இலங்கை

88, 89 காலப் பகுதியில் நடந்த ஜே.வி.பியின் படு கொலைகள் குறித்தும் விசாரணை தேவை

நாட்டில் தற்போது துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப் பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக் கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும்நிலையில் ஜனாதிபதி அந்த போராட்டங்களை மறைக்கும்வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

. அதேநேரம் போதைப்பொருள் கைப்பற்றிய தொகையைும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019ல் நாங்கள் கைப்பற்றிய போதைப்பொருள் தொகையை விட குறைவாகவே இந்த அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் கைப்பற்றி இருக்கிறது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை சத்தம் போட்டுக்கொண்டு செய்கிறது. ஆனால் நாங்கள் எந்த பிரசாரமும் மேற்கொள்ளாமல் செய்துவந்தோம்.

அதேநேரம் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க பற்றி ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் 88, 89 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார்கள் . இவ்வாறு பலர் இந்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பேலியகொடை நகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரும் பாேதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த விடயத்தில் கட்சிகளின் பக்கம் கை நீட்ட வேண்டாம் .

இந்த காலப்பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதனால் ஜனாதிபதி ஒரு புதிய விடயம்போல் இதனை தெரிவிக்க முயற்சிக்கிறார். அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக்கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர் என்பதை நினைவூட்டுகின்றோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button