“கனகர் கிராமம்”… அரசியல் – சமூக – வராற்று நாவல்… ஜெகன்


மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் 26.04.2026 அன்று நடைபெற்ற செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய ‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்று நாவல் அறிமுக விழாவில் விமர்சகர் ஜெகன் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட நயவுரை.
– பகுதி 02
இருபத்தி எட்டாம் அத்தியாயத்திலிருந்து தமிழரின் கிழக்கு அரசியல் வரலாற்றின் சில வரலாற்றுப் பக்கங்களை நாம் தெளிவாக அறியக்கூடிய வகையில் துல்லியமாக கனகர் கிராமதில் அரசியல் நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளமை இளம் சந்ததிக்கு நல்லதொரு பாடமாக அமைகிறது எனலாம். தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மனப்பாங்கு மற்றும் நடத்தைகள் வெளிப்படுத்தப்பட்ட விதங்கள் சந்தர்ப்பங்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசிய வசனங்கள் சொல்லுக்கு சொல் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் 26.04.1977 ல் அமரத்துவம் அடைந்துவிட்டார் கொழும்பில் இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் தலைவருக்கான அஞ்சலிக் கூட்டம் ஒன்றினை இலங்கை அரசாங்க எழுது வினைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் அமிர்தலிங்கம் ஐயா எதிர்க்கட்சித்தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். யாழ்ப்பாணத்தில் ரஸ்ய சார்புக் கம்யூனிஸ்ட் எண்ணக்கருவை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வளர்த்து அரசியல் செய்து தந்தை செல்வாவிற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்ட வி.பொன்னம்பலம் என்பவர் அஞ்சலி உரையாற்றும்போது தனது வாக்கை தனக்கெதிராகப் போட்டியிட்ட தந்தை செல்வாவுக்கே அளித்து அவரை வெற்றிபெறச் செய்தார் என்னும் தலைசிறந்த பொய்யை மேடையில் பதிவு செய்ததையும்.
தந்தை செல்வா இறப்பதற்கு முன் எதிர்வரவுள்ள 1977 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கான வேட்பாளர் நியமனத்தை இரா.சம்பந்தனுக்குத்தான் கொடுக்க வேண்டும் எனத் தன்னிடம் கூறிமறைந்தார் என அமிர்தலிங்கம் பொய்யுரைத்து, மூதூரில் உள்ள வைத்தியர் வீட்டில் வைத்து தந்தை செல்வா “சம்பந்தன் நம்பத்தகுந்தவர் அல்ல” என்று சொன்னதை மறந்து அரசியலில் வாய்ப்புக் கொடுத்த விடயங்களை எல்லாம் கனகர் கிராமம் உறுதியாகப் பதிவு செய்திருப்பது வரலாறுகள் எவ்வாறு அரசியலில் இலாப நோக்கம் கொண்ட தலைவர்களால் திசைமாறியது என்பதை நிறுவிநிற்கிறது. இவ்வாறு பல சம்பவங்களை வாசித்தறியலாம்.
வயலை உழவு செய்து கொண்டிருக்கும் உழவு இயந்திர சாரதி தனக்குத் திருப்தியில்லாத போது உழவு இயந்திரத்தைப் பின்னோக்கிச் செலுத்தி மீண்டும் அந்த இரும்புக் கலப்பையை ஆழப்பதித்து முன்னோக்கி இழுத்து திருப்திகரமாக உழவு செய்வதுபோல் கனகர் கிராமம் நாவலில் சில அத்தியாயங்களில் உள்ள பத்திகளை வாசித்து உழுதேன் என்றுதான் சொல்லவேண்டும் அரசியல் பரப்பில் மக்களை மேய்ந்த பல கால்நடைகளின் உண்மைகள் வெளிக்கிளம்பியது அதிர்ச்சியைத் தந்தது.
