உலகம்

கொடூர சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்குகிறது தாய்லாந்து

தாய்லாந்து பேங்காக்கில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தும் 22 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில், தாய்லாந்து பிரதமர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார்.

14 வயதான அந்தச் சிறுவன், தான் வசித்து வந்த வீட்டில் வைத்து தனது தாத்தா பாட்டியைச் சுட்டுக் கொன்ற பிறகு, தான் கல்வி கற்ற நோந்தாபுரியில் உள்ள டெப்சிரின் (Debsirin) பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு ஐந்து ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற பின்னர், தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், காயமடைந்த மாணவர் ஒருவரும் உயிரிழந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் பின்னர் உரையாற்றிய பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் (Anutin Charnvirakul), பொது இடங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய சட்டத்தின் மூலம் கடமையில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் சிறுவனின் தாத்தாவுக்குச் சொந்தமானவை என்றும், தாத்தாவின் படுக்கையறைக்குள் அந்தத் துப்பாக்கி தேடப்பட்டதற்கான அடையாளங்கள் ஆரம்பக்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் கர்னல் தட்சகோர்ன் கொந்தோங் தெரிவித்துள்ளார்.

அந்தத் துப்பாக்கி சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய உரிமம் பெறப்பட்ட ஒன்று எனச் சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவில் பொதுமக்களிடம் அதிகளவு துப்பாக்கிகள் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும். அங்கு சுமார் 10.3 மில்லியன் துப்பாக்கிகள் பொதுமக்களின் வசம் உள்ளதாகவும், அவற்றில் சுமார் நான்கு மில்லியன் துப்பாக்கிகள் சட்டவிரோதமாகப் வைத்திருக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button