மீகொடவில் அறுவர் உயிரிழப்பு; அன்னதான வரிசையின் மீது வேண்டுமென்றே மோதினார்!; அதற்கு முன்பும் இருவரை மோதிய சாரதி

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிரைப் பறித்து ஏழு பேர் படுகாயமடையச் செய்தவர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் ‘கெப்’ வாகனத்தால் மோதிய இந்தக் கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்திருந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான வாடகை கார் சாரதி கைது செய்யப்பட்டு ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்குரிய வாடகை கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் அந்த நாள் நள்ளிரவு வரை அவிசாவளை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவளை- கொழும்பு பிரதான வீதியில் கொழும்பை நோக்கி அதிவேகமாகச் சென்றுள்ளனர்.
மயக்கமடையும் அளவுக்கு மது அருந்தியதாக கூறப்படும் சந்தேகநபர் வழியில் மேலும் இருவரை மோதிவிட்டு, அதிவேகமாக வாகனத்தை செலுத்திச்சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் மீகொட சந்திப்பில் ரொட்டி தன்சல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போக்குவரத்து நெரிசலைக்கண்டு, கடும் கோபமடைந்து, அந்த தன்சல் வரிசையில் காத்திருந்த மக்கள் மீது வேண்டுமென்றே வாகனத்தை அதிவேகமாக மோதிச்சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் குழு துரத்திச்சென்று கொடகம சந்திப்பில் பிடித்துள்ளனர்.இதன்போது அவர் போதையில் சுயநினைவின்றி சிரித்துக்கொண்டே இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த காரணத்திற்காக வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தை தவிர்க்க தவறியமை, அஜாக்கிரதையாக வாகனம் செலுத்தல், அதிவேகமாக வாகனம் செலுத்தல் மற்றும் குடிபோதையில் இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
![]()