அரசின் கூலியாக வடக்கு ஆளுநர்; கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு துணை போகும் ஒரு கூலியாக செயற்படுகின்றார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நச்சு போதைப் பொருட்களை ஒழித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
போதைப் பொருள் விடயத்தில் வடக்கு, கிழக்கே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமாயின் அங்குள்ள முப்படையின் ஒத்துழைப்பும் அவசியமாகும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பானது யாழ்ப்பாணத்தில் ஒரு சிப்பாய்க்கு 14 பொதுமக்கள் என்ற அடிப்படையிலும் வன்னி மாவட்டத்தில் ஒரு சிப்பாய்க்கு இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில் ஆக்கிரமித்துள்ளனர். இராணுவத்தின் 20 பிரிவுகளில் வடக்கு, கிழக்கில் 16 பிரிவுகள் இருக்கின்றன. ஜனாதிபதி இராணுவத்தைப் பற்றி பெரியளவில் பேசினார். அவர்கள் போரை வென்றவர்கள் என்றும், அவர்களுக்கு கௌரவத்தை வழங்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் அந்த மக்களை அழித்துக்கொண்டிருக்கின்றது என்றால் இந்த அரசின் ஒத்துழைப்பு இன்றி அந்த விடயம் அங்கு நடக்க முடியாது. இந்த அரசாங்கம் இனவாத கோணத்தில் செயற்பாடாது என்று கூறினாலும். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கை இலக்கு வைத்து முன்னெடுத்த அதே பாணியிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது என்றே கூற வேண்டும்.
இதேவேளை 13ஆவது திருத்த விடயத்தில் பொலிஸ் சேவை மாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அங்கு நியமிக்கப்படும் பொலிஸ் அதிகாரி முற்றுமுழுதாக பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அடிபணிய வேண்டியுள்ளது. அந்த அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தின் கீழேயே செயற்பட வேண்டியுள்ளது.
அதேபோன்றே ஆளுநரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றார். ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரிலேயே அவர் இருப்பார். இவ்வாறான ஆளுநரின் கையிலேயே நிறைவேற்று அதிகாரம் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களும் ஆளுநருக்கு உதவுபவர்களாகவே இருக்கின்றனர். அங்கு அதிகாரங்களை செலுத்தும் நிலையில் இல்லை. வடக்கில் நடக்கும் விடயங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்க அதிபராக வேதநாயகத்தை சிறப்பான சேவகராக மக்கள் கருதினாலும் இப்போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டு ஆளுநராக ஜனாதிபதியின் விருப்பத்தை திருப்திபடுத்தவும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயற்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
அந்த ஆளுநர் வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளார். சாவக்கச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆளுநர் எந்தளவுக்கு இந்த அரசாங்கத்தின் மற்றும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணை போகின்றார். உண்மையின் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு அவர் ஒரு கூலியாக வேலை செய்கின்றார். அதுவே வடக்கில் நடக்கின்றது. ஆளுநர் ஜனாதிபதியின், அரசாங்கத்தின் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கிணங்க செயற்படுகின்றார். இதுவே உண்மை.
இந்த அரசாங்கம் மிகத் தெளிவாக போதைப் பொருளை பரப்புவதில் இருந்து வடகிழக்கில் வாழுகின்ற மக்களை அழிக்கும் வேலைகளையே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் இருந்த இனவாத அரசாங்கங்கள் முன்னெடுத்தவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. ஜனாதிபதி ஜனநாயகம் பற்றி வகுப்பெடுப்பதில் நேர்மாறாகவே வடகிழக்கில் அவரின் முகவராக எடுபிடியாக நியமிக்கப்படும் ஆளுநரை வைத்து செயற்படுகின்றது என்றார்.
![]()