வெங்கலக் குரலோன் விண்ணில் மறைந்தார்!… சங்கர சுப்பிரமணியன்


அன்றொரு நாள் மாலை ஆஸ்திரேலிய இலக்கிய கலைச் சங்க நிகழ்வொன்றில் அவர் எங்கள் அருகில் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. என் நினைவு சரியாக இருக்குமெனில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் என்று பரவலாக அறியப்படும் ATLAS அமைப்பு கவிதா மண்டலம் என்ற நிகழ்ச்சி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் நடத்தியது.
அன்று தலைவராக இருந்தவர் கவிதை என்றால் என்ன? கவிதை எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை விளக்கமாக தன் உரையில் எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கவிஞர்கள் தம் படைப்புகளான கவிதைகள் அல்லது பிற கவிஞர்களின் படைப்புகளான கவிதைகளை வாசித்து அந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர்.
இந்த நிகழ்ச்சி மெருகேறி வெற்றிபெற ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் முதுகெழும்பாக நின்று உழைத்தவர் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றவரும் பல நூல்களை வெளியிட்டவருமான புகழ்பெற்ற திரு லெ. முருகபூபதி அவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
அன்று நடைபெற்ற கவிதா மண்டல நிகழ்ச்சியில் ஒருவர் கவிதை ஒன்றை வாசித்தர். அது சாதாரண நான்கு ஐந்து சதுக்கங்களோடு வரும் கவிதை அல்ல. மிகவும் நீண்ட நெடுங்கவிதை. அந்ந கவிதையை அவர் ஏற்ற இறக்கங்களுடன் வெளிக்கொணர்ந்த முறை அபாரமானது. அதைவிட அவர் சிங்கமென கர்ஜித்தது
இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எல்லோராலும் கவிதை எழுத முடியும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. எதுகை மோனை, பொருள் போன்ற சங்கதிகளை கவிதை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். வீடுகட்ட அடித்தளம் அமைப்பது போல் இருக்க வேண்டும். எல்லோரும் வீடு கட்டினாலும் நான்கு சுவரும் கூரையும் இருப்பதெல்லாம் வீடாகாதல்லவா?
அதுபோல் சிலர் கவிதைகளை ஏற்ற இறக்கமுடன் சொல்லமுடியாது. சிலர் கவிதைகளில் பொருளிருக்காது. ஆனால் பதுக்கவிதைகள் கட்டுக் கடங்காத கட்டாற்று வெள்ளம்போல் சொல்லப்படும் உயர்ந்த கருத்துக்களால் மிகவும் உயர்ந்து விடும். அப்படி சொல்லப்பட்ட கவிதைதான் நண்பர் மறைந்த கலாநிதி திரு. கௌரிசங்கர் அவர்கள் வழங்கிய கவிதை.
அன்றே என் மனதில் ஒரு எண்ணம் உருவானது. தமிழை கர்ஜிக்கும் தொணியில் உச்சரித்தவிதம் இத்தகைய திறமைசாலியான ஒருவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தில் இணைந்து பயணித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. என் எண்ணம் நிறைவேறி அவர் அட்லஸில் இணைந்தார்.
அட்லஸ் உறுப்பினர்களில் எத்தனைபேர் தங்கள் குடும்பத்திலுள்ளோரை சங்கத்தில் இணைத்திருப்பார்கள் எனத் தெரியாது. என்னையும் சேர்த்தே சொல்கிறேன். ஆனால் அவர் தனது குடும்பத்திலுள்ளோரையும் சங்கத்தில் இணைத்தார். உறுப்பினராக இருந்ததோடு அல்லாமல் செயற்குழுவிலும் இணைந்து செயற்குழு உறுப்புனர் ஆனார்.
அவரது தளராத உழைப்பு அவரை ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயலாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது. அவர் சங்கத்தின் செயலாளராக இருந்து பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. ஒரு செயலாளர் என்றால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை நிலைநாட்டிக் காட்டினார். எந்த ஒரு செயலுக்கும் தூண்டுகோலாக ஒருவர் இருக்க வேண்டும்.
கலாநிதி திரு. கௌரிசங்கர் செயலாளராக இருந்த காலத்தில் இவ்வாறு தூண்டுகோலாக இருந்து செயலாற்றினார். இவர் சங்க கூட்டங்களை அறிவிக்கும் முறையிலாகட்டும் சங்க கூட்டங்கள் நடக்கும்போது அதை குறிப்பெடுப்பது ஆகட்டும் தனி கவனம் செலுத்தினார். அதோடு மட்டுமின்றி ஆவணப்படுத்துவதிலும் சிறந்து விளங்கினார்.
அவர் சங்கத்தில் இணைந்த நாளில் இருந்து தொய்வின்றி இயங்கியது பாராட்டுதற்குரியது. இவர் செயலாற்றுவதில் காட்டிய முனைப்பு இவர் நம்மை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டார் போலிருக்கிறதே என்று எண்ணுமளவுக்கு இருந்ததை எல்லோரும் அறிவர். ஆஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் இணைந்து பணியாற்றியதை பெருமையாக நினைத்ததை அவர் செயல்பாடுகளே கூறிற்று.
இத்தகைய பண்புகளைக் கொண்ட திரு. கௌரிசங்கர் அவர்களை இழந்தது தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாகும். அவரது இழப்பு இனிமேல் சங்கத்தில் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதாலும் நமக்கு ஒரு இழப்பாகும். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்களுக்கு இந்த எதிர்பாராத இழப்பை தாங்கும் மனவலிமையையும் கிடைக்க இயற்கைப் பேரருளை வேண்டுவோம்.
மண்ணிலிருந்து விண்ணில் மறைந்தாலும் மண்ணில் வாழும் நம் மனதில் அவரது பண்பால் வாழ்வார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
![]()