பலதும் பத்தும்

விஞ்ஞான உலகில் அதிர்ச்சி ; 24,000 ஆண்டுகள் உறைந்திருந்த புழு மீண்டும் உயிர்ப்பு

வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றங்கரையில், ‘யெடோமா’ (Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலத்தில் உறைந்திருந்த நுண்ணிய புழுவொன்றை ரஷிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் -20°C வெப்பநிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உறைந்திருந்த இந்தப் புழுவை ஆய்வகத்திற்கு கொண்டு சென்று, அதைச் சூழ்ந்திருந்த பனியை உருகவைத்தபோது, அது மீண்டும் உயிர்ப்பித்தது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உயிர்ப்பித்த புழு பின்னர் நகரவும், உணவு உட்கொள்ளவும் தொடங்கியுள்ளது. மேலும் ஆச்சரியமாக, அந்தப் புழு துணையின்றி இனப்பெருக்கம் (Asexual reproduction) செய்யத் தொடங்கியது.

அதன் மூலம் உருவான குட்டிப் புழுக்களும் எந்தவித குறைபாடுகளும் இன்றி இயல்பான அமைப்புடன் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரேடியோ கார்பன் ஆய்வுகளின் படி, இந்தப் புழு சுமார் 23,000 முதல் 24,000 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சில உயிரினங்கள் கடுமையான சூழ்நிலைகளை சமாளிக்க ‘Cryptobiosis’ எனப்படும் நிலையிற்குச் செல்கின்றன.

இந்நிலையில் அவற்றின் உடலியல் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

எனினும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்தும் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே முதல் முறையாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை சிலர் ‘ஸாம்பி புழு’ என குறிப்பிடினும், அறிவியல் ரீதியாக இது இறந்துவிட்ட உயிரினம் அல்ல மாறாக அதன் உயிரியல் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button