செம்மணி அகழ்வைத் திசை திருப்ப முயற்சி; கோடீஸ்வரன் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வாராய்ச்சி, விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப் புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி.கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
செம்மணி மனிதப் புதை குழியில் இது வரை 412 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழினப் படுகொலை நடந்ததற்கான முக்கிய சாட்சியாகவுள்ளது.செம்மணி மட்டுமல்ல வடக்கு,கிழக்கில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்குகின்றது.செம்மணி விடயத்தில் அரசாங்கத்தின் நிதி மட்டும் போதாது நீதியும் வேண்டும். இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே வேண்டும். இந்தப்படுகொலைகளுக்கு இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியாகவுள்ளார். இந்தப் படுகொலையுடன் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளதால் உள்ளூர் விசாரணை மூலம் உண்மைகள் வெளிவராது,. எனவேதான் சர்வதேச பொறிமுறையுடனான விசாரணை அவசியமாகவுள்ளது
இது ஒரு அப்பட்டமான தமிழினப் படுகொலை.இவ்வாறான தமிழினப் படுகொலைகள் வடக்கு,கிழக்கில் பல இடங்களில் நடந்துள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி, விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள்மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயன்றார்கள்.
வடக்கு,கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி விசாரணை வேண்டுமென்றே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.
![]()