எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்: வயாவிளான் சந்தியில் 2 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்!, எங்கள் உரிமை எமக்கு வேண்டும்! என வலியுறுத்தி அடுத்த மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணி முதல் வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.வயாவிளான் சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
36 ஆண்டுகள் கடந்தும் வயாவிளான் கிராமத்தின் மையப் பகுதிகளான வயாவிளான் சந்தியும், ஊரின் அடையாளமாகத் திகழும் வயாவிளான் மானம்பராய்ப் பிள்ளையார் ஆலயமும் இன்னும் முழுமையாக மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. பலாலி விமான நிலையம் இயங்குவதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் முதல் பலாலி வரை அனுமதியுடன் போக்குவரத்து நடைபெறுகிறது. அப்படியிருக்க, மக்கள் காணிகள் ஏன் இன்னும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தால் தக்கவைக்கப்படுகின்றன?
காணி உரிமையும், ஊர் உரிமையும், வருங்காலச் சந்ததியினரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. எனவே, வயாவிளானைச் சேர்ந்த அனைத்து மக்களையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக தகவல்களுக்கு 0740290311 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
![]()