மாகாண சபை அதிகாரங்களை குறைக்க அரசு புதிய சட்டமூலம்; ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிறார் ஹக்கீம்

மாகாண சபை அதிகாரங்களை குறைக்கும் தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலத்தை அனுமதிக்க முடியாது. இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் மாகாண சபை அதிகாரங்களுடன் முரண்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்திற்கு பின்னர் அமைப்பு ரீதியான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. மாகாண சபைக்கான விடயங்கள் தொடர்பான ஒரு பட்டியலும் மத்திய அரசுக்கு ஒரு பட்டியலும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று நிழல் பட்டியல் ஒன்றும் ஒதுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களுடனும் நிழல் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களுடனும் முரண்படுகின்றன.
ஆனால் இந்த சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பினர் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு சட்டமா அதிபர் வந்து தெரிவிப்பதன் மூலம், அது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக கருதமுடியாது.
இவ்வாறானதொரு சம்பவம் நிதிக்குழுவில் அண்மையில் இடம்பெற்றது. அதாவது வெளிநாட்டு கடன் செலுத்தும் நடவடிக்கையில், தவறான வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணையின் போது, மத்திய வங்கி அதற்குப் பொறுப்பில்லை என ஆளுநர் தெரிவித்தார். பணப் பரிமாற்ற சட்டத்தின் ஒழுங்கு விதிகளில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டவர்கள். அதனால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை எனத் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவ்வாறு இல்லை என நான் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தினேன். சட்டமா அதிபர் திணைக்களம் அமைதி காக்கிறது. ஆனால் சட்டமா அதிபர் எப்போதும் உண்மையே கூறுகிறார். துரதிர்ஷ்டவசமாக இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படவில்லை. சிரேஷ்ட சட்டத்தரணிகள் கூட இது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலம் மாகாணசபைகளின் அதிகாரங்களுடன் முரண்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னர், மாகாணசபைகளின் நிலைப்பாட்டை கேட்கவேண்டும். ஆனால் மாகாணசபைகள் தற்போது இயங்காமல் இருப்பதால், ஆளுநர்களிடமாவது இது தொடர்பில் வினவி இருக்க வேண்டும். அவ்வாறு எதனையும் செய்யமால் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலத்தை நாம் எதிர்ப்போம் என்றார்.
![]()