இலக்கியச்சோலை

கமநிதா: கவிதைகள் கோ.பாரதிமோகன்… கருணையின் கையிருப்பு!…. நூலறிமுகம்….  யாழ் எஸ் ராகவன்

க விக்கோ அப்துல் ரகுமானின் உயிர் எழுத்து, கவிஞர் பழநிபாரதியின் மெய் எழுத்து இரண்டும் கலந்த காதல் கஸல் எழுத்து கவிஞர் கோ பாரதிமோகனின் ரசனைமிக்க எழுத்து.

எதார்த்த வாழ்வில் நடந்து விடவே முடியாத பல்வேறு சூழல்களை கவிஞன் தன் எழுதுகோலால் கட்டமைக்கிறான். கவிஞன் கட்டமைக்கும் அகவுலகம் புறவுலக அபத்தங்களை புறந்தள்ளி விடக் கூடியது.
கவிதைகள் மட்டுமே ஆன்மா உயிரோட்டத்தோடு இருக்கிறது.

தேர்ந்த வாசிப்பாளனும் சொல் நெசவாளனுமாகிய கோ. பாரதிமோகன், புதுப்புது சொற்களை உருவாக்குவதிலும் எந்த ஒரு பாடுபொருளையும் பனிச்சிற்பமாக மாற்றும் வித்தகம் தெரிந்த மத்தக கவிஞர்.

கும்பகோணத்துக்கார் நகுலனின் சுசீலா போல, லாசா ராவின் ஜனனி போல, பாரதியின் செல்லம்மா போல, பாரதி மோகனுக்கு கமநிதா.

கோ.பாரதிமோகன்

 

மகடூஉவை முன்னிலைப்படுத்தி எழுதுவது சங்க காலத்திலிருந்து இருக்கிறது. யாப்பெருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூல் ஒவ்வொரு செய்யுளிலும் ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கும்.

மகாகவி பாரதியாரின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று கண்ணன் பாட்டு. அதில் கண்ணனை செல்லமாய் முன்னிலைப்படுத்தி அவர் இயற்றிய கவிதைகள் எல்லாம் தனியொரு உலகத்தை சிருஷ்டித்து எப்பொழுதும் நீங்காத இடம் பெற்று இருக்கும்.

பாரதிமோகன் சொல் உழவில் கமநிதா என்ற பெண்ணை குழந்தையாக, தாயாக தெய்வமாக, சக தோழியாக உருமைத்து அவர் கட்டமைக்கும் உலகம் பிரம்மாண்டமானது.

அவர் உருவாக்கிய உலகத்தில்,

“அன்பின் வண்ணம் ததும்பும்
அவ்வுலகு ஏக விண்ணப்பிக்கின்றன
ஆயிரம் புவி உயிர்கள்’

அந்த உலகத்தின் ஓர் ஓரத்தில் நாமும் உலவி வர மாட்டோமா என்ற ஓர் ஆசையை நமக்குள் கடத்திவிட்டது அந்த கவிதை.

“காற்றுக்கு பசிக்கும் போதெல்லாம்.
புல்லாங்குழலுக்கு
இதழட்டுகிறாள் கமநிதா”

என்றொரு கவிதை.

மொழியை, உயிரை விட நேசிப்பவன் மட்டும்தான் இப்படி ஒரு சொற்களை மீட்ட முடியும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கவிஞரின் முகவரியாக இந்த கவிதை அடையாளப்படுத்தப்படும்.

“நிறைய இதயம் தூவினாள்
கொஞ்சமே கொஞ்சம்
அறிவு தெளித்தாள்

சேர்த்து பிசைந்து செய்து முடித்த
செம்மலரை இசையில் தொடுத்து
திருவாய் சூட்டினாள்
தெறித்த அமிழ்தில் சிலி்ர்த்தது உலகு”

என்று –
சொற்களைப் பிசைந்து அமுதூற்றி பசியாறுவது போல இந்தக் கவிதை நமக்குள் பேரானந்தத்தை தருகிறது.

“அவள் தீட்டாது விட்ட
வண்ணங்களோடு
வனமேகிய வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளிலிருந்து அருளப்பட்டன
உலகுக்கான
ஆயிரமாயிரம் வண்ணங்கள்”

என்று, தூரிகைத் தீட்டுகிறார்.

