இந்தியா

கார்கில் வெற்றி தினம்: நாட்டைப் பாதுகாத்த தாய்நாட்டின் வீரர்களுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அஞ்சலி!

கார்கில் போரில் தாய்நாட்டின் எல்லையைக் காத்து வீரமரணமடைந்த மற்றும் தீரத்துடன் போரிட்ட இராணுவ வீரர்களை நினைவு கூரும் ‘கார்கில் வெற்றி தினம்’  (ஜூலை 26) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்குத் தனது மனமார்ந்த அஞ்சலியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு லடாக்கின் கார்கில் எல்லைப் பகுதியைக் கைப்பற்ற முயன்ற பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை, இந்திய இராணுவத்தினர் “ஆப்பரேஷன் விஜய்” (Operation Vijay) நடவடிக்கை மூலம் அடித்து விரட்டினர்.

இந்தியாவின் இந்த மகத்தான வெற்றியைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி ‘கார்கில் வெற்றி தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில்:

“கார்கில் வெற்றி தினமான இன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்களின் இணையற்ற துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய மாவீரர்களுக்கு நமது தேசம் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மிகவும் கடுமையான சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவர்கள் காட்டிய வீரம், என்றென்றும் நாட்டின் பெருமையாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button