க.முருகதாசன் எழுதிய “அப்புவின் சால்வை” நூல் வெளியீட்டு விழா

வாசிப்பு என்பது சுவாசிப்பது போன்றது. நாம் மூச்சை எண்ணிக்கொண்டே வாழ்வதில்லை, ஆனால் அது நின்றுபோகும் நிமிடமே, உடல் முழுவதும் அதை உணரும்.
வாசிப்பும் அப்படித்தான். நின்றுபோனதை நாம் அறிவதே இல்லை,
அறிந்துக் கொள்ளும் போது, நேரம் கடந்துவிட்டிருக்கும்.
என் வீட்டில் வாங்கி, படிக்காமல், “அடுத்த வாரம் படிப்பேன்” என்று சொல்லி அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை
என் வயதைவிட அதிகம்.
ஆனால் இம் முறை இந்த நூலை நான் படித்தேத் தீருவேன் என்ற உறுதியுடன் இருக்கின்றேன். ஏனென்றால் தலைப்பே என்னை அலைக்கழிக்கின்றது.
“அப்புவின் சால்வை” இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் எத்தனை தலைமுறைகளின் வாசனை இருக்கின்றது?
ஒரு சால்வை என்பது வெறும் துணி அல்ல.
அது அப்பாவின் முதுகில்
சுமக்கப்பட்ட ஒரு நாட்டின் சுமை,
ஒரு குடிபெயர்வின் மௌனம்…
இன்னுமொருக் காரணம்
‘ஏலையா’ க.முருகதாசன்,
அவர் ஒரு நீண்டக் கால எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட.
அவர் எழுதியக் கட்டுரைகள் நான்
முன்பே வாசித்திருக்கின்றேன்,
அவருடைய வரிகள் ஒருபோதும் அலங்காரத்திற்காக மட்டும் இருக்காது, அவர் ஒரு வார்த்தையைக் கூட
வீணாக்க மாட்டார்.
ஒரு நடிகராக மேடையில்
இருக்கும் அதே கச்சிதம்,
அவருடைய எழுத்திலும் இருக்கும்.
ஒரு மனிதரால் இரண்டு கலைகளில் இவ்வளவு லாவகமாக இருக்க முடியுமா?
என்று நான் பல முறை ஆச்சரியப் பட்டிருக்கின்றேன்.
மேடையில், காமிராக்கு முன்னால்
அந்தக் கதாபாத்திரமாக மாறும் அவர்.
எழுத்திலும் ஒரு முழு
உலகத்தைக் கட்டமைக்கும்
திறன் உடையவர்.
இவருடையப் படைப்புகள் புலம்பெயர்
தமிழ் சமூகத்தின் பத்திரிகைகளில் மட்டுமல்ல, தாயகத்தின் பல பிரபல இதழ்களிலும் வெளியாகி வருகின்றன.
இப்போது இவருடைய சிறுகதைத் தொகுப்பு “அப்புவின் சால்வை”
நூலாக வெளிவருகின்றது.
நூல் வெளியீட்டு விழா
04.07.2026, மாலை 4 மணி
Kleinstädter-Bühne Sterkrade, Finanzstr. 1,
46145 Oberhausen
என்ற இடத்தில் நடை பெற இருக்கின்றது.

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருக்கின்றது.
இது ஒரு இலக்கிய நிகழ்ச்சி மட்டுமல்ல.
இது எம் மொழிக்கான ஒரு ஒன்றுகூடல்.
நம் முன்னோர்கள் தங்கள் மொழியை, தங்கள் கதைகளைப் பாதுகாக்க
உயிரையே கொடுத்தார்கள்.
போரில், குடிபெயர்வில்,
அவர்கள் இறுக்கிப் பிடித்தது
அவர்களின் மொழியை.
அவர்கள் உயிரைக் கொடுத்துப்
பாதுகாத்த அந்த மொழியை,
நாம் இன்று நம் பிள்ளைகளுக்கு
கொடுக்க மறுக்கின்றோம்.
உலகிற்கே நாகரீகம் சொல்லிக் கொடுத்த இனம் எம் இனம் என்பார்கள்,
ஆனால் இன்று நாம் களியாட்டங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எம் மூத்த மொழி தமிழுக்கு கொடுப்பதில்லை, என்பது கொஞ்சம் கவலைக்குரிய
விடயம் தான்.
நாம் சினிமா நடனம், பாட்டு நிகழ்ச்சிகளுக்கு போக டிக்கெட் வாங்குகிறோம், கைதட்டுகிறோம்,
படம் எடுத்து பகிர்கிறோம்.
அது நல்லதுதான்.
(தெனிந்திய🤔)ஆட்டமும் பாட்டும்
நம் கலாச்சாரத்தின் இரத்தம். 😉
அதை விடக் கூடாது தான்.🤪
ஆனால் அதே மதிப்பை நாம்
வாசிப்புக்கும் இலக்கியத்துக்கும்
ஏன் கொடுப்பதில்லை?
ஏனென்றால் வாசிப்பு என்பது
மேடையில் இல்லை.
யாரும் கைதட்டாத ஒரு செயல். அதனால்தான் அதை நாம் முதலில்
தியாகம் செய்கின்றோம்.
ஆனால் ஒரு சமூகம் தன் கதைகளை
எழுதி வைத்திருந்தால் உயிர்த்திருக்கும். கதைகள் இல்லாவிட்டால், நடனம் கூட
ஒரு வெற்று அசைவாக மாறிவிடும்.
ஒரு தலைமுறை தன் எழுத்தை மறுத்தால், அடுத்த தலைமுறை தங்கள் சொந்த மொழியில் ஒரு வரியைக் கூட எழுத முடியாமல் போய்விடும்.
அப்போது நம் பிள்ளைகள் தங்கள் தாத்தாவின் கதையைக் கேட்க,
ஒரு மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டியிருக்கும்.
அதனால் வாருங்கள். உங்கள் பிள்ளைகளைக் கூட்டி வாருங்கள். அவர்களுக்கு காட்டுங்கள்.
நம் கதைகள்
இன்னும் எழுதப்படுகின்றன,
இன்னும் சொல்லப்படுகின்றன,
இன்னும் உயிருடன் இருக்கின்றன, என்று.
அந்த அரங்கத்தை நிரம்பவைப்பது
நம் கையில்தான் இருக்கின்றது.
உங்கள் அலமாரியில் ஒரு நூலை அதிகமாக்குங்கள்.
ஆனால், இம் முறை, அதை திறந்தும் படியுங்கள்.
என்றென்றும் நட்புடன்
Sibo Sivakumaran ✍️

![]()