முச்சந்தி

மே தினக் கூட்டம் நடத்த அரச தரப்புக்கு யாழ் நெடுந் தூர பஸ் நிலையத்தை இலவசமாக வழங்கிய மாநகர சபை முதல்வர்

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நடத்துவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடாது , யாழ்ப்பாணம் நெடுந் தூர பஸ் நிலையத்தினை மாநகர சபை முதல்வர் வழங்கியுள்ள விடயம் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மே தின கூட்டம் யாழ்ப்பாண நெடுந்தூர பஸ் நிலையத்தில் கடந்த மே முதலாம் திகதி நடைபெற்றது.

இந்த பஸ் நிலையத்தில் மே தின கூட்டம் நடத்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் 27.04.2026ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்ப்பாண மாநகர முதல்வரிடம் அனுமதி கோரி உள்ளார்.

அதில் , மே முதலாம் திகதி அன்று மாலை 3.30 மணி முதல் இரவு 07 மணி வரையில் மே தின கூட்டத்திற்காக நெடுந்தூர பஸ் நிலையத்தினை பயன்படுத்த அனுமதிக்குமாறும் , கூட்டத்திற்கு வருகை தரும் மக்களுக்கான குடிநீர் வசதி மற்றும் மலசல கூட வசதிகளுக்கு பஸ் நிலையத்துடன் இணைந்த நீர்தாங்கி மற்றும் மலசல கூடங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறும் , இவற்றுக்காக மாநகர சபையினால் ,அறவீடு ஏதேனும் விதிக்கப்பட்டால் அவற்றை செலுத்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் , எவ்வித கட்டணமும் அறவிடாது பஸ் நிலையத்தினையும் அதனுடன் சேர்ந்த குடிநீர் வசதி மற்றும் மலசல கூடத்தை பயன்படுத்த முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை கூட்டத்திற்கு வருவோரின் மேலதிக குடிநீர் வசதிக்காக 1000 லீற்றர் குடிநீர் தாங்கி இரண்டு வைக்கப்பட்டு , அவற்றுக்கு தலா 2ஆயிரம் ரூபா வீதம் 4ஆயிரம் ரூபா வாடகை பணம் பெறப்பட்டதுடன் , குடிநீர் லீற்றர் ஒன்று 2 ரூபா வீதம் 2ஆயிரம் லீற்றர் 4ஆயிரம் ரூபாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான சேவை கட்டணமாக ஆயிரம் ரூபாவும் , இவற்றுக்கான பெறுமதி சேர் வரியாக 900 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மேதின கூட்டத்திற்கு வருகை தந்தோருக்கான குடிநீர் வழங்களுக்காக மாத்திரம் 9ஆயிரத்து 900 ரூபா மாநகர சபையால் அறவிடப்பட்டுள்ளது.

அவை தவிர பஸ் நிலைய வளாகம் பாவிக்கப்பட்டமை , பஸ் நிலைய குடிநீர் பாவிக்கப்பட்டமை , மலசல கூடம் பாவிக்கப்பட்டமை மற்றும் மறுநாள் பஸ் நிலைய வளாகம் மலசல கூட சுத்திகரிப்பு செலவு என்பவற்றுக்கு எவ்வித கட்டணமும் அறவிடாது , அதற்கான செலவீனங்கள் மாநகர சபையே பொறுப்பேற்றுக்கொண்டது.

அதேவேளை குறித்த நெடுந்தூர பஸ் நிலையம் மேதின கூட்டத்திற்கு வழங்கப்பட்டமையால் , பஸ் நிலையத்தில் இருந்து இரவு கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ் வேறு வேறு இடங்களில் நிறுத்தப்பட்டமையால் , அன்றைய தினம் கொழும்பு செல்ல வந்த பயணிகளும் பஸ்களை தேடி அந்தரித்து திரிந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button