இலக்கியச்சோலை

இடையறாத எழுத்துப் பணியில் ஐங்கரன் விக்கினேஸ்வரா !… கவிஞர். க.குவேந்திரன்

(சமகால சர்வதேச விவகாரங்களை அலசி ஆராய்ந்து எழுதும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் அகவை நாளான ஜூலை 2 இல் கவிஞர். க.குவேந்திரன் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகிறது)

அண்ணளவாக 40 வருடங்களாகத் தமிழ் பேசும் எழுத்துலகில் அறியப்பட்ட ஒருவரைப் மீண்டும் எவ்வாறு புதிதாக அறிமுகம் செய்துவிட முடியும். அண்ணனாக , நண்பனாக , ஏதோவொரு உறவுநிலைக்குள் அடங்குபவனாக , வைத்தியராக , எழுத்தாளராக , படைப்பாளியாக , சமூக நலன்சார் செயற்பாட்டளராக என திரு ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களை பல்வேறு வகைகளில் இதுவரை அறிந்திருக்கக் கூடும்.

ஆனால் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் எழுத்துகளே, அவரை எதுவாக நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் அதுவாகவே அவரை இச் சமூகத்திற்கும் உலகிற்கும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்ய வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி நிற்கின்றன. ஓர் எழுத்தாளனின் ஒவ்வொரு புதிய படைப்புகளின் போதும் அவன் புதிதாகப் பிறப்பெடுக்கின்றான். அதனால் தான் படைப்புகள் படைக்கப்படுகிற ஒவ்வொரு தடவையும் படைப்பாளனை நாம் அறிமுகம் செய்ய வேண்டியிருக்கிறது.

தேச விடுதலை நோக்கிய பயணத்தின் இடையறாத நீட்சியின் இயங்குநிலையிலுள்ள எழுத்துப் போராளிகளில் ஒருவராகவே திரு ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் எழுத்துகள் அவரை ஒவ்வொரு தடவையும் எனக்கு அறிமுகம் செய்கின்றன. அப்படியாகத் தான் நான் அவரை உங்களுக்கும் இன்று அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.


பென்னம் பெரிய வானத்தின் கவனத்தை ஓர் நொடியில் தன் பக்கம் ஈர்க்கும் ஓர் பறவையின் சிறகசைப்பைப் போல திரு ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் தன் எழுத்தின் அசைவியக்கத்தினால் தமிழ்ப் பேரினத்தின் கவனத்தைத் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறார்.

ஒரு சொல் அதன் செயலினால் வசீகரிக்கப்படுவதை உறுதிசெய்தபடி தனது சொல் வன்மையினால் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு வலுச்சேர்க்கும் தனது எழுத்துப் பணியை இடையறாது ஆற்றிக் கொண்டேயிருக்கிறார். தேச விடுதலைக் கனவினை முன்னிறுத்தி முந்நகர்ந்த வழித்தடங்களில் இவருடைய பாதங்களும் பதிந்திருந்தன.
ஆன்மாவை ஆழ ஊடுறுவும் கவிதைகளின் வாயிலாக அப்பயணத்தை இடையறாது பற்றிக்கொண்டவர் கல்லறை தெய்வங்களின் ஆன்ம பலம் சேர்த்து
இன விடுதலைக்காய் போராடிய / போராடிக் கொண்டிருக்கின்ற உலகின் தேசிய இனங்களின் வரலாற்று வழித்தடங்களை அலசி ஆராயந்து எங்கள் முன் நிறுத்தி எமது விடுதலைப் பயணத்திற்கான வாசகங்களை வரிசை கட்டி நிற்கச் சொல்கிற சொல்லுருவாக்கியாக இன்றளவும் செயலாற்றிக் கொண்டிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன்.

1980 களின் இறுதிப் பகுதியிலிருந்து இந்நாள் வரைக்குமான பயண நீட்சியில் 33 புத்தகங்கள் படைக்கப் பட்டிருக்கின்றன எனும் செய்தி 33 தடவைகள் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் புதிதாகப் பிறந்திருக்கிறார் என்பதாகவே அர்த்தம் கொள்கிறது. 33தடவைகள் புதிதாகப் பிறப்பது என்பது அத்தனை தடவைகளும் இறந்து போகும் படியான எத்தகையதான இன்னல்களை அவர் அனுபவித்திருப்பார் எனும் செய்தியாகி அவரை ஆரத் தழுவிக்கொள்ளச் செய்கிறது. இன்னும் அவர் தனது படைப்புகளைப் பிறப்பித்துக் கொண்டேயிருக்கப் போகிறார் எனும் செய்தி தான் இன்னும் இன்னுமாய் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.


புலம்பெயர்ந்துள்ள கட்டடக் காடுகளின் இயந்திர நெரிசலுக்குள் இருந்தபடி இந்த உலகத்தின் அவலங்களுக்கு எதிரான உற்று நோக்கும் கூர்மைத்திறனை ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் கண்கள் எவ்வாறு பெற்றன? இனவிடுதலை தேடும் தேசிய இனங்களின் தேசிய கீதங்களைக் கிரகிக்கும் ஆற்றலை இவர் காதுகள் எவ்வாறு பெற்றன?
காண்பதையும் கேட்பதையும் ஆராய்ந்து தினசரி கட்டுரைகளாய் எழுதிக் கொண்டிருக்க இவர்
கைகளால் மட்டும் எப்படி முடிகிறது ?
எனும் கேள்விகள் என்னைத் துளையிட்டுக்கொண்டிந்த போது, நெஞ்சில் இனவிடுதலைத் தீயெழுந்து எரியும் ஒருவனால் தானே இவ்வளவு நேர்த்தியாகச் தன் இனம் சார்ந்து சமூகம் சார்ந்து இயங்க விட முடியும் என்கிற பதிலே துளைகளில் இசையாக என்னை நிறைத்து நிற்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button