பவளமல்லிகை – படித்தோம் சொல்கின்றோம்…. முருகபூபதி

பன்முக ஆற்றல்மிக்க கோகிலா மகேந்திரனின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகச்சொல்லும் சிறப்பு மலர்
ஆண்றொன்று போனால் வயது ஒன்று போகும் எனச்சொல்வார்கள். ஒருவருடைய பிறந்த தினம் வரும்போது, குறிப்பிட்ட நபர் தங்களது வயதில் மூத்தவராயின், வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் “ எனச்சொல்வார்கள்.
அல்லது, வாழ்த்து மடல் அனுப்புவார்கள். வேறும் சிலர், தங்கள் முகநூலில் பதிவுசெய்து வாழ்த்துவார்கள். முன்பெல்லாம் பிறந்ததின வாழ்த்து மடலை தபாலில் அனுப்புவார்கள். ஆனால், சமகாலம் புதிய தொழில்நுட்பத்தின் தீவிர முன்னேற்றத்தால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தங்கள் வாழ்த்துச்செய்தியை பகிர்வார்கள்.
ஒருவரது வாழ்வில், மணிவிழா, வைரவிழா, பவளவிழா என சில விழாக்கள் வந்து போகும்.
அவ்வாறு சமகாலத்தில் பவளவிழாவை கடந்து வந்திருப்பவர் எங்கள் கலை, இலக்கிய குடும்பத்தில் ஒருவரான பன்முக ஆற்றல் மிக்க திருமதி கோகிலா மகேந்திரன்.
கடந்த ஆறுதசாப்தங்களுக்கும் மேலாக கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணி, சீர்மியத்தொண்டு முதலானவற்றில் அர்ப்பணிப்புடன் இயங்கிவருபவர் கோகிலா மகேந்திரன்.
சமீபத்தில் ஒரு நிகழ்வுக்கு நான் சென்றிருந்தபோது கலை, இலக்கியவாதி கலாநிதி மணிவண்ணன், எனக்கு தந்ததுதான் பவளமல்லிகை – கோகிலா மகேந்திரன் சிறப்பு மலர். இதனை எனது மற்றும் ஒரு நண்பர் சிவசுதன் என்னிடம் சேர்ப்பித்தார். இருவருக்கும் எனது முதற்கண் நன்றி.
இதன்தொகுப்பாசிரியர்கள் :- திருமதிகள் சிவரூபி செல்வநாதன், நளாயினி சுகிர்தன், திரு. மு. சதீஸ் பாலமுருகன் ஆகியோர்.
வழக்கமான பவளவிழா மலர்போன்றில்லாமல், முற்றிலும் தனித்துவமான உள்ளடக்கங்களை கொண்டு மலர்ந்திருக்கிறது இந்த ஆவணம். மலர்களுக்கு அவற்றின் இதழ்களும், அவற்றிலிருந்து புறப்படும் மகரந்தங்களும்தான் மக்களை பெரிதும் கவருகின்றன. மலர்கள் மாலைகளாகின்றன. மாலைகள், ஆண்டனுக்கும் , ஆளுமைகளுக்கும் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவான ஒரு பாரட்டு மலர்தான் இந்த பவளமல்லிகை.
, இந்த பவளமல்லிகையும் வாசகரை பெரிதும் கவருகின்றது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் மாணவரான கோகிலாவின் தந்தையார் ( அமரர் ) செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்களும் எழுத்தாளராக திகழ்ந்தவர். அத்துடன் இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றவர்
இம்மலரை திறந்தவுடனே எமது கண்களில் தென்படுவது கோகிலாவின் மாணவர் தேர்ச்சி அறிக்கை. 1959 ஆம் ஆண்டு இவர் தமது ஒன்பது வயதில் பெற்ற புள்ளிகளே, இவரது எதிர்காலம் எத்தகைய ஒளியுடன் பிராகாசிக்கும் என்பதை சுட்டிக்காண்பிக்கின்றது.
சரிதை, முற்றம், சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், கவிதை, நாடகம், உளசமூகவியல், உளவியல், வரலாறு, ஆசிரியர் ஆளுமை, முதலான தலைப்புகளில் இடம்பெற்றிருக்கும் விடயதானங்கள் அனைத்தும் கோகிலா மகேந்திரனின் ஆளுமைப்பண்புகளை விரிவாகவே பதிவுசெய்துள்ளன.
இம்மலரின் பதிப்புரையில் ஏன் இம்மலருக்கு பவளமல்லிகை எனப்பெயரிடப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக சில விடயங்கள் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளன.
“ சிறிய வெள்ளை இதழ்களும் பவளநிறத்திலான காம்பும் உடைய பவளமல்லிகைப்பூவும் கொண்டிருப்பது தூய்மையான அழகு. உளவியல் பாதிப்புகளின் விளைவால் துயருறுவோருக்கு அந்த விளைவுகளைக்கையாளுவதற்கு உதவி செய்வர் பவளவிழா நாயகி.
ஆயுர்வேத மருந்தாக நோய்தீர்க்கும் நிவாரணியாக உதவி செய்கிறது பவளமல்லிகை.
மாலையில் மலர்ந்த மலர்களின் நறுமணம் ஊரெல்லாம் பரவிப்புகழ் பெற்றது பவளமல்லிகை.
கோகிலா மகேந்திரன் வட இலங்கையில் பல பகுதிகளில் ஆசிரியப்பணியாற்றியவர். அத்துடன் பின்னாளில் அவுஸ்திரேலியா சிட்னியிலும் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்திலும் சிறிதுகாலம் பணியாற்றியவர்.
