிய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் என்பவற்றைப் பின்பற்றுவதும் நாம்தான். அவற்றுள் காணப்படும் போலிகள் மூடநம்பிக்கைகள், பிற்போக்கான விடயங்கள் என்பவற்றைக் கண்டறிந்து அதற்கேற்ப அவற்றைப் புத்திசாதுரியமாக மாற்றி அமைப்பதும் நாமாக இருத்தல் வேண்டும். அதுவே நடைமுறைச் சாத்தியமுமாகும்.
![]()