கடன் வாங்கி கழிக்கும் நிகழ்கால ரணம் ஒன்றில் ஊதியம் பற்றாது, உழைப்பை தின்னும் கொடூரமான யுகத்தில் வாழ்வோர் யாவருக்கும் கொஞ்சமேனும் ஆறுதல் அளிக்கும் இந்த கவிதை தான் உயிர் காக்கும் மருந்தென சொல்வேன்:

“காற்றுக்கு கொஞ்சம்
கடலுக்கு கொஞ்சம்
வானுக்கு கொஞ்சமென
பகிர்ந்த அன்பின் மீதியை
பசித்த பூமிக்கு பதியமிட்டாள் கமநிதா

விளைந்து செழித்த அவள் அன்பில்
திசைகளெல்லாம் கிழக்காயின”

என்று கவிதையை முடித்திருக்கிறார்.

அன்பின் மகத்துவத்தை இப்பொழுதெல்லாம் யாரும் அறிந்து கொள்வதில்லை. தேர்ந்த கவிஞனின் ஆய்ந்த சொற்கள், அன்பின் பாதையை கட்டமைத்து விடுகிறது.

“ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள்
கமநிதா

நேரையும் எதிரையும் இணைத்து
காற்றைத் தைத்துக்கொண்டிருந்தது
ஆட்டம்

இடமும் வளமுமான அதன் அசைவில்
கட்டுண்டு சுழல்கிறது பால்வெளி”

என்று –
ஓஷோவின் தத்துவ தரிசனத்திற்கும் பாஷோவின் ஹைகூவின் சாரலுக்கும் சற்றும் குறைவில்லாதது பாரதிமோகினின் எழுத்து பிம்பம்.

ஜாதி பேதமற்ற சமரச தத்துவமான உலகை கட்டமைக்கும் கவிஞனின் மொழி எப்பொழுதும் கூர்மையானது.

“சொற்களை வைத்து
சூதாடிக்கொண்டிருந்தாள் கமநிதா

அவள் விரல் வெட்டி எறிந்த
சொற்களையும்
கவிதை வரிகள் என
கணக்கில் வைத்துக் கொண்டது
மொழி”

என்றும்

சூரியனை, சந்திரனை, பால்வெளியை, அண்ட சராசரத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி உடையவளாக கமநிதாவை படைத்திருப்பது படைப்பின் உச்சம்.

இந்த தொகுப்பில் படித்துக் கொண்டே இருக்கும் போது, அடடா ஆகா என சொல்லும் இடங்கள் ஏராளம். அதில் நான் வியந்து போனது,

“தீபம் ஏற்றி வைத்தாள் கமநிதா
எட்டிப் பார்த்த நிலவுக்கு
ஒளிப் பிச்சை.

என்ற வரிகளில்.

வாழ்க்கையை அடகு வைத்து கவிஞனாக மாறியவனுக்கு மட்டுமே இத்தகைச் சொற்கள் வாய்க்கும் .

“பூ விற்றுக்கொண்டிருந்தாள் கமநிதா
சாலை நிழலில் சிறு கூடையில்
வகைக் கொன்றாய்
அவள் உருட்டி வைத்திருந்த
பூ பந்துகளில் காலம் மணந்து
கொண்டிருந்தது”

என்றும்,

“வெள்ளரிப்பிஞ்சு விற்றுக்
கொண்டிருந்தாள் கமநிதா’

என்ற நீள் கவிதையில், அதனுடைய இறுதி பத்தி எத்தனை அழகும் செழுமையும் வாய்ந்த உறுதி பத்தியாக இருக்கிறது!

‘வெள்ளரிவிற்கும் தன் தினசரிகளை
வெயிலோடு போக்கி
அந்தியில் வீடு திரும்புகிறாள் கமநிதா
கொஞ்சம் சில்லறையோடும்
எஞ்சிய உப்புத் துளிகளோடும்”

என்ற வரிகளில், வாழ்க்கை பிழைத்தல் சார்ந்ததல்ல, வாழ்தல் சார்ந்தது என்ற மிகப்பெரிய ஞானத்தை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார்.

பெரியாரின் கொள்கைகளை பாரதியாரின் கொள்கைகளை பிரபஞ்சத்தின் மகத்துவத்தை அழகான ஓர் உலகத்தை கமநிதாவுடன்
கைகோர்த்து நடைபழகியிருக்கும்
கவிஞர்களின் கவிஞர் பாரதிமோகன் படைப்புகள் அத்தனையும் தித்திக்கும் தேன் பலா.

மனதுக்குள் மழை பொழியும் மண்வாசனையோடு ஈர நிலத்தில் கவிதைப் பயிர்களை நடவு செய்திருக்கும் சொல்லேர் உழவனின் பயிர்நடவு விளைச்சலை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button