கோகிலா மகேந்திரன் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் – தொகுத்துமிருப்பவர்.
இலங்கையிலிருந்து ஒலி ( ஒளி ) பரப்பாகும் வானொலி, தொலைக்காட்சிகள் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் வானொலிகள் ஆகியனவற்றிலும் பல நிகழ்ச்சிகளில், குறிப்பாக நேர்காணல்களில் இடம்பெற்றவர்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் படித்து பட்டம்பெறவேண்டியிருந்தவர். எனினும், அங்கு உயிரினங்களை வெட்டிச்சோதித்து படிக்க வேண்டியிருந்தமையால், அந்தத்துறையிலிருந்து விலகிச் சென்று, விஞ்ஞான பாட நெறி ஆசிரியரானார்.
உயிரினங்களை இறந்த கோலத்தில் தரிசிக்க மனவலிமையற்றிருந்த கோகிலா, பின்னாளில் மனோதத்துவ நிபுணராகி, உளவளச்சிகிச்சை செய்யும் சீரிமியத்தொண்டரானார்.
பன்முக ஆளுமைமிக்கவர். வாழ்நாள் முழுவதும் தாவரபட்சணிதான்.
இம்மலர் வாசகர்களுக்கு மிகப்பெரிய சமுத்திரமாகவே காட்சியளிக்கும், இச்சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பது போன்றதே அவர்கள் பெறும் வாசிப்பு அனுபவம்.
இம்மலரில் இவர் பெற்ற பட்டங்கள், விருதுகள், பங்கேற்ற விழாக்கள், கருத்தரங்குகள் பற்றியெல்லாம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கோகிலா மகேந்திரனின் கணவர் திரு. மகேந்திரராஜா முன்னாள் அருணோதயா கல்லூரி அதிபர். செல்வப்புதல்வன் கலாநிதி பிரவீணன் அவுஸ்திரேலியாவில் அடிலைட்டில் பொறியியல் பட்டம்பெற்றவர்.
இம்மலரின் இறுதிப்பக்கங்களில் கோகிலா தனது எழுத்துலகப்பிரவேசம் பற்றி கூறுகிறார்:
“ வாசிப்பு என்பது ஒரு வகையில் ஒரு போதை, தண்ணிலவு தேனிறைக்கும் போதை. இன்னொரு வகையில் ஒரு சிகிச்சை. தடுமாறும் மனங்களின் எல்லாவற்றுக்கும் நிறைவான சிகிச்சை. இவரது தந்தையார்தான் இவரது வாசிப்புக்கு ஊக்கமளித்திருப்பவர்.
தனது ஒன்பது வயதில் மகாஜனவில் இணைந்தபோது. முதல் வருடத்திலேயே தெல்லிப்பழை இந்து சமய விருத்திச்சங்கம் நடத்திய பேச்சுப்போட்டியில் பரிசுபெற்றவர்.
இவ்வாறு தனது பால்யகாலத்திலிருந்தே தேர்ந்த வாசிப்பு பழக்கத்தில்
ஈடுபட்டிருக்கும், கோகிலா, அந்தப்பழக்கத்தை இன்றுவரையில் கைவிடவில்லை. இளமையில் பெற்றுக்கொண்ட வாசிப்பு அனுபவம் பின்னாளில் இவரை, எழுத்தாளராக்கியது. ஆசிரியராக்கியது, சீர்மியத்தொண்டராக்கியது.
இவர் தமது வாழ்வில் பெற்ற தரிசனங்களே இவரது கதைகளாகியிருக்கிறது. தான் சமூகத்திலிருந்து கற்றதையும் பெற்றதையும் படைப்பு இலக்கியமாக்கியவர். கோகிலா மகேந்திரன் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் – தொகுத்துமிருப்பவர்.
இம்மலரில், கோகிலாவின் சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம், உளவளத்துறைசார்ந்த எழுத்துக்கள் உட்பட பிற படைப்புகளையும் பலர் திறனாய்வுசெய்து விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
அதனால், இம்மலர் முழுமையாகியிருக்கிறது. கோகிலா மகேந்திரன் தனது 75 வருட காலத்தை எவ்வாறு சமூகத்திற்கு பயன்தரக்கூடிய வகையில் கடந்து வந்திருக்கிறார் என்பதையும், இம்மலரில் எழுதியிருப்பவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.
கோகிலா, பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அதனால் கூட்டுச்செயற்பாடுகளில் தனது அனுபவத்திறனை வெளிப்படுத்தியவர். செயலமர்வுகளில் பங்கேற்றவர்.
ஆசிரியராக மாணவர் மத்தியில் செயற்பட்ட இவருக்கு, பொதுப்பணிகளில் தான் சந்திக்கும் ஆளுமைகளுடன் எவ்வாறு இணைந்து இயங்கவேண்டும் என்ற நுண்ணிய அறிவு முதுசொமாக இருந்திருக்கிறது என்பதை இம்மலரில் இடம்பெற்றிருக்கும் ஆக்கங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.
இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் – நாவல்களில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களின் இயல்புகளை எவ்வாறு சித்திரிக்கிறார் என்பதை சிலர் சிலாகித்துள்ளனர்.
சமூகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி ஒதுங்கிச்செல்லாமல், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காண்பிக்கும் கோகிலாவின் திறனை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலைகள் – கல்லூரிகள் – பல்கலைக்கழகங்கள், பொது நூலகங்களில் அவசியம் இடம்பெறவேண்டிய ஆவணத்தொகுப்பாக இந்த பவள மல்லிகை திகழ்கிறது.
![]()