உலகம்

சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரம் ; 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்து 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க்   தெரிவித்தார்.

சூடானில் ராணுவப் படைகளுக்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படை (RSF) அமைப்புக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீடித்து வரும் ஆயுத மோதல்களால் மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அண்மைய மாதங்களில் டிரோன் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் டிரோன் தாக்குதல்கள் தீவிரம் ; 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி | Drone Attack Intensify Sudan1 000 Civilians Killed

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற டிரோன் தாக்குதல்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

“சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், ஏற்கனவே நிலவும் கொடூரமான மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

மேலும், நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதலால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கடுமையான நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button