தங்கத்துரை, குட்டிமணியின் சிலைகளுக்கு தடை போடாதீர்; செல்வம் எம்.பி.கோரிக்கை

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் சிலைகளை வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு தடை விதிப்பதானது வன்முறைகளை தூண்டுவதாகவே அமையும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் தொடர்பான தெரிவுக் குழுக்கள் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது செல்வம் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
83 கலவரம் எமது தமிழ் மக்களை மிக மோசமான முறையில் தண்டித்தது. அந்த தண்டனையூடாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களான தங்கத்துரை, குட்டிமணி உட்பட அவர்களுடன் இருந்த 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை ஜே.ஆர்.ஜயவர்தன காலத்திலேயே நடந்தது. அண்மையில் சிறைச்சாலையில் நடந்த கலவரம் சிறைக்குள்ளேயே நடைபெற்ற போதும், 83 காலத்தில் நடந்த சம்பவமானது வெளியில் இருந்து காடையர்களை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன சிறைக்குள் அனுப்பி அவர்களை கொலை செய்தார்.
இந்நிலையில் எமது இயக்கத்தின் ஸ்தாபகர்களாக தங்கத்துரை குட்டிமணி போன்றவர்களுக்கு வல்வெட்டித்துறையில் தனியார் காணியொன்றில் இரண்டு சிலைகளை அமைப்பதற்கு எமது இயக்கம் நடவடிக்கை எடுத்து வந்தது. இவ்வாறான நிலைமையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பொலிஸார் அதனை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்கள் சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தலைவர்களாகும். அவர்களின் சிலைகளை வைப்பதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். 83 கலவரமானது வரலாறாக இருந்து வருகின்றது. தங்கத்துரை குட்டிமணி போன்றவர்கள் நீதிமன்றங்களில் சிறப்பான உரைகளை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு சிலை வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பொலிஸாரால் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். 1989இல் இருந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றோம். இவ்வாறான கட்சியின் தலைவரின் சிலையை வைப்பதை தடுப்பது எவ்வாறான ஜனநாயக முறையாக இருக்கும். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடம் பேசும் போது அவர்களை பயங்கரவாத அடைப்படையில் பார்க்கக்கூடாது. அவர்களுக்கு சிலை வைப்பதற்கு ஆதரவு தருகின்றேன். அனைவரையும் அழையுங்கள் என்றும் கூறினார். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரும் கடிதம் கொடுத்துள்ளார். இந்த அரசாங்கம் போராட்டம் மூலமே வந்தது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடு ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.
அவர்கள் வன்முறையின் மீது காதல்கொண்டவர்கள் அல்ல. அவர்கள் சிறையில் கண்கள் பிடுங்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள். தமிழீழ விடுதலை இயக்கம் இது தொடர்பில் விசாரணைகளை கோரியது. அவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும். இப்போது நடந்த சிறைச்சாலை சம்பவத்தை விசாரிப்பது போன்று அன்று ஜே.ஆர்.காலத்தில் நடந்த ஆராஜகம் தொடர்பில் விசாரிக்க வேண்டும். இந்த இரண்டு மாபெரும் தலைவர்களுக்கான சிலைகளை வைப்பதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம். சிலைகள் வைக்கப்படுவது என்பது வன்முறைகளை தூண்டுவதல்ல. ஆனால் அதனை தடுப்பது வன்முறைகளை தூண்டுவதாகவும் போராட்டங்களாக மாறுவதாகவும் இருக்கும் என்றார்.
![]()