அவற்றை வாசித்த பின்னர் ‘ஹைலைற்’ பண்ணி அடையாளம் இட்டு நாவலை மூடிவைத்துவிட்டு திரு கோபாலகிருஸ்ணன் அவர்களைக் கைபேசியில் தொடர்பு கொண்டு சில இடங்களைச் சுட்டிக்காட்டிக் கலந்துரையாடினேன். இந்த எழுதியுள்ள விடயங்கள் சந்தர்ப்பங்கள் மேற்கோள்கள் அனைத்தும் உண்மைதானா என வினவினேன். வந்த பதில் எழுதியுள்ளேன் யாராவது பிழை என்றால் பொய் என்றால் மறுத்து எழுதட்டுமே என்பதாக அமைந்திருந்தது அந்தப் பதில் என்னைத் தூக்கி எறிந்து கீழே போட்டது. மட்டுமல்ல எனக்கு ஒரு தைரியத்தைத் தந்ததுடன் கோபாலகிருஸ்ணன் தொடர்பான எனது புலக்காட்சியை மேலும் புடம் போட்டுச் சென்றது.
லண்டனில் இருந்து நாவலுக்கான முன்னீடு ஒன்றை எழுதிய அரங்கம் பத்திரிகையின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான திரு.பூபாலரெத்தினம் சீவகன் அவர்கள் குறிப்பிட்ட பின்வரும் பகுதி மீண்டும் எனக்கு ஞாபகத்தில் வந்தது.
“இந்த நாவலை அவர் (கோபாலகிருஸ்ணன்) வாராவாரம் எழுதிக்கொண்டிருக்கும்போது அரங்கம்; பத்திரிகைக்கு வந்த கடிதங்கள் மின்னஞ்சல்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த வாசகருடையவை. தாமறியா தம் மாவட்ட விடயங்களைக் கோபாலகிருஸ்ணன் ஆராய்ந்து அறிந்து எழுதியதை அவர்கள் சிலாகித்து எழுதியிருந்தனர். அவரோடு அரசியலில் முரண்படும் பலரும் கனகர் கிராமத்தில் மூழ்கிப்போய் இருந்தனர். உண்மையில் அவர் கனகர் கிராமத்தில் குறிப்பிட்டுள்ள சர்ச்சைக்குரிய விடயங்களுக்குக் கூட எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை”
திரு. கனகரெத்தினம் அவர்கள் தேர்தல் அரசியலை விரும்பாதவர் தமிழ் அரசுக்கட்சியில் நாட்டம் இல்லாதவர். ஒரு வர்த்தகராகவும் தொழில் அதிபராகவும் சமூக ஆன்மீக சேவையாளராகவுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இயல்பாகவே நலிவுற்ற மக்களுக்குச் சமுதாயப்பணி செய்வதில் வேட்கை கொண்டவர் (pயளளழைn) என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் நாவலாசிரியர், கனகரெத்தினம் அவர்களைத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளராக்கி வெற்றிபெற வைத்து மக்களுக்கான பணியைத் தொடர்ந்து காத்திரமானதாக்கப் படாதபாடுபட்டிருக்கிறார். புத்திசாதுரியமான இளைஞனாக இருந்த கோபலகிருஸ்ணன் கட்சியின் வரலாறை அறிந்து தர்க்கரீதியாகக் கருத்துரைத்துத் தமிழரசுக்கட்சி இப்போது போலவே அப்போதும் புதியவர்களை மாற்றுச் சிந்தனையாளர்களை உள்நுழைய விடாது கட்சியைச் சுற்றி அமைத்திருந்த இரும்பு வேலியை உடைத்துக் கனகரெத்தினம் அவர்களை வேட்பாளராக்கி இருக்கிறார்.
இதற்கு அமரர் அரியநாயகத்தின் தம்பிலுவில் வீட்டின் முற்றத்தில் நின்ற பெரிய மாமர நிழலில் நடைபெற்ற கூட்டத்தில் சிந்தாத்துரை என்னும் மூத்த உறுப்பினரைத்தனது நாவன்மையால் கோகுலன் என்னும் கோபாலகிருஸ்ணன் சின்னாபின்னமாக்கிய நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது.
அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய அரை மணிநேரம் மயில்வாகனம் கனகரெத்தினத்தின் புகழ்ச்சிப்புராணம் பாடிய கோகுலன் என்னும் கோபாலகிருஸ்ணனில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்து இவர் கனகரெத்தினம் என்பவரால் வழிநடத்தப்படுகிறாரோ என்பதுதான் அந்தச் சந்தேகம்.ஆனால் எனக்கு அதற்கும் விடை கிடைத்தது.
நாற்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் துப்பாக்கிச் சூட்டில் தப்பிப்பிழைத்து கொழும்பு மருதானை சுலைமான் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவந்த கனகரெத்தினம் அவர்களைக் குறுக்கு விசாரணைப் பாணியில் வினாவித் துளைத்த சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனூடாக கோகுலன் என்னும் கோபாலகிருஸ்ணனின் நடுநிலையையும் தூய தமிழ் உணர்வையும் அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
அனுபவமுள்ள ஆளுமையுள்ள ஆற்றல் உள்ள அரசியல்வாதிகள்கூட சிலவேளைகளில் மக்கள் மறதிக்காரர்கள் என்றும் மடையர்கள் என்றும் நினைத்துக் கொண்டு கொப்பிழக்கப் பாய்ந்து விடுகிறார்கள் எனக் குறிப்பிட்டு இருப்பது இப்போது போலவே அப்போதும் சுத்துமாத்து அரசியல் இருந்துள்ளதைக் காட்டுகிறது.
குறிப்பிட்டுக் கூறுவதானால் கனகர் கிராமம் அரசியல் சமூக வரலாற்று நாவல் துணிச்சல் மிக்க சொல் வீச்சுக்களால் நிறைந்துள்ளது. இளையோர் இதனை வாசிப்பதனூடாக ஒரு மிக பெரிய அழகியல் உணர்வையும் அரசியல் உணர்வையும் புதுப்பித்தக் கொள்ள முடியும் என்பதுடன் இந்த நாவல் ஒரு அரசியல் வெற்றிடத்தையும் காண்பிக்க முனைகிறது. விமர்சனச் சிந்தனை ஊடாக அரசியல்வாதிகளையும் அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்னும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.
சீனாவில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் பற்றி அறிந்தேன். அதன் பெயர் ‘தாவோ’. 87 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும் இதை ஒரு தத்துவப் புத்தகம் எனக்கூறுகிறார்கள். சி.மணி என்னும் கவிஞர் அதைனை நீண்டகால முயற்சியில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.
சுருக்கமாக அதைக் கூறுகிறேன். ஒரு குயவன் ஒரு பானையைச் செய்து கொண்டிருக்கிறான் அதனுடைய வாயின் மேற்பரப்பை – விளிம்பை உறுதியாக்குகிறான் அழகாகத் தடிப்பமாகச் செய்கிறான். விளிம்பின் வெளிப்பகுதியில் அலங்காரங்கள் எல்லாம் செய்கிறான். அவ்வளவு நுணுக்கமாக நுட்பமாக பானையின் வெளிப்புறத்தை அலங்கரித்தாலும் நாம் பயன்படுத்தப் போவது பானையின் உள்ளே இருக்கும் வெற்றிடத்தைத் தானே. வெற்றிடம் வெற்றிடமாகவே இருக்கிறதே.
தமிழ்த்தேசிய அரசியலும் சில வெற்றிடங்களைக் கொண்டிருக்கிறது. வெளியில் அலங்கரிப்புக்கள் நடைபெறுகிறது அலங்கரிப்புக்கள் பயன்பாட்டுக்கானதல்ல என்பதை எத்தனை அரசியல் வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஒரு வினாவாகத் தொடுக்கிறது கோபாலகிருஸ்ணனின் ‘கனகர் கிராமம்’ நாவல்.
எனக்கு இந்த வாய்ப்பை நம்பிக்கையோடு வழங்கிய மதிப்பு மிகு கவிஞர் எழுத்தாளர் அரசியல் இலக்கிய விமர்சகர் அரசியல் ஆய்வாளர் தேசப்பற்றாளர் என பன்முக ஆளுமைகளைத் தனக்குள்ளே கொண்டிருக்கும் திரு.செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் அண்ணன் அவர்களுக்கு இதய பூர்வ நன்றிகள்.
![]()