இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இலங்கையின் புகழ்பெற்ற ஆன்மீக பூமியான கதிர்காமத்தில் , வருடாந்த ஆடி வேல் விழா ஆரம்பமாவதற்கு முன்னதாக அங்குள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியக் கொடி ஏற்றப்படுவது நீண்டகால பாரம்பரியமாகும்.

இஸ்லாமிய மரபுகளின்படி, கதிர்காமம் என்பது ‘அல்-கிள்ர்’ என்ற புகழ்பெற்ற ஆன்மீக இறைத்தூதர் வாழ்ந்த மற்றும் ‘ஜீவ நதியை’ கண்டறிந்த புனித பூமியாகக் கருதப்படுகிறது. இதனால் இஸ்லாமியர்கள் கதிர்காமத்தை ‘கிள்ர்-காம’ என்றும் அழைக்கிறார்கள்.
அவர்களில் மிக முக்கியமானவர் ‘ஹயாத்து நபி’ மற்றும் ‘பால்குடி பாவா’ போன்றோராகும்.
அவர்கள் தங்கியிருந்த எளிய குடிசைகளே இன்று கதிர்காமப் பள்ளிவாசலாகவும் தர்காவாகவும் மாறியுள்ளன. இதனால் இந்த இடம் முஸ்லிம்களுக்கும் மிக முக்கியமான புனிதத் தலமாக மாறியது.
கதிர்காமத்தின் பிரதான ஆடி உற்சவம் உத்தியோகபூர்வமாகத் தொடங்குவதற்கு முன்னதாக, கதிர்காமப் பள்ளிவாசலில் ‘கொடியேற்றம்’ நிகழ்த்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத மரபு.
இந்த இஸ்லாமியக் கொடியேற்றம் மற்றும் துஆப் பிராத்தனைகள் முடிந்த பின்னரே, கதிர்காம மகா தேவாலயத்தின் பிரதான திருவிழா சடங்குகள் முறைப்படி ஆரம்பமாகும்.
திருவிழாவின் இறுதி நாளில்,மாணிக்க கங்கையில் நடைபெறும் ‘தீர்த்த உற்ஸவம்’ மற்றும் பள்ளிவாசலின் இறுதிப் பிரார்த்தனைக்குப் பின்னரே இந்தக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.
இலங்கையில் பல்லின மக்களும், பல சமயத்தவர்களும் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றாகக் கூடி வழிபடும் மிக அரிய திருத்தலங்களில் கதிர்காமம் முதன்மையானது.
வரலாற்றில், முஸ்லிம் பெரியார்கள் கதிர்காமத் தேவாலயத்தின் நிர்வாகத்துடனும், அங்கு வந்த இந்து-பௌத்த பக்தர்களுடனும் மிகவும் இணக்கமாகச் செயல்பட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே இன்றும் அனைத்து சமயத் தலைவர்களின் ஆசியுடன் இந்தக் கொடியேற்றம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகப் பேணப்பட்டு வருகிறது.
கதிர்காமத்தில் முஸ்லிம் கொடியேற்றம் என்பது ஏதோ அண்மையில் தொடங்கிய ஒன்றல்ல; அது கதிர்காமத்தின் ஆதி ஆன்மீக வரலாற்றுடனும், ‘அல்-கிள்ர்’ என்ற சூஃபி பாரம்பரியத்துடனும், இலங்கையின் உன்னதமான பன்முகப் பண்பாட்டுடனும் பிணைக்கப்பட்ட ஒரு புனிதமான பின்னணியைக் கொண்டதாகும்.

![]()