இலக்கியச்சோலை
நவீன கவிதை உலகின் ஒளிவிளக்கு அணைந்தது!… செங்கை ஆழியானின் மகள் ரேணுகா பிரதீப்குமார் …. ஐங்கரன் விக்கினேஸ்வரா

தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்திய துயரச் செய்தியாக, எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் மூத்த மகளும், கவிஞரும், எழுத்தாளருமான சித்த மருத்துவர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் நேற்று இலங்கையில் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியின் (A/L 1988) முன்னாள் மாணவியான அவர், தந்தையின் இலக்கிய மரபைத் தொடர்ந்து தனது தனித்துவமான எழுத்துப் பாணியால் தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியவர். அவரது மறைவு, குடும்பத்தினருக்கு மட்டுமன்றி தமிழ் இலக்கிய உலகிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தமிழ் மீது பிறந்த காதல்
தமிழாசிரியையாகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற தாயின் அரவணைப்பில் வளர்ந்ததால், சிறுவயதிலிருந்தே தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் படைப்புலகம் ஆகியவற்றோடு அவருக்கு ஆழமான பிணைப்பு உருவானது. அதனுடன், புகழ்பெற்ற எழுத்தாளரான செங்கை ஆழியான் அவர்களின் இல்லச் சூழல், இலக்கியத்தை வாழ்வின் ஒரு அங்கமாகக் காணும் மனப்பாங்கை உருவாக்கியது.தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாண இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலை மற்றும் உயர்கல்வியை யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியிலும் சிறப்பாக நிறைவு செய்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடத்தில் பட்டம் பெற்று சித்த மருத்துவராகப் பணியாற்றினார். தொடர்ந்து இலங்கை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சித்த மருத்துவராக சேவையாற்றி, மருத்துவப் பணியையும் இலக்கியப் பணியையும் இணைத்துச் சென்ற அரிய ஆளுமையாக விளங்கினார்.
அவரது கணவர் டாக்டர் கணேசன் பிரதீப்குமார் ஆங்கில மருத்துவத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது இலக்கியப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தார் என்பதை அவர் எப்போதும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தின் பல முகங்கள்
“உங்கள் ரேக்கா” என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரவலாக அறியப்பட்ட அவர், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக தொடர்ந்து தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பகிர்ந்து வந்தார். சிறுகதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், நவீனக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், பயணக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், மேற்கோள்கள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வந்தார்.
தமிழ் இலக்கியம் தொடர்பான ஏராளமான காணொளிகளை வெளியிட்டு, புதிய தலைமுறையினரிடையே தமிழை விரிவாக எடுத்துச் சென்ற பன்முகப் படைப்பாளியாகவும் திகழ்ந்தார்.
டாக்டர் ரேணுகா பிரதீப்குமார், தமிழ் இலக்கியத்தில் தன்முனைக் கவிதைகளை
எழுதிய முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டார். அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களிடம் பயின்று, தன்முனைக் கவிதைகளில் பட்டயம் பெற்ற முதல் தொகுதி ஆய்வு மாணவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
எழுதிய முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டார். அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களிடம் பயின்று, தன்முனைக் கவிதைகளில் பட்டயம் பெற்ற முதல் தொகுதி ஆய்வு மாணவர்களில் ஒருவராக உயர்ந்தார்.அந்தப் பயிற்சிக் காலத்தில் எழுதிய கவிதைகளே பின்னர் “காத்திருக்கும் வண்ணமயில்” என்ற அவரது முதல் நூலாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
மரபுக் கவிதை நோக்கிய பயணம்
விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற காரணத்தால் மரபிலக்கணத்தை முறையாகப் படிக்காதிருந்த போதிலும், அதை கற்றறிய வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் அவருக்குள் எப்போதும் இருந்தது.
அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம் நடத்திய மரபுக் கவிதைப் பட்டயப் பயிற்சியில் கலந்து கொண்டு, பேராசிரியர் பாவலர் முதற்பாவலர் அவர்களின் வழிகாட்டுதலில் வெறும் இருபது மாதங்களில் மரபுக் கவிதைகளை எழுதும் திறனைப் பெற்றார்.
அந்தப் பயணத்தின் பலனாக உருவான “தூரிகா” என்ற அவரது முதல் மரபுக் கவிதை நூலை, தனது ஆசிரியருக்கே குருதட்சணையாக அர்ப்பணித்தார். இது அவரது பணிவு, நன்றியுணர்வு மற்றும் இலக்கியப் பற்றை வெளிப்படுத்தும் அரிய நிகழ்வாகும்.
அவரது முக்கிய படைப்புகளாக

அர்ப்பணா, காத்திருக்கும் வண்ண மயில் (தன்முனைக் கவிதைகள்),
தூரிகா (மரபுக் கவிதைகள்),
செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புலகமும் போன்ற இலக்கிய படைப்புகளை படைத்துள்ளார்.
இந்த நூல்கள் அவரது கவிதை ஆளுமையையும், ஆய்வுப் பார்வையையும், தமிழ்ப்பற்றையும் வெளிப்படுத்துகின்றன.
தன்முனைக் குழுமத்தின் செயலாளராகச் செயற்பட்ட அவர், பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.அவரது எழுத்துகள் வெறும் கவிதைகளாக மட்டுமல்ல; தன்னம்பிக்கை, பெண்மையின் ஆற்றல், சமூக விழிப்புணர்வு, மொழிப்பற்று மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் சிந்தனைகளாகவும் அமைந்தன.
என்றும் வாழும் நினைவு
சித்த மருத்துவத் துறையில் மனிதர்களின் உடலைக் குணப்படுத்தியவர்.இலக்கியத்தில் மனித மனங்களைத் தொட்டவர்; தமிழின் இனிமையை புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றவர்; தந்தையின் இலக்கிய மரபைச் சிறப்பாகத் தொடர்ந்து சென்றவர் – இப்படிப்பட்ட பன்முக ஆளுமையான டாக்டர் ரேணுகா பிரதீப்குமார் அவர்களின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்.
அவரது படைப்புகள், கவிதைகள், சிந்தனைகள், தமிழ் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை காலத்தைக் கடந்து வாழும். அவரது நினைவுகள் குடும்பத்தினரின் இதயங்களில் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய வாசகர்களின் மனங்களிலும் என்றும் நிலைத்திருக்கும்.
![]()